FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நடந்த வழியே மீண்டும் நடந்து...

சில வாரங்களுக்கு முன்பு தினமணி அலுவலகத்துக்கு ஓர் ஆங்கில நூல் வந்து சேர்ந்தது.

14 நவம்பர் 2026, 7:34 pm
பகிர்:

சில வாரங்களுக்கு முன்பு தினமணி அலுவலகத்துக்கு ஓர் ஆங்கில நூல் வந்து சேர்ந்தது. இது ஆங்கிலம் மற்றும் டச்சு மொழியில் அச்சிடப்பட்ட இருமொழிப் பதிப்பு. 'காந்தியின் புதல்விகளைத் தேடி' (இன் சேர்ச் ஆஃப் காந்தி'ஸ் டாட்டர்ஸ்) என்ற இந்தப் புத்தகம், இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் முடிந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்களின் நிலை என்ன, அவர்களது வாழ்வில் முன்னேற்றம் உள்ளதா, குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வந்ததா, பெண் கல்வியின் நிலை என்ன என்பதை நன்கு பதிவுசெய்துள்ளது.

களப்பணியாக இங்கு வந்த பெல்ஜியம் ஆய்வாளர்கள் ஈவா பிரெம்ஸ், சிஸ்டர் ஜென்னி தேவோஸ், புளோரின் பென்னட் ஆகியோர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக பாதயாத்திரையின் வழித்தடத்தில் நேரில் சென்று பார்க்க முடிவு செய்தனர். அதன்படி 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை ஆய்வுக் குழுவினர் பாதயாத்திரையாகச் சென்று, இந்திய மகளிர் நிலை மற்றும் வாழ்க்கைச் சூழலை நேரில் பார்த்துள்ளனர்.

Advertisement

Advertisement

ஒரு 'காபிடேபிள்' புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம், 2008 -ஆம் ஆண்டில் தஞ்சை, கும்பகோணம் , நாகை பகுதிகளில் அன்றைய நாளில் நிலவிய சூழலை விவரிப்பதுடன், நிறைய புகைப்படங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையைத் தொடர்ந்து தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-இல் தொடங்கி 28 வரை, திருச்சியில் இருந்து வேதாரண்யத்துக்கு, சுமார் 240 கிலோ மீட்டர் 18 நாள்கள் நடைபெற்ற இந்த உப்பு சத்தியாகிரக யாத்திரையில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசின் தடையை மீறிய குற்றத்துக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனையும் பெற்றனர். திருச்சியின் முக்கியப் பிரமுகர்களான டாக்டர் ராஜன், கே. சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய தினம் இன்றும் திருச்சியில் ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது.

அதே வழித்தடத்தை இந்தக் குழுவினர் தேர்வு செய்தனர். 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி திருச்சியில் புறப்பட்ட இந்தக் குழுவுக்கு , ராஜாஜியின் யாத்திரைக்கு உதவியாக நின்ற சர்தார் வேதரத்தினத்தின் பேரன் ஜூனியர் வேதரத்தினம் உதவிபுரிந்ததோடு, நடைப் பயணத்திலும் பங்கேற்றார்.

கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சை, அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி , திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் என நடையாய் நடந்து, வழியில் மக்களுடன் மக்களாகத் தங்கி, உண்டு உறங்கி பயணப்பட்டதையும், பார்த்ததையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

2008-இல் சாதி வேற்றுமைகள் இருந்ததைக் கண்டதாகவும், பெண்கள் குறைந்த கூலிக்கு தொழில் செய்வதையும், தலித்துகளின் வீடுகளில் இவர்கள் தங்கிட விருப்பம் தெரிவித்தபோது, அவர்கள் சங்கடப்பட்டு மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளில் நிலைமை பல மாறுதல்களை அடைந்துவிட்டது.

மீண்டும் ஒரு யாத்திரையை தமிழக இளைஞர்கள் மேற்கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தை இப்புத்தகம் ஏற்படுத்தி விடுகிறது.

தமிழக இளைஞர்கள் இன்னும் இதுபோல நிறைய யாத்திரைகளை மீட்டெடுக்கலாம்.

தி.ஜானகிராமன் சிட்டி மேற்கொண்ட 'நடந்தாய் வாழி காவேரி' பயணம்...

ராமானுஜர் சென்ற 'திருவரங்கன் உலா' வழித்தடம்...

தாமிரவருணி தோன்றும் இடம் தொடங்கி, கடலில் கலக்கும் வரையிலான ஒரு பயணம்...

இவ்வாறு நிறைய பயணங்கள் இளைஞர்களுக்காகக் காத்திருக்கின்றன.

ஆர்.எஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.