டி.கே.சி. 
தினமணி கதிர்

புள்ளிகள்

ஒருமுறை தில்லிக்கு ரசிகமணி டி.கே.சி. சென்றிருந்தார். அவரை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தனது வீட்டுக்கு விருந்தினராக அழைத்திருந்தார்.

தினமணி செய்திச் சேவை

ஒருமுறை தில்லிக்கு ரசிகமணி டி.கே.சி. சென்றிருந்தார். அவரை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தனது வீட்டுக்கு விருந்தினராக அழைத்திருந்தார். நேருவின் வீட்டுக்கு டி.கே.சி. 'ஓட்ஸ் சாதம்' பொங்கிக் கொண்டு சென்றிருந்தார்.

'ஓ... நீங்கள் மிகவும் ஆசாரம் போலிருக்கிறதே?' என்று நேரு

கூறினார்.

'இல்லை.. .இல்லை... நான் ஆசாரமே இல்லை. எனக்கு வகை, வகையான ஆகாரங்கள் சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என் வயிறு இருக்கிறதே? அதுதான் ஆசாரம்' என்று டி.கே.சி. பதில் அளித்தார்.

தனக்கு சர்க்கரை நோய் இருப்பதை நகைச்சுவையாக வெளிப்படுத்திய டி.கே.சி.யைப் பார்ந்து அங்கிருந்தோர் வியந்து பாராட்டினர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி

ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்களில் ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவை உணர்வு இருக்கும். உதாரணத்துக்கு ஒன்று.

அவர் தனது நண்பர் ஏ.கே.கோபாலபிள்ளைக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி:

'மும்பையில் நான் இருப்பது அதிசயமாக இருக்கலாம். தங்களுக்கு உண்மையில் அதிசயம்தான். நானாக இங்கு வரவில்லை. ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரி திருச்சியில் 20.10.1946-இல் நடைபெற்றது. அதற்காக என்னை அழைத்தனர். நானும் சென்றேன். கச்சேரி முடிந்ததும் ரயிலில் தூக்கிப் போட்டார்கள் எம்.எஸ்ஸூம், சதாசிவமும். மறுநாள் காலை 7 மணிக்கு சென்னையை அடைந்தோம். அப்படியே 10 மணிக்கு ஆகாய விமானத்தில் தூக்கிப் போட்டார்கள். சாயங்காலம் 4 மணிக்கு மும்பையில் இறக்கினார்கள். இதுதான் நான் மும்பை வந்த கதை' என்று கூறப்பட்டிருந்தது.

(தொ.மு.பாஸ்கர தொண்டைமான் ஐ.ஏ.எஸ். எழுதிய 'ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள்' எனும் நூலில் இருந்து)

'தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரத்தநாடு அருகே கண்ணங்குடி கிராமம் உள்ளது. அந்த ஊரிலேயே கீழையூர், மேலையூர் என்று இருந்தது. மேலையூர் கிராமம் மொத்தமும் ஒரு வேளாளருக்குச் சொந்தமானது. அது 'இனாம்தாரி'. கீழையூரானது ஒரு 'ரயத்வாரி'.

'இனாம்தாரி' என்பது மன்னர்கள் காலத்தில் எதையாவது பாராட்டி, ஒரு மனிதருக்கு பத்து ஊர், நூறு ஊர் என இனாமாக அளிக்கப்படும் நிலம். அதற்கு 'இறையிலி' எனும் பெயரும் உண்டு. 'ரயத்வாரி' என்பது அரசுக்கு வரி கட்டும் குடிகள் வசிக்கும் ஊர். மேலையூரில் விவசாயத் தொழிலாளர்களாக இருந்தவர்கள் அந்த வேளாளரை விரட்டுவதற்காக, கீழையூரைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துக் கொள்ள இருவரும் ஒன்றானார்கள். தொழிலாளர்களாக இருந்து அதிகாரம் பெற்ற ஊர் கண்ணந்தன்குடி கீழையூர்' என்று விழா ஒன்றில், முன்னாள் எம்.பி. எல். கணேசன் கூறினார்.

'விண்வெளிக்குச் செல்லும் முன் பல்ஆரோக்கியம் கவனிக்கப்படும். விண்வெளிக்குச் செல்லப் பயிற்சி பெறும்போது, என்னுடைய கடவாய் பற்கள் அகற்றப்பட்டன. எந்தவொரு அவசர நிலையையும் அல்லது சூழ்நிலைகளையும் கவனித்துக் கொள்ள மருத்துவ ரீதியாகப் பயிற்சி அளிக்கப்படும். ஏனெனில், அங்கு மருத்துவ உதவிகள் கிடைக்காது.

நாம் செய்ய முடியாத ஒன்று, பல் அறுவைச் சிகிச்சை. எனவே, விண்வெளிக்குப் புறப்படும் முன்னர் பயணிப்போருக்கு எந்தவொரு பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்கின்றனர். என் இரண்டு கடவாய் பற்கள் அகற்றப்பட்டன. பிரசாந்த் நாயரின் மூன்று பற்கள் அகற்றப்பட்டன. பிரதாப்பின் நான்கு பற்கள் அகற்றப்பட்டன.' என்று மும்பை ஐ.டி.ஐ. யில் நடைபெற்ற விழாவொன்றில், கேப்டன் சுபான்ஷூ சுக்லா கூறினார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

திரைப்படத்தைப் பார்த்து வீரபாண்டிய கட்டபொம்மனின் வயது 50-க்கு மேல் இருக்கக் கூடும் என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் கட்டபொம்மனின் வயது 39. அவர் பிறந்தது 3.1.1760. தூக்கிலிடப்பட்ட நாள் 16.10.1799.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேல்பூரி

அதெல்லாம் ஒரு ஜாலிதான்... மமிதா பைஜூ!

கடைசி கிராமம்...

பிஞ்சுக் காய்கள்

தாய்மொழி என்றே சொல்லிடடா ...

SCROLL FOR NEXT