FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கேட்கும் திறனை வலுப்படுத்த...

அதிக ஒலியைக் கேட்பதும், காதுக்கு ஒவ்வாத ஒலிகளைக் கேட்பதும் செவித்திறனைப் பாதிக்குமா? ஆயுர்வேதத்தில் செவிநலப் பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

7 நவம்பர் 2026, 6:52 pm
பகிர்:

அதிக ஒலியைக் கேட்பதும், காதுக்கு ஒவ்வாத ஒலிகளைக் கேட்பதும் செவித்திறனைப் பாதிக்குமா? ஆயுர்வேதத்தில் செவிநலப் பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

-சட்டைநாதன், திருவரங்கம்.

மனித வாழ்க்கையில் ஒலி என்பது இன்றியமையாத ஒன்று. தாயின் குரல், குழந்தையின் சிரிப்பு, பறவைகளின் கீச்சொலி, இசை, இயற்கையின் ஓசைகள் என நமது அன்றாட வாழ்க்கையில் ஒலிகள் மகிழ்ச்சியையும் தகவல்களையும் வழங்குகின்றன.

Advertisement

Advertisement

பிறருடன் பேசுவது, எச்சரிக்கை ஒலிகளைக் கேட்பது, சுற்றுப்புறத்தை உணர்வது போன்ற பல செயல்களுக்கு செவிப்புலன்அவசியமாகிறது.

ஆனால், எல்லா ஒலிகளும் நமது உடலுக்கு நன்மை தருபவை அல்ல. மிகக் கொடூரமான ஒலியைக் கேட்பது, எவ்வகையிலும் ஒலியே கேட்காதவாறு செய்துகொள்வது, காதால் நன்கு கேட்கமுடியாத அளவுக்குக் குறைந்துள்ள ஒலியை உற்றுக்கேட்பது இவை தொடர்ந்தால் மனிதன் ஜடமாகி விடுவான்.

க்ரூரமானதும், பயங்கரமானதும், அமங்களமானதும், விரும்பாததும், கெடுதலை உணர்த்துவதுமான சொற்களையே கேட்பது முறைதவறிய கேட்பு. இதுவும் உடல் மனநிலையைப் பாதிக்கும் என்று சரக ஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூல் குறிப்பிடுகிறது.

நவீன மருத்துவ அறிவியலின்படி, காதில் வெளிக்காது, நடுக்காது மற்றும் உள்காது ஆகிய மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன. நாம் கேட்கும் ஒலியலைகள் வெளிக்காது வழியாகச் சென்று செவிப்பறையை அதிரச்செய்கின்றன. இந்த அதிர்வுகள் நடுக்காதில் உள்ள சிறிய எலும்புகள் வழியாக உள்காதுக்குக் கடத்தப்படுகின்றன.

உள்காதில் அமைந்துள்ள நத்தை வடிவ உருவமான காக்ளியாவில், நுண்ணிய உணர்வு செல்கள் உள்ளன. இவை ஒலி அதிர்வுகளை நரம்புத் தகவல்களாக மாற்றி மூளைக்கு அனுப்புகின்றன. மிக அதிகமான ஒலி அல்லது நீண்டநேரம் தொடரும் இரைச்சல் இந்த நுண்ணிய உணர்வு செல்களைச் சேதப்படுத்தலாம். இவ்வாறு ஏற்பட்டசேதம் சில நேரங்களில் நிரந்தரமான செவித்திறன் இழப்பை ஏற்படுத்தக்கூடும்.

பின்வரும் சூழல்களில் ஆபத்து அதிகரிக்கிறது.

அதிக ஒலியில் நீண்ட நேரம் காதொலிப்பான்கள் பயன்படுத்துதல், திருமணம், திருவிழா, இசைநிகழ்ச்சி போன்ற இடங்களில் ஒலிபெருக்கிக்கு அருகில் நிற்பது, தொழிற்சாலைகளில் இயந்திர இரைச்சலுக்குப் பாதுகாப்பின்றி உட்படுவது, பட்டாசுகள் மற்றும் வெடிப்புகளின் அருகில் இருப்பது போன்றவை நமது மனநிலையையும் பாதிக்கக் கூடும். தொடர்ந்து வாகன இரைச்சல், கட்டுமானப் பணிகளின் சத்தம், கூச்சல், மோதல் நிறைந்த உரையாடல்கள் போன்றவற்றை எதிர்கொள்வது சிலருக்கு எரிச்சல், மனஅழுத்தம், தூக்கக் குறைவு மற்றும் கவனச்சிதறலை ஏற்படுத்தலாம்.

ஆயுர்வேதம் உடல், புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நலனை வலியுறுத்துகிறது. செவிநலத்தைப் பாதுகாக்க - முதன்மையான தீர்வு, பாதிப்பை ஏற்படுத்தும் ஒலியிலிருந்து விலகுவதாகும். காதொலிப்பான்களைத் தொடர்ந்து கேட்பதைத் தவிர்த்து இடைவெளிவிட்டுப் பயன்படுத்தலாம். ஒலியளவைக் குறைவாக வைத்துப் பயன்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் அதிக ஒலியையும் தேவையற்ற கைப்பேசிப் பயன்பாட்டையும் குறைப்பது நல்லது.

செவித்திறனைப் பாதுகாக்கும் உணவு அல்லது மூலிகை இல்லை. இருப்பினும், சத்தான உணவு மற்றும் நீண்ட கால நோய்களைக் கட்டுப்படுத்துதல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன.

பல்வேறு நிறங்களைக் கொண்ட கறிகாய்கள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகள், பயறு வகைகள், முட்டை மற்றும் தேவைக்கேற்ற பிற புரத உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். சிறுதானியங்கள் மற்றும் முழு தானியங்களை சமச்சீரான உணவின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம். நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது நலம்.

காதின் பின்புற கீழ்ப்பகுதியில் 'விதுரமர்மம்' என்றொரு இடமிருக்கிறது. அங்கு இளஞ்குடாக, கார்ப்பாஸôஸ்த்யாதி, க்ஷீரபலா, மஹா நாராயணம், மஹாமாஷ தைலம் போன்றவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துவந்தால் காதினுள் நரம்புகள் வலுவடையும். தலையில் நீர்கோர்த்து ஏற்படும் தலைவலி, காது அடைப்பு, தலைபாரம் போன்ற நிலைகளில் மூக்கினுள் வால்மிளகுப் புகையை விடுவதும், காதினுள் திரிபலை சூரணம் மற்றும் குக்குலு குரணத்தைப் புகையாகச் செலுத்துவதும் அதன் திறப்புக்கு உதவும் மற்றும் அழற்சியைப் போக்கிட உதவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.