FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

நகைச்சுவைக்குப் பஞ்சம்!

இன்றைய எழுத்தாளர்கள் நகைச்சுவையை ஒதுக்கி விடாமல், தங்கள் படைப்புகளில் சிறிதளவேனும் நகைச்சுவை இடம்பெறும் வகையில் எழுதினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

Updated On : 28 ஜூலை 2026, 6:30 am IST
நகைச்சுவைக்குப் பஞ்சம் - பிரதிப் படம்
பகிர்:

கடந்த பத்து நாள்களாக கோவையில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. பொதுவாகவே, மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. அதனால் புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமையன்றுகூட கூட்டமே இல்லை. பல பதிப்பகத்தார்கள், கடந்தாண்டு வந்த கூட்டத்தில் பாதிகூட இல்லை என்று தெரிவித்தனர். நான் ஒரு நாள் முழுவதும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி என்ன மாதிரிப் புத்தங்கள் சந்தையில் இருக்கின்றன, எதனால் புத்தக விற்பனையில் இந்தப் பின்னடைவு என்று ஓர் ஆராய்ச்சியில் இறங்கினேன்.

பெரும்பாலான புத்தகங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களாக இருந்தன. நம் நாட்டுப் பதிப்பகங்கள் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும் அவற்றுக்கு அதிகம் வரவேற்பில்லை. வார நாள்களில் பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு என்ன புத்தகங்கள் வாங்குவது என்றே தெரியவில்லை; அவர்களுடன் வந்த ஆசிரியர்களோ மாணவர்களுக்கு வழிகாட்டாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

மாணவர்கள் ஒவ்வொரு கடையாகச் சென்று எல்லாப் புத்தகங்களையும் புரட்டிப் பார்த்து ஏதோ ஒன்றை வாங்கினார்கள். பெரியவர்களுமே திரும்பத் திரும்ப அதே புத்தகங்களைப் பார்த்துச் சலித்துப் போய் ஏதோ ஒன்றை வாங்கிவிட்டுப் போவதைப் பார்க்க முடிந்தது.

Advertisement

Advertisement

ஆங்கிலப் புத்தகங்களில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் எப்போதும் போல் அதிக அளவில் இருந்தன. அதைத் தவிர ஏராளமான புது வரவுகளும் இருந்தன. 'கிளாசிக்ஸ்' எனப்படும் பழம்பெரும் ஆங்கிலப் புதினங்கள் எளிமையாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தமிழ்ப் புத்தகங்களுக்கு வருவோம். மீண்டும் மீண்டும் 'பரமார்த்த குரு கதைகள்', 'அக்பர்- பீர்பால் கதைகள்', 'தெனாலிராமன் கதைகள்', 'ராமாயணம்', 'மகாபாரதம்' போன்றவையே வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பதிப்பகங்களின் வெளியீடுகளாகக் காணப்பட்டன. சுஜாதா, பாலகுமாரன், லக்ஷ்மி, சிவசங்கரி போன்றோரின் புதினங்கள் இருந்தன. சில பதிப்பகத்தார் சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் போன்ற பழைய எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து புதிய புத்தகங்களாக வெளியிட்டிருந்தார்கள்.

எல்லாக் கடைகளையும் சுற்றிப் பார்த்த போது எனக்குப் 'பளிச்சென்று' ஓர் உண்மை புலப்பட்டது. அங்கிருந்த புத்தகங்களில், குறிப்பாக, தமிழ்ப் புத்தகங்களில் 'நகைச்சுவை' என்பதே இல்லை! சிறுவர் நூல்களில்கூட அறிவுரைகளும், சாகசங்களும்தான் அதிகம் காணப்பட்டனவே தவிர நகைச்சுவையைக் காண முடியவில்லை. ஏன் இந்த நகைச்சுவைப் பஞ்சம்? எப்போதுமே தமிழில் நகைச்சுவைக்கு இடமில்லையா அல்லது இப்போதுதான் இந்த நிலையா? அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினேன்.

தமிழில் முதல் புதினமான 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற புத்தகத்தை கடந்தாண்டு இதே கோவை புத்தகத் திருவிழாவில் வாங்கியிருந்தேன். அதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். மிகவும் பழைய காலத்துப் புத்தகம்; 'வார்த்தைப் பயன்பாடு, கதையின் போக்கு ஆகியவை புரிந்துகொள்ளும்படியாக இருக்குமோ, இருக்காதோ', என்ற சந்தேகத்துடன் படிக்க ஆரம்பித்தேன். என்ன ஓர் இனிமையான ஆச்சரியம்! கதை நேராகப் போகாமல் ஏகப்பட்ட கிளைக் கதைகள்; ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்; ஏகப்பட்ட சம்பவங்கள். ஆனால், கடைசியில் அத்தனையும் ஒன்றாகக் கோக்கப்பட்டு மிக அற்புதமாக இருந்தது. சொற்கள் பழையனவாக இருந்தாலும் புரிந்துகொள்ள முடிந்தது.

கதையெங்கிலும் நகைச்சுவை பரவிக் கிடந்தது. நகைச்சுவை என்றால் வாய்விட்டுச் சிரிக்கும்படியான நகைச்சுவை அன்று; மெல்லிய புன்னகையை வரவழைக்கும் நகைச்சுவை! அடுத்ததாக, 'கமலாம்பாள் சரித்திரத்தை' எடுத்தேன். அதிலும் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், இன்று நாம் 'சொல்லத்தகாத வார்த்தைகள்' என்று ஒதுக்கி வைத்திருக்கும் பல வார்த்தைகளை மிகத் தாராளமாகப் பயன்படுத்தியிருந்தார் கதாசிரியர்!

அடுத்து புதுமைப்பித்தனைக் கையில் எடுத்தேன். அவரது கதைகளில் நகைச்சுவை அவ்வளவாக இல்லை. ஆனால், அவற்றில் இன்றும் நாம் பேசத் தயங்கும் சில கருத்துக்கள் எடுத்தாளப்பட்டிருந்தது சற்றே வியப்பூட்டியது. கல்கியின் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு ஆராயத் தொடங்கினேன். அவரது சிறுகதைகள் அனைத்திலும் அற்புதமான நகைச்சுவை இழையோடியது.

'பொன்னியின் செல்வன்' ஐந்து பாகங்கள் கொண்ட மிகப் பெரும் சரித்திரப் புதினம். அதில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் வரும் இடங்கள் எல்லாம் நகைச்சுவை பொங்க உள்ளன. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் இருக்கும்போது உன்மத்தம் கொண்டு பேசும் உரையாடல்களில்கூட 'வஞ்சப் புகழ்ச்சியைப்' பயன்படுத்தி நகைச்சுவையைக் கொண்டு வந்திருக்கிறார்.

'சிவகாமியின் சபதம்' சோக மயமான புதினம். அதிலும்கூட, 'குண்டோதரன்' என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அவன் மூலம் நகைச்சுவையைப் புகுத்தியுள்ளார். இது சற்றே வலியத் திணிக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், கதையுடன் ஒட்டி, நம்மைச் சிரிக்க வைக்கிறது. 'அலை ஓசை' சோக ரசம் சொட்டும் சமூகப் புதினம். ஆனால், அதில் உரையாடல்கள், சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு சோகத்திலும் நம்மைப் புன்னகைக்க வைக்கிறார் கல்கி. அவரது எழுத்து நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை; ஆனால், மெல்லிய புன்னகையைச் சிந்த வைத்தது!

பிறகு வந்த எழுத்தாளர்களைப் பார்ப்போம். பாக்கியம் ராமசாமியின் 'அப்புசாமி-சீதாப்பாட்டி' கதைகளில் நகைச்சுவை ரசிக்கும் வகையில் இருந்தது. வர்ணனைகளையும் உரையாடல்களையும் நகைச்சுவை ததும்ப சுஜாதா எழுதி வந்தார். 'கணேஷ்- வசந்த்' துப்பறியும் கதைகளில் அறிவுபூர்வமான கதைப் போக்கில் வசந்த்தின் கதாபாத்திரம் நகைச்சுவையாகப் பேசி கலகலப்பூட்டியது உண்மை. ஆனால், போகப்போக வசந்த்தின் பேச்சு நல்ல நகைச்சுவை என்பதைத் தாண்டி வேறு வகையில் மாறிப் போனது.

அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. விறுவிறுப்பு, பிழிந்தெடுக்கும் சோகம், துணுக்குத் தோரணங்கள் இவற்றின் வழியாகவே தமிழில் புத்தகங்கள் எழுதப்பட்டன. அவ்வப்போது ஒரு சிலர் நகைச்சுவை நிறைந்த சிறுகதைகள் எழுதினார்கள் என்றாலும், நகைச்சுவையில் கண்ணியம் சற்றே குறைந்ததை மறுக்க முடியாது.

ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக் கொண்டால், பெரியவர்களுக்கான நூல்களாகட்டும், சிறுவர்களுக்கான நூல்களாகட்டும், புதினங்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், எல்லாவற்றிலும் நகைச்சுவை ஒரு மெல்லிய இழையாக இருப்பதைக் காண முடிகிறது. பதிப்பகங்கள், பழம்பெரும் புதினங்களைச் சிறுவர்களுக்கென எளிமைப்படுத்தி வெளியிடும் போது, நகைச்சுவை குன்றாமல் வெளியிடுவதால் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

இந்தப் புத்தகத் திருவிழாவில் 'த்ரீமென் இன் அ போட்', 'டாடி லாங் லெக்ஸ்', 'ஆன் ஆஃப் கிரீன் கேபிள்ஸ்' போன்ற புத்தகங்கள் எளிமைப்படுத்தப்பட்டு சிறுவர் நூல்களாக இருந்தன. மூலக்கதையில் இருந்த வர்ணனைகள் குறைக்கப்பட்டு நகைச்சுவை அப்படியே எடுத்தாளப்பட்டிருந்ததால் ரசிக்கும்படி இருந்தன. அதிக பிரதிகள் விற்பனையாயின.

ஏன் தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதில்லை? நகைச்சுவை என்பது அறுசுவைகளில் ஒன்றல்லவா? இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், மன அழுத்தம் மிகுந்த சூழலில் வாய்விட்டுச் சிரிக்க வேண்டியது மிகவும் அவசியமல்லவா? அதிலும் சிறுவர் நூல்களில் நகைச்சுவை கட்டாயம் இருக்க வேண்டும். விருதுபெற்ற நூல்கள் பலவற்றைப் படித்துப் பார்த்தேன். பெரும்பாலும் சோகத்தைப் பிழிந்தெடுக்கும் நூல்களே விருது பெற்றிருக்கின்றன. ஏன் நகைச்சுவை நூல்கள் விருதுகள்பெறுவதில்லை? அவை நம்மைச் சிரிக்கவும் வைத்துச் சிந்திக்கவும் வைக்கின்றனவே.

மேலே குறிப்பிட்ட ஆங்கிலப் புத்தகங்கள் எளிமையாக்கப்பட்டு வெளியிடப்பட்டு விற்பனையும் ஆகும்போது, தமிழில் 'பிரதாப முதலியார் சரித்திரம்', கல்கியின் புதினங்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களை நகைச்சுவைக் குன்றாமல் எளிமையாக்கம் செய்து வெளியிட்டால் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும்.

இந்தப் புத்தகத் திருவிழாவில், ஒரு பதிப்பகத்தார், புது முயற்சியாக ஆங்கிலப் புதினங்களைத் தமிழில் மொழிபெயர்த்து எளிமையாக்கமும் செய்து வெளியிட்டிருந்தார்கள்; தமிழ்ப் புதினங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எளிமையாக்கமும் செய்து வெளியிட்டிருந்தார்கள். அந்த வகையில் 'பொன்னியின் செல்வன்' எளிமையாக்கப்பட்டு ஆங்கிலத்திலும்,

'தி ஜங்கிள் புக்ஸ்' எளிமையாக்கப்பட்டு 'ஒரு காடும் பல கதைகளும்' என்று தமிழிலும், 'தி இன்விஸிபிள் மேன்' எளிமைப்படுத்தப்பட்டு 'உருவமில்லாத மனிதன்' என்று தமிழிலும் வெளியிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இவை நகைச்சுவை கலந்த 'கிளாசிக்ஸ்' என்பதால் பலரும் விரும்பி வாங்கியதைப் பார்க்க முடிந்தது. சித்திரக் கதைகளில் நகைச்சுவையை எளிதாகக் கொண்டு வரமுடியும். புகழ்பெற்ற 'டின்டின்' கதைகள் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது மகிழ்ச்சி தரும் விஷயம். இன்றைய எழுத்தாளர்கள் நகைச்சுவையை ஒதுக்கி விடாமல், தங்கள் படைப்புகளில் சிறிதளவேனும் நகைச்சுவை இடம்பெறும் வகையில் எழுதினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments