ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்புச் சக்திக்கு...
நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதற்காக, நான் அன்றாட உணவில் நிறைய பூண்டு, நெல்லிக்காய் சேர்த்துச் சாப்பிடுகிறேன்.
நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதற்காக, நான் அன்றாட உணவில் நிறைய பூண்டு, நெல்லிக்காய் சேர்த்துச் சாப்பிடுகிறேன். அஸ்வகந்தா, துளசி போன்றவற்றை மூலிகை மருந்துகளாக தினமும் சாப்பிடுகிறேன். இருந்தாலும், நோய் எதிர்ப்புச் சக்தி வளரவில்லை. இதை வளர்த்து ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேத டானிக் மருந்து ஏதேனும் உள்ளதா?
- சுயம்பு, திருவாரூர்.
நமது உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதில் நோய் எதிர்ப்பு மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. காற்று, நீர், உணவு, சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நுண்ணுயிரிகள் உடலுக்குள் நுழையக்கூடும். அவற்றை எதிர்த்துப் போராடுவதில் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்புகள் உதவுகின்றன.
Advertisement
Advertisement
சரியான உணவு, போதுமான தூக்கம், உடற்பயிற்சி, மனஅமைதி, தனிநபர் சுகாதாரம் ஆகியவை நோய் எதிர்ப்புத் திறனைப் பராமரிப்பதற்கான அடிப்படைகள். இவற்றுடன் ஆயுர்வேதத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் சில மூலிகைகள் உடலின் இயற்கையான பாதுகாப்புச் செயல்பாடுகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றிலிருந்து நீங்கள் ஏற்கெனவே உங்களது கேள்வியில் குறிப்பிட்டுள்ளவையை பயன்படுத்துகின்றீர்கள்.
மேலும் வலுசேர்க்கும் விதமாக வேம்பு, சீந்தில் கொடி மற்றும் நிலவேம்பு ஆகியவற்றை மூலிகை மருந்துகளாகக் குறிப்பிடலாம். இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்து நோய் எதிர்ப்புத்திறனை ஆதரிக்கும் மூலிகைக் கலவையாக 'இம்யூனிட்' எனும் டானிக் மருந்தாகத் தற்போது விற்பனையிலுள்ளது. சென்னையிலுள்ள 'அபெக்ஸ்' எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் இதைத் தயாரித்து வெளியிடுகிறது.
செரிமானத்தைத் தூண்டுதல், வாயு மற்றும் அஜீரணத்தைச் சமாளிக்க உதவுதல் போன்ற சிறப்புகளை பூண்டு தன்னுள் அடக்கியுள்ளது. மேலும் சில இயற்கை வேதிப் பொருள்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாக நவீன ஆய்வுகளிலும் ஆராயப்பட்டுள்ளது.
வேம்பு இந்திய மருத்துவ மரபில் மிகவும் முக்கியமான மூலிகையாகும். தோல் ஆரோக்கியம், உடல் சுத்திகரிப்பு தொடர்பான பாரம்பரிய பயன்பாடுகளில் வேம்பு குறிப்பிடப்படுகிறது.
துளசி இந்தியக் குடும்பங்களில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் மூலிகையாகும். சளி, இருமல் போன்ற சிறிய அளவிலான உடல்நலப் பிரச்னைகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காயில் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் நிறைந்துள்ளன. உடலில் உருவாகும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் உணவுப் பொருள்களில் நெல்லிக்காயும் ஒன்றாகும்.
உடல் சோர்வு, மனஅழுத்தம், தூக்கக் குறைபாடு போன்ற நிலைகளில் அஸ்வகந்தாவின் பயன்பாடு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. உடலின் ஒட்டுமொத்த சக்தி மற்றும் சமநிலையை ஆதரிப்பதில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை பலமடங்கு அதிகரிக்க, கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்க, டெங்கு, மலேரியா மற்றும் நாள்பட்ட காய்ச்சல்களின் தீவிரத்தைக் குறைத்து உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைச் சீராக பராமரிக்க, செரிமானம் மற்றும் கல்லீரல் பாதுகாப்பு மேம்பட, கீல்வாதம் மற்றும் மூட்டுவலிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க, சீந்தில் கொடி பயன்படும்.
காய்ச்சல், செரிமானக் கோளாறுகள் மற்றும் சில அழற்சி நிலைகளில் நிலவேம்பு நல்ல பலனைத் தரக்கூடியது.
இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த - உடலை சுத்தமாகவும், மனதைத் தூய்மையாகவும், செரிமானத்தைச் சீராகவும் வைத்திருப்பதே முக்கியம். மேலும் அவ்வப்போது ஏற்படும் அஜீரணம், மலச்சிக்கல், வயிற்று பாரம், அதிகமான சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், முதலில் உணவு முறையைச் சீரமைப்பதே முக்கியம். வெந்நீர் அருந்துதல், எளிதில் செரிக்கக்கூடிய புதிதாகத் தயாரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், காய்கறி-கீரைகள் மற்றும் பருவகாலப் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவை உதவும்.
ஆயுர்வேதத்தில் பஞ்சகர்மா போன்ற உடல் சுத்திகரிப்பு முறைகள் உள்ளன. எண்ணெய் தேய்த்துக் குளித்தல், வியர்வையை உருவாக்கும் நீராவிக்குளியல், குடல் மலங்களை வெளியேற்றும் பேதி, எனிமா முறைகள், மூக்கினுள் மருந்தை விட்டுத் தலைப்பகுதியைச் சுத்தப்படுத்துதல், வாந்தி செய்து சளியை நீக்குதல் போன்றவற்றால் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல், இவை அனைத்தும் உணவின் சத்துப்பகுதியை நன்றாக உள்வாங்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டக்கூடியவை.
(தொடரும்)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.