முகப்பு
தினமணி கதிர்

காதல் தேசம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் தலைநகரமான டென்வர் நகரில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் 'லவ் லேண்ட்' நகர் உள்ளது.

Updated On : 15 பிப்ரவரி 2026, 4:17 am IST
பகிர்:

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் தலைநகரமான டென்வர் நகரில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் 'லவ் லேண்ட்' நகர் உள்ளது.

1877-ஆம் ஆண்டில் இந்த ஊர் வழியாக ஒரு ரயில் பாதையை அமைத்த நிறுவனத்தின் தலைவர் பெயர் வில்லியம் லவ் லேண்ட். அவருடைய நினைவாகத்தான் இந்த ஊருக்கு 'லவ் லேண்ட்' என்று பெயர் சூட்டப்பட்டது. இங்கு பெயருக்கு ஏற்றவாறு, காதலர் தினம் 80 ஆண்டுகளாக மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் தங்கள் இணையருக்கான கடிதம் எழுதி, அதை ஒரு உறையில் போட்டு ஒட்டி முகவரியை எழுதி, அந்த உறையை இன்னொரு உறையில் போட்டு, 'லவ் லேண்ட்'டில் இருக்கும் தபால் அலுவலகத்துக்கு அனுப்புகின்றனர். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள், வெளிநாடுகளில் இருந்தும் கடிதங்கள் மூட்டைகளில் குவிந்துவிடும்.

Advertisement

Advertisement

அவற்றைப் பிரித்து, உள்ளேயிருக்கும் கடித உறையின் மீது 'லவ் லேண்ட் தபால் அலுவலகத்தின் காதலர் தின ஸ்பெஷல் முத்திரை'யைக் குத்தி, அதில் குறிப்பிட்டிருக்கும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனை 'வாலன்டைன் டே ரீ-மெயிலிங் புரோகிராம்' என்று குறிப்பிடுகின்றனர்.

150 நாடுகளில் இருந்து 1.5 லட்சம் தபால்கள்

1947-ஆம் ஆண்டில் லவ் லேண்ட் தபால் அலுவலக அலுவலர் டெட் தாம்சனிடம் 30 பேர் வந்து, 'இந்த ஆண்டு காதலர் தினத்தை வித்தியாசமாய் கொண்டாடுகிறோம். இதற்கு லவ் லேண்ட் தபால் முத்திரையோடு அனுப்பி வைக்க வேண்டும்' என்று கூறி, தங்கள் காதலர்களுக்கான வாழ்த்து அட்டைகளை அளித்தனர்.

இதை டெட் தாம்சனும், சக ஊழியர் எல்மரும் ஏற்க, லவ் லேண்ட் வர்த்தக சபையும் ஆதரவை அளித்தது. 'கொலராடோ மாகாணத்தில் உள்ள இனிய இதய நகரமான லவ் லேண்டின் இனிய காதலர் தின வாழ்த்துகள்' என்ற முத்திரையோடு, வாழ்த்து உறைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது முதல் ஆண்டுதோறும் காதலர் தினம் என்றால், லவ் லேண்ட் நகரமும், அங்குள்ள தபால் அலுவலகமும் பரபரப்புடன் இருக்கும்.

காதலர் தினத்துக்காக இங்கு வரும் தபால்களைப் பிரித்து, அவற்றுக்கு உள்ளே இருக்கும் வாழ்த்து அட்டைகள், கடிதங்களை சிறப்பு முத்திரையைக் குத்தி, மீண்டும் விலாசதாரர்களுக்கு அனுப்புவதற்காகவே 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஊதியமின்றிப் பணியாற்றுகின்றனர்.

அமெரிக்கவாசிகள் என்றால் ஒரு வாரம் முன்பாகவும், சர்வதேச தபால்கள் என்றால், ஜனவரி இறுதிக்குள்ளும் அனுப்பினால்தான் சிறப்பு முத்திரையோடு காதலர்கள் கையில் உரிய நேரத்தில் வாழ்த்துகள் போய்ச் சேர்கிறது. சுமார் 150 நாடுகளுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான காதல் கடிதங்கள், வாழ்த்துகள் அனுப்பப்படுகின்றன.

'மிஸ் லவ் லேண்ட் வாலன்டைன்'

காதலர் தினத்தையொட்டி, லவ் லேண்டுக்கு காதல் ஜோடிகளின் வருகையும் அதிகரிக்கிறது. கடைகளில் விதவிதமான பரிசுகளும் குவிந்துவிடும். இவற்றில் பிரபலமாக விற்பனையாவது காதலர் தின வாசகங்கள் கொண்ட மரத்தாலான இதய உருவம்.

1962-ஆம் ஆண்டு முதல் லவ் லேண்டின் வர்த்தக சபை நிர்வாகிகள் 'மிஸ் லவ் லேண்ட் வாலன்டைன்' என்ற அந்த அழகிப் போட்டியை நடத்துகின்றனர். அடுத்த ஒரு வருடத்துக்கு போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் அழகியே, நகரத்தின் நல்லெண்ணத் தூதுவராக இருப்பார். கல்லூரி மாணவிகள்தான் போட்டியில் பங்கேற்கிறார்கள் என்பதால், லவ் லேண்ட் நகரத்தின் சார்பில் அவர்களின் கல்லூரிப் படிப்புக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இசை, நடனத்துடன் நடைபெறும் 'ஸ்வீட் ஹார்ட்' திருவிழாவுக்கும் இவர்தான் சிறப்பு விருந்தினர்.

2026-ஆம் ஆண்டுக்கான காதலர் தின அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர் எல்லோரி ஆன் என்ற பள்ளி மாணவி. இவர் அஞ்சல் உறை மீது முதல் முத்திரை குத்தி காதலர் தின அஞ்சல் திருவிழாவைத் துவக்கி வைத்தார்.

கவிதைகள், வாசகங்கள் எழுதும் போட்டிகளையும் லவ் லேண்ட் வர்த்தக சபை நடத்துகிறது. காதலர்கள் மோதிரம் மாற்றி, திருமணம் செய்து கொள்ளவும் சிறப்பு சமூகத் திருமண நிகழ்வும் நடைபெறுகிறது. காதலர்கள் ஓட்டப்பந்தயம், குட்டீசுக்கான அழகுப் போட்டியும் உண்டு.

காதல் பூட்டு மையம்

லவ் லேண்ட் பார்வையாளர்கள் மையத்தில் 30 அடி நீளத்துக்கு 'லவ்' என்று பொறிக்கப்பட்ட சுவர் உள்ளது. காதலர்கள் ஒரு பூட்டை வாங்கி, தங்கள் பெயரைப் பதித்து, இந்த சுவரில் மாட்டிவிடுகின்றனர். அதன் மூலமாக தங்கள் காதல் உறுதிப்பட்டு, நீண்ட காலம் நிலைக்கும் என்பது நம்பிக்கை.

அந்தச் சுவர் முழுவதும் பூட்டுகளால் நிரம்பிவிட்டதால், இரண்டாவதாக ஒரு காதல் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. அந்த சுவருக்கு அருகில் ஒரு காதல் சுரங்கத்தின் உள்ளே விளக்கு அலங்காரமும், பனிக்கட்டி சிற்பங்களும் இருக்கும். காதலர்களுக்கு அதன் உள்ளே வலம் வந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, நெருக்கமாக நேரம் செலவிடுவது இனிமையான அனுபவம்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.