புள்ளிகள்
நீதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி இறந்துவிட்டார். அப்போது அவருடன் பணியாற்றுவோர் பலரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
நீதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி இறந்துவிட்டார். அப்போது அவருடன் பணியாற்றுவோர் பலரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். பின்னர், அவர்கள் வீடு திரும்பி உடையை மாற்றிக் கொண்டு மீண்டும் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
அப்படி அவர்கள் அங்கு வருவதற்கு முன்னரே நீதிபதி வருகை தந்து, வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்தார். இதைக் கண்டு வியந்தவர்களிடம், 'இது எனது தனிப்பட்ட துக்கம். தனிப்பட்ட பிரச்னை. எனது சுயநலத்தால் பொது
நலத்துக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது'' என்றார் அந்த நீதிபதி. அவர்தான் பம்மல் சம்பந்த முதலியார்.
Advertisement
Advertisement
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
'திருவிளையாடல்' பாடல் பாலமுரளியின் 'ஒருநாள் போதுமா?' பாட்டைத் திரையில் நடிகர் பாலையா வாயசைத்திருப்பார். ஆனால், பலருக்கும் பாலையாவுக்கு அபாரமான சங்கீதஞானம் உண்டு என்பது தெரியாது.
அவரது வீட்டில் ஒரு கிராம போன் கருவி இருந்தது. அதில், எம்.எஸ்., எம்.எஸ்.வி., டி.கே.பட்டம்மாள் போன்ற கர்நாடக இசைக் கலைஞர்களின் ஏராளமான இடைத்தட்டுகளைப் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
பாலையாவுக்கு கர்நாடக இசையில் மட்டுமின்றி, ஹிந்துஸ்தானி இசையிலும் ஈடுபாடு உண்டு. அவர் பீம்சேன் ஜோஷியின் ரசிகர். அவரைப் போலவே பாடக் கூடியவர். அதுமட்டுமல்லாமல், அந்தக் காலத்து வித்துவான்கள் பலர் பாலையாவின் நண்பர்கள். அவர்கள் நேரம் கிடைக்கும்போது, பாலையாவின் வீட்டுக்கு வந்து அவருடன் அளவளாவிக் கொண்டு இருப்பர். பாலையாவுக்கு நன்றாக கஞ்சிரா வாசிக்கத் தெரியும்.
மேலும், ஒரு சுவாரசியமான தகவல். தேர்ந்த கலாரசிகனாக பாலையா தன் மகளின் திருமணத்துக்கு காருகுறிச்சி அருணாசலத்தை ஏற்பாடு செய்தார். அவரது வாசிப்பில் லயித்து அகம் மகிழ்ந்த பாலையா, தனது சந்தோஷத்தின் மிகுதியில் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த மோதிரத்தைக் கழற்றி, காருகுறிச்சி அருணாசலத்துக்கு அணிவித்தார்.
மேனாட்டு எழுத்தாளர் டோபோல்ஸ்கி எழுதிய நூல் ஒன்றைப் படித்தேன். பெர்னாட்ஷா எழுதிய 'பிக் மாலியன்' எனும் நாடகம் 1953-ஆம் ஆண்டில் பெங்குவின் பதிப்பாக வெளிவந்தது. இந்த பிக் மாலியன் நாடகம் 1960-களில் 'மை ஃபேர் லேடி' எனும் பெயரில் 70 எம்.எம். இசைத்திரைப்படமாய் ஜார்ஜ் குக்கரின் இயக்கத்தில் ரெக்ஸ் ஆரிசன், ஆட்ரி ஹெப்பர்ன் நடிப்பில் சபையர் திரையரங்கில் திரையிடப்பட்டது.
இந்த நாடகத்தை பெங்குவின் நிறுவனம் மலிவு விலை நூலாக வெளியிடுகையில் பெர்னார்ட்ஷா தம் நெருங்கிய நண்பர் ஃபெலிக்ஸ் டோபோல்ஸ்கியின் கோட்டோவியங்கள் நூலில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறே இந்தப் பதிப்பில் டோபோல்ஸ்கி இந்த நாடக நூலுக்கனெ பிரத்யேகமாய் வரைந்த அதியற்புத கோட்டோவியங்கள் (108 படங்கள்) இடம்பெற்றன.
சென்னை மவுண்ட் ரோடில் (அண்ணா சாலை) உள்ள ஹிக்கின் பாதம்ஸில் எந்தப் பத்திரிகையையும், நூலையும் எடுத்துப் பிரித்து ஆற, அமர புரட்டிப் படிக்கலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இப்போது நிலைமை எப்படியோ? ஓரிரு சமயங்களில் அறிஞர் அண்ணா அங்கு வந்திருந்து நின்று புரட்டிப் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் முதல்வராக இல்லை. ஒருமுறை அப்போது வந்திருந்த புதிய 'லைஃப்' இதழ் அண்ணாவின் கையிலிருந்தது. அவர் பார்த்துவிட்டு வைத்தால், நாம் பார்க்கலாமென்று காத்து நின்று கால் வலித்து வெளியேறிவிட்டேன். மறுநாள்தான் பார்க்க முடிந்தது.
('வாழ்வின் சில உன்னதங்கள்' என்ற நூலில் எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதியது)
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
முதன்முதலில் அச்சில் ஏறிய பாரதியாரின் பாடல் 'தனிமை இரக்கம்' என்பதாகும். மதுரையில் இருந்து வெளிவந்த 'விவேகபானு' என்ற இதழில் 1904-ஆம் ஆண்டு நவம்பரில் இது வெளியானது.
சேலம் விஜயராகவாச்சாரியார், எவருடைய துன்பத்தைக் கண்டாலும் இளகிவிடும் உள்ளம் கொண்டவர். முதல் உலகப் போர் முடிந்தவுடன், ரஷியாவில் பஞ்சம் தலைவிரித்தாடி ஆயிரக்கணக்கானோர் பசியால் இறந்ததை அறிந்து, அவர் மனம் வருந்தினார். அவர் உடனே தம் பெயரில் இரு கப்பல்களில் அரிசியை ரஷியாவுக்கு அன்பளிப்பாக அனுப்பினார். இதற்கு ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகமும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியது.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.