உணவுத் திருவிழா....
ஆண்டுதோறும் வைகாசி ஒன்றாம் தேதி நடைபெறும் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் வைகாசி ஒன்றாம் தேதி நடைபெறும் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவுக்கு வேலூர் மாவட்ட அளவில் அரசு விடுமுறை விடப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இங்கு பிறந்து உலக நாடுகளில் வசிப்போரும் திருவிழாவுக்காக வருகை தருவர். இந்த வருடத் திருவிழாவுக்கு சுமார் 4 லட்சம் பேர் வந்திருந்தனர். அம்மனுக்கு நேர்த்திக்
கடனாக பல லட்சம் தேங்காய்கள் உடைக்கப்படுவதால், 'தேங்காய்த் திருவிழா' என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழாவுக்கு 'உணவுத் திருவிழா' என்ற பெயரும் உண்டு.
அம்மனை வழிபட நாடி வந்த பக்தர்களுக்கு உணவை நகர மக்கள் போட்டிப் போட்டு கொண்டு அளிப்பர். கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள், இளைஞர் அமைப்புகள், உணவகங்கள், வணிகர் அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், நேர்த்திக் கடன் செலுத்தியோர் என நகர், சுற்றுப்புறக் கிராமங்கள் முழுவதும் சுமார் 150 இடங்களில் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி, நீர், மோர், கூழ், குளிர்பானம், மதிய உணவு, அசைவ உணவு வகைகள், இரவு சிற்றுண்டி என வழங்கப்பட்டன. நகர மக்களும் தங்கள் வீடுகளின் வெளியே குடிநீர் குடங்களை வைத்து, பக்தர்கள் வெயிலில் தாகம் தணிக்க உதவினர்.
Advertisement
Advertisement
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்கள், அபிராமி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனத்தினர் குடிநீர், குளிர்பானங்களை வழங்கினர். வழக்குரைஞர் கே.எம்.பூபதி தலைமையிலான நாமத்வார் முரளிதர சுவாமிகள் ஆன்மிக அமைப்பினர் தயிர் சாதம், சாம்பார் சாதத்தை வழங்கினர்.
வாணியர் வீதியில் மக்கள் தனித்தனியே தயிர் சாதம், சாம்பார் சாதம், பூசணிக்காய் அல்வா, காராசேவ், கூழ், குளிர்பானங்கள், மோர் என்று விதவிதமாக வழங்கிய உணவுகள் ருசியில் அபாரம். பிச்சனூர் பிள்ளையார் சதுர்த்திக் குழுவினரோ காலை முதல் பிற்பகல் வரையில் சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் என்று விதவிதமான உணவுகளை வழங்கினர். செதுக்கரையில் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஜே.கே.என்.பழனி காலை முதல் மாலை வரையில் குளிர்பானங்களை வழங்கினார்.
நடுப்பேட்டையில் காலை உணவாக இட்லி, பூரி, பொங்கல், சாம்பார், சட்னி என ருசியான உணவுகளை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.எஸ்.அமர்நாத் வழங்கினார். ராசி அருணாசலம் தெருவில் பொங்கல், சாம்பார் என 5 ஆயிரம் பக்தர்களுக்கும், நூற்றுக்கணக்கான காவலர்களுக்கும் காலை உணவை குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கப் பிரமுகர் ஆர்.மோகன்பிரபு வழங்கினார்.
குடியாத்தம் பௌத்த கல்வி, ஆன்மிக அறக்கட்டளைத் தலைவர் இரா.சி.தலித் குமார், மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர் ஆகியோர் உள்ளி கூட்டுச் சாலையில் காலை முதல் பிற்பகல் வரையில் சுடச் சுட கிச்சடி, பொங்கல், கலவைச் சாதத்தை நகருக்குள் செல்லும் கிராம மக்களுக்கு வழங்கினர்.
ஆதிமூலசுவாமி மடத்தில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.என்.தட்சிணாமூர்த்தி காலை முதல் பிற்பகல் வரையில் பொங்கல் வழங்கி, பக்தர்களுக்குப் பசியாற்றினார். குஷி ஹோட்டல் சசி தலைமையிலான
குழுவினர் பஸ் நிலையத்திலும், செருவங்கியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி மோகன், ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் கருணாகரன் உள்ளிட்ட பலர் சிக்கன் பிரியாணியை ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கினர்.
10 ஆயிரம் பேருக்கு காலை உணவாக பொங்கல்,கிச்சடி, இட்லி, கேசரி உள்ளிட்டவற்றை நகர்மன்ற உறுப்பினர் ஆண்டாள் மெஸ் எம்.சௌந்தரராஜனும், 5 ஆயிரம் குடிநீர் பாட்டில்களை நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சனா நவீனும், குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் இரவு உணவாக சுடச்சுட ஊத்தப்பத்தை வியாபாரிகளும் வழங்கினர்.
குடியாத்தம் பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களும், நண்பர்கள் குழுவினரும் காலை முதல் பிற்பகல் வரையில் கலவைச் சாதம் வழங்கினர்.இவ்வாறாக, 150-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவுகளை வழங்கினர். 'உணவுத் திருவிழா' குறித்து சிலரிடம் பேசினோம்.
கே.எம்.ஜி.ராஜேந்திரன்
குடியாத்தம் என்றாலே கெங்கையம்மன் கோயில்தான் நினைவுக்கு வரும். அம்மன் விழாவைக் காண வருவோருக்கு எங்கள் ஊர் மக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு நீர், மோர், குளிர்பானங்கள், உணவுகளை அளிப்பது வழக்கம். நாடி வருவோருக்கு உணவு அளிப்பது என்பது தமிழர்களின் கலாசாரம். இந்தக் கலாசாரத்தையே நாங்கள் பின்பற்றுகிறோம்.
ஜே.கே.என்.பழனி
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த உணவு வழங்குதல் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.
கே.எம்.பூபதி
அன்னம் அளிக்கும் அன்னபூரணியாக, கெங்கையம்மன் இருக்கிறார்.
அவரது ஆசிர்வாதத்தால்தான் நாங்கள் இந்த அறப்பணியை மேற்கொள்கிறோம். 30 ஆண்டுகளாக நான் அன்னதானம் வழங்கி வருகிறேன். இஸ்லாமியர்களும் உணவுகளையும், குளிர்பானங்களையும் அளிப்பது இந்தத் திருவிழாவின் சிறப்பாகும்.
ஆர்.மோகன்பிரபு
அன்னதானத்துக்காகவே மாதம்
தோறும் 2 ஆயிரம் ரூபாயை ஒரு பெட்டியில் வைத்துவிடுவேன். எனது மனைவி கலைவாணி ஆசிரியை. அவர் தனக்கு வரும் தேர்வுப் பணி, தேர்தல் பணி ஊக்கத் தொகையை இதற்காக அளித்துவிடுவார்.
எஸ்.சௌந்தரராஜன்
உணவருந்த பக்தர்கள் பயன்படுத்திய பாக்குத் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள், குடிநீர் பாட்டில்கள் ஆங்காங்கே குப்பை மேடாகக் காட்சியளித்தன. நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 180 டன் குப்பைகளைச் சேகரித்து, நகராட்சி குப்பை வாகனங்களில் குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். குடியாத்தம் நகராட்சிப் பணியாளர்களோடு, பேர்ணாம்பட்டு நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் என முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
படங்கள்: கே.நடராஜன்.