FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல்சோர்வு போக்கும் கஷாயம்

பசியின்மை, செரிமானக் கோளாறுகள், உடல் சோர்வு, கல்லீரல் தொடர்பான தொந்தரவுகள் மற்றும் பித்தக் கோளாறுகள் ஏற்படும்போது, ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த கஷாயம் எது?

14 நவம்பர் 2026, 7:55 pm
கஷாயம்
பகிர்:

பசியின்மை, செரிமானக் கோளாறுகள், உடல் சோர்வு, கல்லீரல் தொடர்பான தொந்தரவுகள் மற்றும் பித்தக் கோளாறுகள் ஏற்படும்போது, ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த கஷாயம் எது? அதன் மூலிகைகள், மருத்துவப் பயன்கள், உட்கொள்ளும் முறை மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் யாவை?

-சத்யநாராயணன், சென்னை.

Advertisement

Advertisement

ஆயுர்வேத மருத்துவத்தில் கஷாயம் என்பது மூலிகைகளை நீரிலிட்டு முறையாகக் கொதிக்கவைத்து, அவற்றின் மருத்துவச் சத்துகளை நீரில் கலந்து பெறப்படும் ஒரு மருந்து வடிவமாகும். பல்வேறு மூலிகைகளின் தனித்தன்மையை ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட நோய்நிலைகளுக்கு ஏற்றவாறு கஷாயங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அத்தகைய ஒரு பாரம்பரிய ஆயுர்வேத மருந்துதான் 'திராயந்த்யாதி கஷாயம்'. இதில் பத்து மூலிகைகளின் நீர்ச்சாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்களையும் பயன்பாட்டையும் முதலில் அறிந்துகொள்வோம்.

1. திரிவிருத்- சிவதைவேர் - மலமிளக்கி, குடல் இயக்கத்தைத் துôண்டுவது.

2. படோலா-பேய்ப்புடல் - பித்தம் மற்றும் கபம் தொடர்பான நிலைகளில் பயன்பாடு.

3. மசூரா - மஸூர்டால் - ஊட்டச்சத்து மற்றும் உடல் திசுக்களின் ஆதரவு.

4. திராயந்தி - நீர்பிரம்மி - வயிற்றுப்புண்களை ஆற்றும். மலத்தை இளக்கும். ஞாபக சக்தி மற்றும் மூளைத் திறன் வளரும்.

5. பத்யா - கடுக்காய் - மலமிளக்கி, செரிமானத்தை மேம்படுத்தும்.

6. ஆமலகீ-நெல்லிக்காய் - பித்த சமநிலை.

7. விபீதகீ - தான்றிக்காய்- கபம் தொடர்பான பயன்பாடு.

8. நிம்பா - வேப்பம்பட்டை - வயிற்றிலுள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து வெளியேற்றும்.

9. கடுகா - கடுகு ரோஹிணி (நிலவேம்பு) - காய்ச்சல் மற்றும் பித்தம் தொடர்பான பயன்பாடு.

10. மதுகா - அதிமதுரம் - தொண்டை மற்றும் சளிச்சவ்வு பாதுகாப்பு.

இதன் பயன்பாடு குறிப்பாக பித்தம் மற்றும் கபம் தொடர்புடைய அழற்சி நிலைகள், வீக்கங்கள், சீழ்க்கட்டிகள் என்ற நோய் நிலையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. வலி, சிவப்பு, வெப்பம் மற்றும் சீழ்வெளிப்படும் நிலைகள், சில உட்புறச் சீழ்க்கட்டிகளில் இந்தக் கஷாயம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

குல்மம் எனும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் கட்டி போன்ற நிலைகள், விஸர்ப்பம் எனும் தோலில் சிவப்பு, வீக்கம், எரிச்சல், வலி மற்றும் வேகமாகப் பரவும் அழற்சி போன்ற அறிகுறிகள், தாகம், எரிச்சல் மற்றும் பித்தம் தொடர்பான தொந்தரவுகள், பித்தத்தினால் ஏற்படும் வெப்ப உணர்வு, வியர்வை மற்றும் சில மயக்க நிலைகள் ஆகியவற்றில் இந்தக் கஷாயம் நல்ல பலனை அளிக்கிறது.

காய்ச்சல், மனக்குழப்பம், வாந்தி, இரத்தப் போக்கு தொடர்பான நோய் நிலைகள், மஞ்சள் காமாலை, நாள்பட்ட தோல் நோய்களிலும் பயன்படுத்தலாம். செரிமானம் மற்றும் குடல் இயக்கக் கோளாறுகளிலும் இது சிறப்பான தீர்வைத் தருகிறது.

இந்தக் கஷாயம் பரிந்துரைக்கப்படும் நோய் நிலையைப்பொறுத்து உணவு முறை மாறு படும். பொதுவாக, உணவில் சேர்த்துக் கொள்ள ஏற்றவை.

எளிதில் செரிக்கக் கூடிய சாதம், பாசிப்பருப்பு சேர்ந்த உணவுகள், நன்கு வேகவைத்த காய்கறிகள், சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகள், தேவையானஅளவு தண்ணீர், அளவான உணவு மற்றும் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுதல்.

தவிர்க்க வேண்டியவை: எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக உப்பு மற்றும் ஊறுகாய், துரித உணவுகள், அதிக இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்த்த பானங்கள், மது மற்றும் புகையிலை.

ஆயுர்வேதத்தில் ஒரே மருந்தை எல்லா நோயாளிகளுக்கும் வழங்குவது வழக்கமல்ல. நோயாளியின் உடலின் இயல்பான தன்மை, தற்போது ஏற்பட்டுள்ள தோஷமாறுபாடு, செரிமானத் திறன், வயிற்றின் மப்புநிலை, குடலின் இயல்பான செயல்பாடு, உடல் மற்றும் மனவலிமை, நோயின் காலம் மற்றும் தீவிரம் போன்றவற்றை நன்கு அறிந்த பிறகே மருந்தைத் தீர்மானிப்பது வழக்கம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.