முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்

வைஸ்ராய் மாளிகையின் தர்பார் மண்டபத்தில், 1950 ஜனவரி 26-ஆம் தேதி காலை இந்தியக் குடியரசு அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

Updated On : 17 மே 2026, 4:08 am IST
பகிர்:

வைஸ்ராய் மாளிகையின் தர்பார் மண்டபத்தில், 1950 ஜனவரி 26-ஆம் தேதி காலை இந்தியக் குடியரசு அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அடுத்து, இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்க இருந்த பாபு ராஜேந்திர பிரசாத்தை அரியணையில் அமரும்படி கோரினார். அமர்ந்தவுடன் அவருக்கு ஐந்து வயது மூத்தவரான ராஜாஜி ஆசி வழங்கினார். அதைத் தொடர்ந்து, ராஜேந்திர பிரசாத் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

1966-இல் ஆஸ்திரேலியாவின் 15-வது பிரதமரானவர் ஹெரால்ட் கோல்டு. 1939-இல் இவர் தனது

27-ஆவது வயதில் மக்களவை உறுப்பினராகி, அரசியலில் தடம் பதித்தார். பின்னர் அமைச்சரானார். வெள்ளையர் அல்லாதவர்கள் அந்த நாட்டில் குடியுரிமை பெறமுடியாது என்ற சட்டத்தை இவர் தளர்த்தியதால், பழங்குடியினரும் குடியுரிமை பெற முடிந்தது. இவரது வாழ்க்கையில் நடைபெற்ற சோகம் என்ன தெரியுமா? இவர் தனது 59-ஆம் வயதில் ஒருநாள் தனது நண்பர்களுடன் கடலை ரசிக்கச் சென்றார்.

Advertisement

அப்போது அவருக்குக் கடலில் நீந்த வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால், அவருடன் இருந்த நண்பர்களோ அதில் விருப்பம் கொள்ளவில்லை. இதனால் அவர் தனியே நீந்தச் சென்றார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. எத்தனையோ பேர் பலவழிகளில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நாட்டு அரசும் 1968 ஜனவரியில் அந்த வழக்கை முடித்து வைத்தது.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தமிழ் தியாகையர் என்று போற்றப்பட்டவர் பாபநாசம் சிவன். 1911-ஆம் ஆண்டு வெளிவந்த 'உன்னை துதிக்க அருள்தா' எனும் பாடலே இவரது முதல் பாடலாகும். இது குந்தலவராளி ராகத்தில் அமைந்தது. நூறு கிருதிகளைக் கொண்ட இவரது 'கீர்த்தன மாலை' எனும் நூல 1934-இல் வெளிவந்தது. ராமாயணத்தைச் சுருக்கி, 24 ராகங்களில் 24 பாடல்களாக இவர் எழுதிய நூல் 'ஸ்ரீராம சரித கீதம்' ஆகும். இவர் 'காரைக்கால் அம்மையார் சரிதம்' எனும் இசை நாடக நூலையும் எழுதியுள்ளார்.

இவர் தமிழ்த் திரையில் 70 திரைப்படங்களில் சுமார் 800 பாடல்கள் வரையில் எழுதியுள்ளதோடு, சில படங்களுக்கு இசை அமைப்பும் செய்துள்ளார். 'மன்மத லீலையையும் வென்றார் உண்டோ', 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' உள்ளிட்ட இவரது பாடல்கள் மறக்க முடியாதவையாகும். 'தியாகபூமி', 'குபேரகுசேலா' உள்ளிட்ட சில படங்களில் இவர் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

ஒருமுறை நடிகர்கள் விவேக்கும் குமரிமுத்துவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குமரி முத்து, ' என் மகளுக்குத் திருமணம் வைத்திருக்கிறேன். கையில் போதிய பணம் இல்லை. இலங்கையில் ஒரு கலை

நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர். அங்கு சென்றால் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுப்பார்கள்' என்றார். இதற்கு விவேக், 'நான் வந்தால் எவ்வளவு கொடுப்பார்கள்?' என்று கேட்டபோது, குமரிமுத்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பேசிவிட்டு, 'நீங்கள் வந்தால் இரண்டு லட்சம் ரூபாய் கொடுப்பார்கள்' என்றார். உடனே விவேக்கும் இலங்கைக்குச் சென்று, கலைநிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏற்பாட்டாளர்கள் குமரி முத்துவிடம் பணம் கொடுத்துவிட்டு, அவரோடு பக்கத்து அறையில் தங்கியிருந்த விவேக்கிடம் பணம் அளிக்கச் சென்றனர். அப்போது விவேக், 'அந்தப் பணத்தை அப்படியே குமரிமுத்துவிடம் அளித்துவிடுங்கள். அவர் தனது மகளின் திருமணத்துக்குப் போதிய பணம் இல்லாமல் சிரமப்படுகிறார். அவருக்கு உதவவே நான் வந்தேன்' என்று கூறினார். அதை வாங்கும்போது, குமரி முத்துவின் கண்கள் கலங்கின.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தனது இறுதி நாள் வரையில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தார். அவரைப் போலவே உதவும் மனம் கொண்ட விவேக்கை 'சின்ன கலைவாணர்' என்று கூறுவது சரியாகவே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.