FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அன்பு குடில்

வாழ்நாளில் சேர்த்துள்ள சொத்துகளை தங்களது சொந்த தேவைக்காக முடக்கி வைக்காமல், ஆதரவற்ற மனிதர்களின் விடியலுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

7 நவம்பர் 2026, 6:56 pm
- SACHIN DWARAGA
பகிர்:

வாழ்நாளில் சேர்த்துள்ள சொத்துகளை தங்களது சொந்த தேவைக்காக முடக்கி வைக்காமல், ஆதரவற்ற மனிதர்களின் விடியலுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர், கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தம்பதியினரான ஆர்.ஆறுமுகம் (வயது 80), ஏ.தனபாக்கியம் (75).

கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட மதுக்கரை அருகேயுள்ள அரிசிபாளையத்தில் இவர்கள் தங்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில், சுமார் ரூ.1.60 கோடி மதிப்புடைய 32 சென்ட் நிலத்தை ஆதரவற்ற பார்வையற்ற முதியோர்களின் வாழ்வாதாரத்துக்காக முழு மனதுடன் தானமாக வழங்கியுள்ளனர். அந்த நிலத்தில் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் சார்பில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 'அன்பு குடில்' என்ற முதியோர் இல்லம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆறுமுகத்திடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'திண்டுக்கல் மாவட்டம், பழனியே எனக்கு பூர்விகம். கோவையில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் நிர்வாகப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது மனைவி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். குழந்தைகள் இல்லை.

1990-களில் எங்களது சேமிப்பை கொண்டு மதுக்கரை அரிசிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பின்புறமாக இரண்டரை ஏக்கர் நிலத்தை வாங்கினேன்.

ஒருமுறை பார்வையற்ற உறவினரின் குடும்ப விழாவில் கலந்துகொண்டபோது, அங்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் ஒருவருக்கொருவர் எத்தகைய பாசத்தோடும் பரஸ்பர ஆதரவோடும் தோள் கொடுக்கிறார்கள் என்பதைக் கண்டு வியந்து, அன்றிலிருந்து அவர்களுக்கு உதவிவருகிறேன்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றவுடன், எங்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் பள்ளியைத் தொடங்கி, ஏழைக் குழந்தைகளுக்கு உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வியைக் கற்பித்தேன். நிதிப் பற்றாக்குறையால் பள்ளியைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழல் ஏற்பட்டபோது, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அறக்கட்டளையிடம் அந்த நிலத்தையும் பள்ளியையும் ஒப்படைத்தேன். ஏழை மாணவர்களுக்குத் தொடர்ந்து இலவசக் கல்வி மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் வழங்கினேன்.

ஏ.தனபாக்கியம், ஆர்.ஆறுமுகம்

இதனிடையே, கோவை வரதராஜபுரத்தில் உள்ள மையத்தில் கடந்த 15 ஆண்டுகளாகப் பார்வையற்ற மாணவர்களுக்கு அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியும், இலவச உணவு, தங்குமிட வசதிகளையும் வழங்கி வரும் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவத்துடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.

2019-ஆம் ஆண்டில் ஆதரவற்ற முதிய பார்வையற்றோருக்காக இலவச இல்லத்தை நிறுவவேண்டும் என்ற எனது விருப்பத்தை சதாசிவத்திடம் தெரிவித்து, 32 சென்ட் நிலத்தை அமைப்புக்குத் தானப் பத்திரமாகப் பதிவு செய்து ஒப்படைத்தேன்.

எங்களது காலத்துக்குப் பிறகும் இந்த நிலமும், அங்கு உருவாக்கப்பட்டுள்ள கட்டடமும் முழுமையாக அமைப்புக்கே நிரந்தரமாகச் சென்றடையும் வகையிலும் முறையான ஏற்பாடுகள் செய்துள்ளேன். இந்த இடத்தில் கட்டப்பட்ட 'அன்பு குடில்' இல்ல கட்டடம் 2026 மே மாதத்தில் திறக்கப்பட்டு, ஜூலை 24 முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

10 நவீன தங்கும் அறைகளில் 25 பெண்கள் உள்பட 50 பேர் தங்க வசதி செய்யப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ கோவை குஜராத்தி சமாஜத்தின் நிதிப் பங்களிப்புடன் விசாலமான உணவுக்கூடம் மற்றும் நவீன சமையலறை, மளிகைப் பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான சேமிப்பறை, இரு பாலருக்கும் நவீன கழிவறை வசதிகள், நிர்வாக அலுவலகப் பிரிவு, ஆலோசனைக் கூடம், பார்வையாளர்கள் காத்திருப்பு அறை, துணிகளைத் துவைத்து உலர்த்துவதற்கான பிரத்யேக இடவசதிகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டி, ஆழ்துளைக் கிணறு, நிலத்தடி நீர் சேமிப்புத் தொட்டி, தடையற்ற பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

முதியோர்களின் அவசரப் போக்குவரத்துக்காக நன்கொடையாளர் ஒருவர் இலவசமாக வேன் வழங்கியுள்ளார். மூத்த மருத்துவர் ஒருவர் காப்பகத்தின் பராமரிப்புச் செலவுகளுக்காக ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இங்கு நேரில் வந்து முதியோர்களுக்குத் தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்களிடம் பண வசதி இல்லாததால் நற்காரியத்துக்காக நிலம் கொடுத்தோம்' அது ஒரு சிறிய விதை மட்டுமே' தற்போது பல நல்உள்ளங்கள் கைகோத்து அதை ஒரு பெரும் ஆலமரமாக வளர்த்தெடுத்துள்ளனர்' என்கிறார் ஆறுமுகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.