பசுமைக் கேடயம்: அலையாத்திக் காடுகள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண்காடுகள் திட்டத்தில் ஒரு பகுதியாக அலையாத்திக் காடுகள் திட்டங்களுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண்காடுகள் திட்டத்தில் ஒரு பகுதியாக அலையாத்திக் காடுகள் திட்டங்களுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள அலையாத்திக் காடுகள் திட்டத்தில் மிஸ்டி ஸ்கீமில் இருந்து தமிழக அரசுக்கு, மத்திய அரசு தனது பங்கீட்டுத் தொகையாக ரூ .160 கோடியைத் தரும். ஆக, தமிழ்நாட்டில் அலையாத்திக் காடுகள் திட்டத்துக்கு 200 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியபோது, மிக அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நாகை மாவட்டத்தில் ஏற்பட்டன. சுமார் 5 ஆயிரம் பேர் ஆழிப்பேரலையின் தாக்குதலில் பலியானார்கள். அப்போது வெளியான இயற்கை ஆர்வலர்களின் கட்டுரைகள் அனைத்தும் சுட்டிக்காட்டிய ஒன்று 'மாங்ரோவ் பாரஸ்ட்' என்று சொல்லப்படும் அலையாத்திக் காடுகளைத்தான்.
Advertisement
Advertisement
கடலுக்கும் நிலப்பரப்புக்கும் இடையே இயற்கை அமைக்கும் அரண் அல்லது பாதுகாப்பு பசுமைக் கேடயம்தான் அலையாத்திக் காடுகள்.
கடல் மனிதனுக்கு உணவு கொடுக்கிறது. வாழ்வாதாரம் கொடுக்கிறது. மழைச் சுழற்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே கடல், சில நேரங்களில் புயலாகவும், சுனாமி என்கிற ஆழிப்பேரலையாகவும், கடலோரஅரிப்பையும் ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் கடலுக்கும் மக்களுக்கும் இடையே ஓர் இயற்கையான பாதுகாப்புச்சுவர் - இந்த அலையாத்திக் காடுகள்தான் கடலும் நிலமும் சந்திக்கும் இடத்தில், அலைகள் வந்து செல்லும் உவர்நீர் சூழலிலும் வளரக்கூடிய மரங்கள் மற்றும் புதர்களின் தனித்துவமான சூழல் அமைப்புதான் மாங்குரோவ். இவற்றின் வேர்கள் நீரின் வேகத்தைக் குறைத்து, சேறு மற்றும் படிவங்களைப் பிடித்துவைத்துக் கொள்வதால் கடலோர மண் அரிப்பைக் குறைக்கவும், கரையை நிலைப்படுத்தவும் உதவுகின்றன.
மண்ணில் ஒவ்வொரு மரமும் தனிச்சிறப்பு கொண்டவை. அது வேப்ப மரம் என்றாலும், புங்கை, நுணா, ஆல், அரசு எதுவென்றாலும் அவற்றுக்கென ஒரு பயன் மற்றும் இயற்கையின் தேவை இருக்கிறது. ஆனால், மாங்குரோவின் சிறப்பு வேறானது. அது கடலுக்கும் நிலத்துக்கும் இடையே வாழ்கிறது. தினமும் அலைகள் வந்து செல்லும் சூழலையும், உவர்நீரையும் தாங்கி வளர்கிறது. அதன் சிக்கலான வேர்களுக்கு இடையில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்கின்றன. பல கடல்வாழ் உயிரினங்களுக்கு மாங்குரோவ் பகுதிகள் உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கத்துக்கான முக்கிய இடங்களாக உள்ளன. ஓர் அலையாத்தி மரத்தைக் காப்பது ஒரு கடலோர உயிரியல் உலகத்தையே காப்பது ஆகும் .
கடலோரப் பகுதிகளுக்கு புயல், அலைகள் மற்றும் கடலோர அரிப்பு போன்றவை மிகப்பெரிய சவால்கள். மாங்குரோவின்அடர்த்தியான வேர்அமைப்பு அலை மற்றும் நீரோட்டத்தின் தாக்கத்தைக் குறைத்து, கரையோரத்தை நிலைப்படுத்த உதவுகிறது. தமிழ்நாட்டின் காலநிலைச் செயல்திட்ட ஆவணங்களிலும் மாங்குரோவ் காடுகள் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்கான முக்கியப்பகுதிகளாகவும், கடலோரப் பகுதிகளுக்கு இயற்கைப் பாதுகாப்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
உலகம் இன்று காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொண்டு வருகிறது. எல்நினோ போன்ற கடல் வளிமண்டல நிகழ்வுகள் உலகின் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 2026-ஆம்ஆண்டில் வலுவான எல்நினோ உருவாகி தீவிரமடையும் என உலக வானிலை அமைப்பு அண்மையில் தெரிவித்துள்ளது.
எல்நினோவை ஒரு மாங்குரோவ் காடு தடுக்காது. ஆனால், கடலோரச் சூழல் மாற்றங்களின் போது, கேடுகளைத் தடுத்து நிறுத்தும்.
மாங்குரோவ், கடலோர ஆப்ன்ங் இஹழ்க்ஷர்ய் அமைப்புகளில் ஒன்றாகும். இவை வளிமண்டலத்தில் உள்ள கார்பனை உறிஞ்சி சேமிக்கின்றன; குறிப்பாக கடலோர மண் மற்றும் உயிரியல் அமைப்புகளில் நீண்டகாலமாக கார்பன் சேமிக்கப்படக்கூடியது.
மாங்குரோவ் பாதுகாப்பின் பயன் சுற்றுச்சூழலுக்கு மட்டும் அல்ல. கடலோர மக்களின் வாழ்வாதாரம் கடலுடன் நேரடியாக இணைந்துள்ளது. மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பான வாழ்விடமாக மாங்குரோவ் செயல்படுவதால், அதைப் பாதுகாப்பது மீன் வளத்துடனும் கடலோர சமூகங்களின் நீண்டகால வாழ்வாதாரத்துடனும் தொடர்புடையது.
கரையோர அரிப்பைக் குறைத்தல், புயல் மற்றும் அலை தாக்கங்களுக்கு இயற்கையான தடுப்பு வழங்குதல், பல்லுயிர் வளத்தைப் பாதுகாத்தல், கார்பனை சேமித்தல் என ஒரே சூழல் அமைப்பு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
-ஆர்.எஸ்.
ஜூலை 26: உலக அலையாத்திக் காடுகள் தினம்
இந்தியாவில் சுமார் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அலையாத்திக்காடுகள் உள்ளன. இதில் 42 சதவீதம் மேற்கு வங்க மாநிலத்தில், சுந்தரவனம் பகுதியில் அமைந்துள்ளது. அடுத்ததாக குஜராத் மாநிலத்திலும், அந்தமானிலும் உள்ளன .
மகாராஷ்டிரம், ஓடிஸா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் 45 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே அலையாத்திக் காடுகள் காணப்படுகிறது. இதில் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டையில் அதிக அளவில் அலையாத்திக்காடுகள் அமைந்துள்ளன.
சர்வதேச அளவில் அலையாத்திக் காடுகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஜூலை 26-ஆம் தேதியை உலக அலையாத்திக்காடுகள் தினம் என யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
ஒரே முதலீடு பல தலைமுறைகளுக்குப் பயன்...
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள உய்யாலிகுப்பம் கிராமத்தை ஒட்டிய பகுதியில் மாங்குரோவ் காடு உருவாக்கும் பணியை டாமூகா ஃபவுண்டேஷன் மற்றும் ஃப்ரண்ட் மீடியா ஃபெடரேஷன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் ஒப்புதலுடன் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், சுமார் 20 ஆயிரம் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவற்றைப் பராமரிக்கும் பணிகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் எண்ணிக்கையில் மட்டும் இல்லை. 20 ஆயிரம் கன்றுகள் நாளை ஒரு காடாக வேண்டும். அந்தக் காடு நாளை ஓர் உயிரியல் மண்டலமாக வேண்டும். அந்த உயிரியல் மண்டலம் ஒரு கடலோரப் பாதுகாப்புக் கவசமாக வேண்டும். இதுதான் இந்த முயற்சியின் உண்மையான அளவுகோல்.
ஃப்ரண்ட் மீடியா ஃபெடரேஷன் முன்னெடுத்துவரும் ஒருகோடி மரம் என்ற பசுமை இயக்கத்தின் ஒரு பகுதியாக உய்யாலிகுப்பம் மாங்குரோவ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த இயக்கம் சார்பில் இதுவரை சுமார் 35 லட்சம் மரக்கன்றுகள் பல்வேறு பகுதிகளில் நடவுசெய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக நிறுவனர் முருகபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் மீ .ராசா ஆகியோர் கூறுகின்றனர்.
இவர்கள் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்குவதுடன், அவற்றை வளர்க்கத் தேவையான உதவிகளும் வழிகாட்டுதல்களும் வழங்குகிறார்கள். இத்திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி மட்டுமின்றி, பெருநிறுவனங்களும் சமூகப் பொறுப்பேற்பு நிதியில் இருந்து மரங்கள் வளர்க்க நிதி தருகின்றன.
சுற்றுச்சூழலைக் காப்பது அரசு அல்லது ஒருதனி அமைப்பின் பொறுப்பு மட்டுமல்ல. அது சமூகப் பொறுப்பு. உள்ளூர் மக்களால் அந்தச்சூழலைப் பாதுகாக்க முடியும். இப்படி அனைவரும் இணைந்தால்தான் ஒருமரக்கன்று உண்மையான சுற்றுச்சூழல் சொத்தாக மாறும்.
சுற்றுச்சூழல் திட்டங்களின் வெற்றியை எத்தனை கன்றுகள் நடப்பட்டன? என்ற ஒரே எண்ணிக்கையில் அளக்கமுடியாது. எத்தனை உயிருடன் வளர்ந்தன? எவ்வளவு பரப்பளவு உண்மையான பசுமையாக மாறியது? எத்தனை உயிரினங்களுக்கு வாழ்விடம் உருவானது? எத்தனை கடலோரப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டன? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் ஒருதிட்டத்தின் உண்மையான வெற்றி என்கிறார் முருகபாண்டியன்.
உய்யாலிகுப்பத்தில் நடப்பட்ட 20 ஆயிரம் மாங்குரோவ் கன்றுகளின் கதை, ஒரு மரக்கன்று நடும் நிகழ்ச்சியின் கதை அல்ல. இன்று நடப்படும் கன்றுகள் நாளை கடலையும், கரையையும், உயிரையும் காக்கும் ஓர் இயற்கைக் கேடயமாக மாறவேண்டும் என்ற முயற்சியின் கதை.
காலநிலை மாற்றத்தை ஒரே நாளில் மாற்ற முடியாது. கடலைக் கட்டுப்படுத்தமுடியாது. புயலை நிறுத்த முடியாது. ஆனால், இயற்கை நமக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு அமைப்புகளை அழிக்காமல் பாதுகாக்கவும், அழிந்த இடங்களில் மீண்டும் அவற்றை உருவாக்கவும் முடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.