முகப்பு
தினமணி கதிர்

சருகிலும் சம்பாதிக்கலாம்...

'பிளாஸ்டிக், பேப்பர் மாதிரியான கப்புகள் வர ஆரம்பித்ததோ, அன்றையிலிருந்து வாழைத் தொன்னைக்கு மவுசு இல்லை.

பகிர்:

சுஜாதா மாலி

'பிளாஸ்டிக், பேப்பர் மாதிரியான கப்புகள் வர ஆரம்பித்ததோ, அன்றையிலிருந்து வாழைத் தொன்னைக்கு மவுசு இல்லை. பயன்படுத்தியவுடன் இது மக்கும். எரித்தாலும் பூமிக்கு உரம்தான். ஆனால், பிளாஸ்டிக் கப்புகளால் ஊர் முழுவதும் குப்பை சேர்ந்து, சுற்றுப்புறச் சூழல் சீர்கெட்டதுதான் மிச்சம்'' என்கிறார் தொன்னைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் மூன்றாவது தலைமுறையாளரான ராஜேந்திரன்.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பிரதான புறவழிச்சாலையில் மையமாக இருக்கிறது தியாகராஜபுரம். இங்கு சாலையின் இருபுறமும் வாழை இலைகள், வாழைத் தார்கள், குலை வாழை மரங்கள் முதலானவற்றை வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருக்கும் காட்சிகள் இயல்பானவை. கூடுதலாக ஆங்காங்கே பல வீடுகளில் கிழிந்த வாழைச் சருகுகளிலிருந்து தொன்னைகளைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

அந்த ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் கூறியது:

'நான், என் மனைவி அனுசுயாவுடன் சேர்ந்து தொன்னைத் தயாரிக்கும் தொழிலைச் செய்துவருகிறேன். கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் இந்தப் பகுதியில் இதுதான் பல குடும்பங்களை வாழவைக்கிறது. பொதுவாக பத்து வாழை மரம் இருந்தால் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றலாம். அதிக பராமரிப்புச் செலவு இல்லாமல் வீட்டிலேயே எளிமையாகத் தானாக வளரக்கூடியது வாழை. தவிர உபயோகத்துக்கு இலை அறுத்ததுபோக காற்றில் கிழிந்த இலைகளின் மடல்கள் இருக்கும்.

பொதுவாக, வீடுகளில் அதைப் பயன்படாத பொருளாக வெட்டினால், மரத்தோடு தொங்கவிடுவார்கள். அதையும் வீணாக்காமல் பயன்படுத்தி இந்தத் தொன்னைகளைத் தைத்து விடலாம். இதையே அதிக அளவில் செய்யும்போது தோப்புகளில் குத்தகை எடுப்பது வழக்கம்.

தினமும் கருக்கலிலேயே தோப்புக்குச் சென்றுவிடுவோம். ஏற்கெனவே நாங்கள் வெட்டி விட்ட வாழை மடலுங்களின் சருகுங்களோட மரத்திலேயே தொங்கியவாறு இருக்கும். இலை சருகான பின்னரும் மட்டை காயாது. அதனால் சருகு மென்மையாக இருக்கும். அதில் இருக்கும் சருகுகளை வெட்டி எடுக்கறது தான் முதல் வேலை. இதுக்கு வாழைச் சருகு லேசான ஈரப்பதத்தோடு இருக்க வேண்டியது அவசியம். வெயில் வந்தவுடன் சருகு மொடமொடப்பாகிவிடும்.

வெட்டிக் கொண்டு வந்த வாழைச்சருகுகளை சுத்தமாக்குவது அடுத்த வேலை. பின்னர், அளவு பார்த்தும் பிரித்தும் வெட்டி எடுப்போம். ஒரே சீரான அளவுடன் வெட்டி எடுக்கும் ஏடுகளைப் பிரித்து கட்டு கட்டாக அடுக்கி வைப்போம்.

அடுத்தது, தொன்னை தைப்பதுதான். சருகின் மேல ஆர்ச் வைத்து ஒரே அளவாக நறுக்குவோம். ஆர்ச் என்பது அரைவட்டமாக இருக்கிற தகடு. இதுதான் முக்கியமான ஆயுதம். தொன்னை அளவுக்கு ஏற்ற மாதிரி அளவுடைய ஆர்ச்சை பயன்படுத்த வேண்டும். இதை வைத்து சருகுகளைக் கிழிக்கும்போது ஒரே அளவாக சீரான வட்டமாகக் கிடைக்கும். ஓரங்களும் பிசிறுகள் இல்லாமல் சீராக இருக்கும். இப்படி சீரமைத்த சருகுகளை அடுக்கும்போதே மற்றொரு பக்கத்தில் தைப்போம்.

தொன்னை தைப்பதற்குத் தேவையான தென்னைமரத்து ஈர்க்குச்சிகளைத் தயாராக வைத்திருப்போம். அதை உடைத்து, வைத்து தைப்போம். இப்படியாகத் தயாரான தொன்னைகளை வரிசையாக அடுக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். இதற்கு நல்ல வெயிலாக இருந்தால் ஒருநாள் போதும். இப்படி வெயிலில் காய வைக்கும்போதுதான் அதில் இருக்கிற ஈரத்தன்மை முழுமையாகப் போகும். அப்போதுதான் பூஞ்சை அடிக்காது. பூச்சிகள் அடையாது. முறையாகத் தயாரான தொன்னைகளை ஆண்டுக்கணக்கில் வைத்திருந்தாலும் வீணாகப் போகாது. இந்த தொன்னைகளை ஒன்று மேல் ஒன்றாக அடுக்கி, வாழைநாரால் இறுக்கமாகக் கட்டி, சாக்கு சுற்றி வைத்திடுவோம்.

நூறு தொன்னை கொண்டது ஒரு கட்டு. சாதாரணமாக கட்டு ஐம்பது ரூபாய் வரை போகும். பொதுவாக, ஒரு தொன்னையைத் தைக்க ஒன்று அல்லது ஒன்றரை சருகு இலையே போதும். ஆனால், இரட்டை சருகாகப் போட்டு தைக்கும் தொன்னை நன்றாக, கெட்டியாக இருக்கும். சாதாரண தொன்னையை விட இது விலை அதிகம். முதலீடு இல்லாத, அதிக செலவில்லாத பகுதி நேர குடிசைத் தொழில் இது. பெண்களுக்கும் ஏற்ற தொழில்.

எங்களிடம் கோயில் விழாக்களுக்காக மொத்தமாக தொன்னைகளை வாங்குவார்கள். ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடிய பொருள் வாழைச் சருகு. தவிர தேவையும் இருக்கும் பொருள். ஆனால், தயார் செய்யறதுக்கு ஆள்கள் யாரும் அதிகமாக இல்லை.

பெரிய நிர்வாகம் இருக்கிற சில இடங்களில் அறவே பிளாஸ்டிக் பயன்பாடு கிடையாது. அவர்களைப் போல எல்லோரும் உறுதியாகச் செயல்பட்டால், பல குடும்பங்கள் மீண்டும் இந்தத் தொழிலுக்குத் திரும்பிவிடுவார்கள். தேவையுடன் உற்பத்தியும் அதிகரிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

'தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடில்லை' என்பார்கள். அதற்கேற்ப சருகையும்கூட காசாக்கித் தரும் நல்ல வாய்ப்பு இருக்கும் தொழிலான இதை வாழ வைப்பது நம் கைகளில்தான் இருக்கிறது'' என்கிறார் ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.