யசோதா - கிருஷ்ணா ஓவியம் ரூ. 167 கோடி
ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற மும்பை சாஃப்ரோனார்ட்டின் ஏலத்தில், 1890-களில் வரையப்பட்ட 'யசோதா - கிருஷ்ணன்' ஓவியத்தை ரூ.167 கோடிக்கு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உரிமையாளர் சைரஸ் பூனாவாலா வாங்கியுள்ளார்.
ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற மும்பை சாஃப்ரோனார்ட்டின் ஏலத்தில், 1890-களில் வரையப்பட்ட 'யசோதா - கிருஷ்ணன்' ஓவியத்தை ரூ.167 கோடிக்கு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உரிமையாளர் சைரஸ் பூனாவாலா வாங்கியுள்ளார். எந்தவொரு இந்தியக் கலைப்படைப்பும் இதற்கு முன் இவ்வளவு அதிக விலைக்கு விற்பனையானதில்லை.
'இந்திய பக்தியின் ஆன்மாவைப் படம்பிடிக்கும் ஒரு தலைசிறந்த கலைப் படைப்பாக 'யசோதா- கிருஷ்ணர் ஓவியம்' திகழ்கிறது' என்கிறார் சைரஸ் பூனாவாலா. இந்த ஓவியத்தில், பட்டின் இழைநயம், ஆபரணங்களின் மினுமினுப்பு, பளபளப்பு, தேஜஸ், மென்மை உள்ளிட்டவை இன்றைக்கும் பாராட்டப்படுகின்றன.
'யசோதா - கிருஷ்ணன்' ஓவியத்தை வரைந்தவர் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த ராஜா ரவி வர்மா. ஐரோப்பிய எண்ணெய், வண்ண ஓவிய நுட்பங்களை ஹிந்து இதிகாசங்களுடன் கலந்து, இந்தியக் கலையை மாற்றியமைத்த ஓவியர்.
Advertisement
ரவி வர்மாவின் ஓவியங்கள், நாள்காட்டிகள், 'அமர் சித்ரா கதா' சித்திரக்கதைகள் திருவிதாங்கூர், பரோடாவின் அரசவைகளிலும் இடம்பிடித்தன. வர்மாவின் 'புராண யதார்த்தவாதம்' என்பது 'காலண்டர் கலை' என்று விமர்சனத்துக்கும் உள்ளானது.
திருவனந்தபுரம் கிளிமானூர் அரண்மனையில் அரசக் குடும்பத்தில் 1848-இல் பிறந்தவர் ரவி வர்மா. ஓவிய நுட்பங்களைத் தானாகவே கற்றார்.
1873-இல் 'கூந்தலை அலங்கரிக்கும் நாயர் பெண்மணி' என்ற படைப்புக்காக வியன்னா உலகக் கண்காட்சியில் முதல் பரிசையும், 1893-இல் சிகாகோவில் நடைபெற்ற உலக கொலம்பியன் கண்காட்சியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ரவி வர்மா வென்றார்.
மும்பையில் அச்சகத்தை நிறுவிய வர்மா, பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணம் செய்து, நிலப்பரப்புகள், துணி வகைகள், மக்கள், புடவை உடுத்தும் முறை என அனைத்தையும் உற்று நோக்கினார். சேலைக்கு ஒரு சந்தையை உருவாக்கியவர் ராஜா ரவி வர்மா.
பெரும்பாலான வீடுகளின் பூஜையறையில் சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள்களின் ஓவியங்கள் ரவி வர்மா வரைந்ததுதான். இவரது ஓவியப் பிரதிகள் ஆறு ரூபாய் வரை அப்போதே விற்பனை செய்யப்பட்டன . 'பார்சி பெண்' என்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தபோதே ராஜா ரவி வர்மா மறைவுற்றார். அப்போது அவருக்கு வயது 58.
தொடக்கத்தில் ஹிந்திப் பட ஜாம்பவானான தாதாசாகேப் பால்கேயுடன் இணைந்து , 'ராஜா ஹரிச்சந்திரா' திரைப்படத்தில் காட்சிவழி கதைசொல்லல், காட்சியமைப்புகளில் பங்களிப்பு செய்துள்ளார் . 1901-இல் நஷ்டம், போலி ஓவியப் பிரதிகளின் விற்பனையால் ரவி வர்மா அச்சகத்தையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களுக்கான பதிப்புரிமை அனுமதியையும் ஜெர்மானிய தொழில்நுட்பவியலாளர் ஃபிரிட்ஸ் ஷ்லைச்சருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். மஹிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்ததை சித்திரித்த அஷ்டபுஜா தேவி போன்ற சில ஓவியங்கள் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டன.
ஓர் உருவப்படத்தை வரைய அவர் சுமார் 2,300 ரூபாய் கட்டணமாகப் பெற்றார். தங்கம் ஒரு தோலாவுக்கு (சுமார் 12 கிராம்) 10 ரூபாய்க்கும் சற்று அதிகமாகவே விற்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில், அந்தத் தொகை அவரது கலைக்கு இருந்த மதிப்பின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது. ராஜா ரவி வர்மாவால் வரையப்பட்ட 'திரெளபதி வஸ்திராபஹரணம்' எனும் ஓவியம், 2022-ஆம் ஆண்டில் 21.6 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
பணத்திடமிருந்து விலகியே இருந்த ராஜா ரவி வர்மா, ஒரு காலகட்டத்தில் 'சந்தை ஓவியர்' என்று ஒதுக்கப்பட்டார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பேசப்படாமல் இருந்துவந்த ஓவியர் ராஜா ரவி வர்மா, ஏலத்தின் மூலம் அதிக விலைக்கு விற்கப்பட்ட இந்திய ஓவியத்தை வரைந்த இந்திய ஓவியராக மீண்டும் உயர்ந்துள்ளார்.