முகப்பு
தினமணி கதிர்

ஓய்வில்லா சமூகப் பணி!

ஓய்வெடுக்கும் வயதில், ஓய்வின்றி சமூக நலனுக்காகப் பணியாற்றி வருகிறார் எழுபத்து ஏழு வயதான கிரிகோரி.

Updated On : 7 ஜூன் 2026, 4:05 am IST
பகிர்:

ஓய்வெடுக்கும் வயதில், ஓய்வின்றி சமூக நலனுக்காகப் பணியாற்றி வருகிறார் எழுபத்து ஏழு வயதான கிரிகோரி. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'வாய்ஸ் டிரஸ்ட்' நிறுவனராக இவர், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சமூகச் சேவையில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவரிடம் பேசியபோது:

'மாணவப் பருவத்திலே சமூகச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மாணவராக இருந்தபோதே, நீர்நிலைகளைப் புனரமைத்தல், தாய்-சேய் நலன், விதவைகள் மறுவாழ்வு, பெண்கள் பாதுகாப்பு, சாதிப் பாகுபாடு உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளில் கவனம் செலுத்தினேன்.

1977-ஆம் ஆண்டு முதல் 1985 வரை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். 1985-இல் 'வாய்ஸ் டிரஸ்ட்' என்ற தன்னார்வ அமைப்பை நிறுவினேன். 1987 முதல் 1993-ஆம் ஆண்டு வரையில், நாமக்கல்லில் தனியார் நிறுவனத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றியபோதும், சமூகச் சேவைக்கு நேரம் ஒதுக்கி, பணிகளை மேற்கொண்டேன். 1993-இல், சிறுகனூரில் கோழிப்பண்ணையை நிறுவியதால், பணியைத் துறந்து முழு நேரமாக சமூகச் சேவையில் ஈடுபட்டேன்.

Advertisement

Advertisement

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஜி. நம்மாழ்வாருடன் இணைந்து 'இயற்கை வேளாண் இணையம்' என்ற அமைப்பை நிறுவி, விவசாயிகளுக்குப் பல பயிர் சாகுபடி, இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், நிலையான நடைமுறைகள் குறித்துப் பயிற்சியளித்தேன்.

தற்போது 150 இயற்கை வேளாண் இணையக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பத்து ஆண்டுகளில் 7,800 விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியுள்ளேன். 384 கிராமங்களில் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் கல்வி, பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய வேளாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்.

1998-ஆம் ஆண்டில் பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு , இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்னை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை அணுகினர். திருச்சி திருவானைக்கா பகுதியில் இருந்த மாநகராட்சிப் பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றத்தைத் தொடங்கினேன். 359 பள்ளிகளில் சுற்றுச் சூழல் மன்றங்கள் இயங்கி வருகின்றன. 250 பள்ளிகளில் 'தேசிய பசுமைப் படை'யை உருவாக்கியுள்ளேன்.பள்ளிகள், பொது இடங்களில் சுமார் 6.5 லட்சம் நாட்டு மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.

1999-ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனை, இயன்முறை சிகிச்சை, மறுவாழ்வு அளிப்பதில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளில் அறக்கட்டளை சார்பில் 444 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நிலையான வருமானம் ஈட்ட, தலா ஒரு ஆடு வழங்கியுள்ளோம்.

2006-இல் ஆதரவற்ற குழந்தைகளுக்காக திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட சிறுகனூரில் 'நட்பு சிறார் இல்லம்' என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இங்கு இதுவரையில் 87 பேர் தங்கி, தங்கள் கல்வியை முடித்து, பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர். தற்போது 37 குழந்தைகள் அறக்கட்டளையின் பராமரிப்பில் தொடர்ந்து படித்து வருகின்றனர்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், ஆதரவற்றக் குழந்தைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பராமரிப்பும் ஆதரவும் வழங்குதல், அவசரக் காலங்களில் பேரிடர் நிவாரணம் அளித்தல், குரல் பள்ளி, திறன் மேம்பாடு உள்ளிட்ட முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம். தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அறக்கட்டளைப் பெற்றுள்ளது.

சாமானியர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைக்க அதிகாரம் பெறும்போதுதான் உண்மையான வளர்ச்சி தொடங்குகிறது. விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கான கண்ணியம், சமத்துவம், நிலையான மாற்றம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பே எங்கள் பயணத்தை வழிநடத்தி வருகிறது'' என்கிறார் கிரிகோரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.