FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சவாலே... சமாளி வீடுகள்!

இமாச்சல மலைப்பகுதியில் கட்டப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான வீடுகள் இயற்கையின் சவால்களைச் சமாளித்து காலம் காலமாக உறுதியாக இன்றைக்கும் நிற்கின்றன.

20 ஜூன் 2026, 9:56 pm IST
பகிர்:

இமாச்சல மலைப்பகுதியில் கட்டப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான வீடுகள் இயற்கையின் சவால்களைச் சமாளித்து காலம் காலமாக உறுதியாக இன்றைக்கும் நிற்கின்றன. இது கட்டட கட்டுமான நுட்பத்தில் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கப்படுகிறது.

'கத்-குனி' என்பது வட இந்தியாவின், குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் பழக்கத்தில் இருந்து வரும் பழமையான கட்டுமான நுட்பமாகும். கல் கட்டுமானத்தின் மூலைகளில் பூட்டப்பட்ட மர உத்திரங்கள்தான் இந்த பழமையான வீடுகளின் உறுதியின் ஆதாரம்.

வழக்கமான கட்டடங்களின் சிறப்பம்சமான செங்குத்துத் தூண்களுக்குப் பதிலாக, 'கத்-குனி' கிடைமட்ட உத்திரங்களின் மீது கட்டப்பட்டுள்ளது. குறுக்கும் நெடுக்குமான முட்டுக்கட்டைகள் முழு மரக் கட்டமைப்பையும் உருவாக்குகின்றன. இந்த நுட்பத்தில், உள்ளூரில் கிடைக்கும் மரமும் கல்லும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிமென்ட் இம்மி கூட பயன்படுத்துவது இல்லை. எந்தவிதமான பிணைப்புப் பொருளையும் பயன்படுத்துவது இல்லை.

Advertisement

Advertisement

சுவரின் ஒவ்வொரு அடுக்கிலும், கிடைமட்ட தேவதாரு மர உத்திரங்களுடன் கலந்து, தோராயமாக வெட்டப்பட்ட உள்ளூர் கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. கல்லின் எடையும், மர ஆப்புகளின் பிணைப்பும் கட்டமைப்பை உறுதியாக இறுக்கிப் பிடிக்கின்றன.

உருகும் பனி மற்றும் ஈரப்பதத்திலிருந்து கட்டடத்தைப் பாதுகாக்க, ஓர் உயரமான கல் பீடம் அமைத்து, அதற்கு மேல் வீட்டை அமைக்கிறார்கள். மர அடுக்குகள் கட்டடம் முழுவதும் நெகிழ்வுத் தன்மையை வழங்குகின்றன. கூரையில் நீர்ப்புகாமல் இருக்க 'சிலேட்' எனப்படும் கல் பாளங்கள் ஓடுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கிறது.

நிலநடுக்கம் இமயமலைப் பகுதியில் அதிகம் ஏற்படுகின்றன. 1905-இல் காங்ரா நிலநடுக்கம், 1991-இல் உத்தர்காசி நிலநடுக்கம், 2011-இல் சிக்கிம் நிலநடுக்கம் உட்பட பல கடுமையான நிலநடுக்கங்களை மலைப் பகுதிகள் சந்தித்துள்ளன. 'கத்-குனி' கட்டமைப்புகள் இந்த நிலநடுக்கங்கள் அனைத்தையும் பல நூற்றாண்டுகளாகத் தாங்கி நிற்கின்றன.

1905 காங்ரா நிலநடுக்கத்தின் போது, 'குலு' பள்ளத்தாக்கில் இருந்த 'கத்-குனி' வீடுகள் பாதிக்கப்படாமல் இருந்தன. ஆனால், அவற்றைச் சுற்றியிருந்த இதர கட்டடங்கள் இடிந்து விழுந்தன.ஒவ்வொரு அடுக்கிலும் மரங்களை இணைக்கும் மர ஆணிகள், மரத் தூண்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கச் செதுக்கப்படும் கைவினை வேலைகள் ஆகியவையே நிலநடுக்கத்தைத் தாங்கும் மிக முக்கியமான அம்சங்கள்.

கல், மர அடுக்குகளுக்கு இடையேயான அதிக உராய்வு ஒட்டுமொத்த நெகிழ்வுத் தன்மைக்கு கணிசமாகப் பங்களிக்கிறது. எளிமையாகச் சொன்னால், கட்டடம் முறியாமல் ஆடுகிறது. உடையாமல் சிதைந்து போகாமல் வளைந்து பிறகு தன் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறது.

கால்நடைகள் வீட்டின் கீழ்த்தளத்தில் தங்கவைக்கப்படுகின்றன. அதனால் கால்நடைகளின் உடல் வெப்பம் மேலேறி, வீட்டின் மேல் தளங்களை வெதுவெதுப்பாக்குகிறது. அடுத்த தளம் குளிர்காலத்துக்காக தானியக் களஞ்சியமாகச் சேமிக்கப்படுகிறது. குடியிருப்பு இடங்கள் மேல் தளங்களில் அமைந்துள்ளன.

மேல் தளம், குளிர்காலத்தில் வெப்பமாகவும், கோடையில் காற்றோட்டமாகவும் இருக்கும். 'கத்-குனி' கட்டுமான தொழில் நுட்பம், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பயிற்சிகளின் மூலம் கடத்தப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும், விரைவான நகரமயமாக்கலும், கான்கிரீட் எளிதில் கிடைப்பதும் அந்த பாரம்பரிய கட்டுமான அறிவுக்கு ஆபத்தாக மாறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments