கேளீர் தமிழ் வரலாறு-16: 'திராவிட கவி திருவள்ளுவர்!' வரலாற்றில் முதல் முழக்கம்!
'திராவிட கவி திருவள்ளுவர்.'

'திராவிட கவி திருவள்ளுவர்.'
இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் சென்னையில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழக, இந்தியத் தலைவர்கள் முன்னிலையில் முதன்முதலில் இப்படிப் பேசியவர் யாராக இருக்கக் கூடும்?
பனகல் அரசர், பிட்டி தியாகராயர், பெரியார், அண்ணா முதலியவர்களில் யாரேனும் ஒருவரா? வேறு எவரேனும் ஒரு திராவிட இயக்கப் பிரமுகராக இருக்குமோ?
Advertisement
Advertisement
இவர்கள் யாருமில்லை.
அந்தப் பொதுக்கூட்டம் நடந்த காலம் 1918 மே 25. தியாகச் செம்மல் வ.உ. சிதம்பரனாரும் அன்னி பெசண்ட் அம்மையாரும் 'சுதேசமித்திரன்' ஆசிரியர் அரசியல் ஞானி அரங்கசாமி ஐயங்காரும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள். பார்வையாளர்களாக மக்கள் கூட்டம் திரண்டுவழிந்தது. பிரமுகர்கள் பலரும் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
'திராவிட கவி திருவள்ளுவர்' என்று பேசக்கூடியவர்கள் என நாம் நினைப்பவர்கள் பேசவில்லையென்றால் பேசியவர் வேறு யார்?
அந்தப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்தான் இப்படிப் பேசினார்.
அவர் இதை மட்டும்தான் பேசினாரா?
இன்னும் பேசினார். பேசிய வகையில் திருக்குறளை முன்னெடுத்த எல்லா இயக்கங்களுக்கும் அவர்தான் முன்னோடி. உலகளாவிய திருக்குறள் அமைப்புகள் முதலியன வள்ளுவ நடுவு
நிலைமை வழுவாமல் இனியேனும் அவர் பெயரைத் திருக்குறள் வரலாற்றில் உச்சத்தில் வைத்து உச்சரிக்கட்டும்.
அவர் -
திவான்பகதூர் சர் டாக்டர் நீதிபதி எஸ். சுப்பிரமணிய ஐயர்.
திவான் பகதூர், சர் பட்டங்களை ஆங்கிலேயராட்சியோடு முரண்பட்டபோது 1918 ஜூனில் திருப்பியனுப்பியவர். நீதிபதி பதவியை ஓய்வுபெறுங்காலத்திற்கு முன்னதாகவே உதறியவர்.
பிறகு... டாக்டர் எஸ். சுப்பிரமணிய ஐயர்.
சுருக்கமாக மகான் மணி ஐயர், மணி ஐயர்.
அந்தப் பெருமகனுக்குத்தான் தாம்படைத்த தமிழர் வரலாற்றின் தொன்மைபேசும் தலைநூலை முன்னோடித் தமிழ்ப் பேரறிஞர் வி. கனகசபை பிள்ளை காணிக்கையாக்கியிருந்தார்.
தமிழின் வரலாறு பேசும் தருணங்களிலெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுக் கால வரலாறு என்கிறோமே! இப்படிச் சொல்லும் மரபு எப்படி அழுத்தம்பெற்றுத் தமிழுலகில் பரவியிருக்கக்கூடும்?
பாரதியார் ஒருமுறை தமிழின் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் எண்ணிப்பார்த்து, '1800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாய்க்கப் பெற்றிருந்த நாகரிக நாட்டிலே, இவ்வளவு உயர்வு கொண்டிருந்த பெரியோரின் சந்ததியிலே, அவர்கள் நடையிலும் செய்யுளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியிலே நாம் பிறந்திருக்கிறோமென்பது அரிய மகிழ்ச்சியுண்டாக்குகிறது' என்று எழுதியிருந்தார். இருபது நூற்றாண்டுகள் எனவும் இன்னோரிடத்தில் எழுதியிருந்தார்.
1800 ஆண்டு, 2000 ஆண்டு என்னும் கணக்கு எப்படி அழுத்தம் பெற்றது?
'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்' என்னும் பொருள்தரும் தலைப்பை ஆங்கிலத்தில் பெற்றிருந்தது வி. கனகசபை பிள்ளை 1904ஆம் ஆண்டு வெளியிட்ட அந்தத் தலைநூல். வரலாற்றுப் பெருமைகொண்ட அந்த நூலால் வந்த வெளிச்சம் எனக் கூறலாமோ?
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் அந்த நூல் வெளிவந்திருந்தாலும் 1895ஆம் ஆண்டே இந்தத் தலைப்பில் பொதுவெளியில் எழுதத் தொடங்கிவிட்டார் கனகசபை பிள்ளை. எனவே அவர் 1800 ஆண்டுகளுக்கு முன் என எழுதியிருக்கின்றார்.
1895 மே மாதம் சென்னை மாகாணச் சட்டசபையின் உறுப்பினராக இருந்த சி. சங்கரன் நாயர் 'தி மெட்ராஸ் ரிவ்யூ' என்னும் காலாண்டு இதழை ஆங்கிலத்தில் நடத்தத் தொடங்கினார். ஆகஸ்டு மாத இரண்டாம் இதழிலிருந்து கனகசபை பிள்ளை இந்தத் தலைப்பில் தொடரை எழுதத் தொடங்கிவிட்டார்.
முதற்பகுதி வெளிவந்தவுடன் சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விளங்கியவரான மணி ஐயரிடமிருந்து கனக
சபை பிள்ளைக்கு ஒரு கடிதம் வந்தது. தமிழர்களின் தொன்மை வரலாற்றைக் கூறும் எல்லா ஆதாரங்களையும் தமிழ் இலக்கியங்களிலிருந்து திரட்டி அவர் இதனைத் தொடர்ந்து எழுதிவர வேண்டும் எனக் குறிப்பிட்டு அவரது முயற்சியைப் பாராட்டிக் கடிதம் அமைந்திருந்தது. அந்த நூலை வெளியிட ஆகும் அனைத்துச் செலவையும் தாம் ஏற்றுக் கொள்வதாக மணி ஐயர் தெரிவித்திருந்தாராம்; உ.வே. சாமிநாதய்யர் நினைவுகூர்ந்திருக்கிறார்.
கடிதத்தை எழுதிய நீதிபதி மணி ஐயர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத் தமிழ்ச் சமூகத்தில் பேராளுமையாகத் திகழ்ந்தவர்.
அப்படிப்பட்ட சிறப்புக்குரிய எஸ். சுப்பிரமணிய ஐயர்தான் முதன்முதலில் பொதுக்கூட்டத்தில் 1918ஆம் ஆண்டில் 'திராவிட கவி திருவள்ளுவர்'என முழங்கினார். அதற்கடுத்து இன்னுமொரு மிக முக்கியமான கருத்தையும் வெளியிட்டார். அதனை இறுதிப் பகுதியிலே காண்போம்.
இந்தத் தருணத்தில் எஸ். சுப்ரமணிய ஐயர் பற்றி நாம் சற்று விரிவாகவே அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். 'சுதேசமித்திர'னை நிறுவிய ஜி. சுப்பிரமணிய ஐயரையும் இவரையும் ஒருவராகக் கருதி மயங்குபவர்களும் உண்டு. எனவே சற்று விரிவாகப் பார்த்துவிடுவோம்.
அமெரிக்க அதிபர் வில்சன், இந்தியாவிற்கான இங்கிலாந்து மந்திரி மாண்டேகு என எல்லோராலும் அறியப்பட்டிருந்த அவரை, திரு.வி.க. தொடங்கி நீ. கந்தசாமி பிள்ளை வரை அனைவராலும் 'மயிலை மாமுனிவர்' எனப் போற்றப்பட்ட அவரை இன்று தமிழ்ச் சமூகம் அடியோடு மறந்துவிட்டது.
அதற்கொரு சிறிய உதாரணம். திருவல்லிக்கேணியில் அவர் பெயரால் ஏறத்தாழ நூற்றாண்டுக்கு முன் அமைக்கப்பட்ட அரங்கம் இன்று பாழடைந்து கிடக்கின்றது.
இந்திய நாட்டின் வரலாற்றில் அவரது இடம் மிகுந்த பெருமைக்குரியது. இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் தோற்றுவிக்கப்பட்டதும் முதல் மாநாடு பம்பாயில் கூடியதும் நாமறிந்ததே. 1885ஆம் ஆண்டிற்கு முன்பே காங்கிரசைத் தோற்றுவிக்க ஏற்பாடுகளைத் திட்டமிட்ட, காங்கிரசை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் நீதிபதி எஸ். சுப்பிரமணிய ஐயர். முதல் காங்கிரசில் கலந்துகொண்டு முதல் காங்கிரசின் தலைவராக உமேச சந்திர பானர்ஜியை ஏ.ஓ. ஹ்யூம் முன்மொழிய அதனை வழிமொழிந்த இருவரில் ஒருவராகவும் திகழ்ந்தவர் அவர். தொடர்ந்து காங்கிரசின் முக்கிய அங்கமாக விளங்கியவர்.
சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக விளங்கியதோடு மூன்று முறை தலைமை நீதிபதியாகவும் பொறுப்பு வகித்தவர்.
சில காலம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இந்தப் பதவியை வகித்த முதல் இந்தியர் - தமிழர் இவரே.
விவேகானந்தர் முதல்முறை சென்னை வந்தபோது நீதிபதி மணி ஐயரை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்; விவேகானந்தர் சிக்காகோ செல்ல முன்னின்று செயல்பட்டார் மணி ஐயர்; விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து அவருக்குக் கடிதங்கள் எழுதினார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க., நீதிபதி சர் எஸ். சுப்பிரமணிய ஐயரின் வாழ்க்கையை ஒரு காவியம் என வருணித்து அதன் முப்பரிமாணங்களாக இராமகிருஷ்ண இயக்கம், தியோசாபிகல் இயக்கம், விடுதலை இயக்கம் ஆகியவற்றுக்கான பங்களிப்புகளை இப்படி வகுத்துரைத்துள்ளார்:
'விவேகானந்தரை மேல்நாட்டுக்கு அனுப்ப முயன்றவர் யாவர்? டாக்டர் மணி ஐயர்.
'தியோசாபிகல் சங்கம் உலகில் பொது அறத்தைப் பெருக்கி வருகிறது. அதை வளர்த்தவர் டாக்டர் அன்னி பெஸண்ட் அம்மையார். இவ்வம்மையாரின் தனிமுயற்சியால் தியோசாபிகல் சங்கம் வளரவில்லை. ஒரு வான்மணியின் ஒளி டாக்டர் பெஸண்ட் அம்மையார் வழியே அச்சங்கத்தை வளர்த்தது. அவ்வான்மணி டாக்டர் மணி ஐயர்.
'நமது நாட்டுக்கு விடுதலை வேட்கையை எழுப்பினவருள் டாக்டர் சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். தேசபக்த மணிகளுள்ளும் பிரகாசித்தவர் டாக்டர் மணி ஐயர்.'
மகாகவி பாரதியின் வரலாற்றிலும் ஓர் இடம் அவருக்கு உண்டு. புதுவை வாழ்க்கை நிறைவுபெற்றுக் கடலூரில் கைதான பாரதியின் விடுதலைக்கு முயன்ற சிலருள் ஒருவர் அவர். விடுதலை பெற்ற பின் முதன்முறை சென்னைக்கு வந்தபோது பாரதி ஆற்றிய முதல் சொற்பொழிவுக்குத் தலைமைதாங்கியவரும் எஸ். சுப்பிரமணிய ஐயர்தான்.
அவர் தாய்மொழியான தமிழின்பால் எல்லையற்ற ஈடுபாடு கொண்டவர். அந்தக் காலத்து வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் பொது அரங்குகளில் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரோ பெரும்பாலும் தமிழில்தான் பேசினார். தமிழில் பேசுவதையும் தன் பேச்சில் தமிழிலக்கியப் பாடல்களை எடுத்துக் காட்டுவதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திருவள்ளுவர் திருநாள் பொதுக்கூட்டத்தில் தலைமைவகித்தபோதும் தனது உரையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது பற்றியும் தமிழைப் போற்றவேண்டியது பற்றியும் அவர் ஆழமாகப் பேசியிருந்தார்.
நான் மாணவனாய் இருந்த காலத்திலே அவரது அழியாப் புகழ் படைத்த நூலை (திருக்குறளை) அனைவரும் வாசித்தல் வழக்கம். இப்பொழுதோ அவ்வழக்கம் இல்லையென்பேன். துரதிருஷ்டமான அம்மாறுதலுக்கு யாது காரணம்? நமது தற்காலக் கல்வி முறை ஓரளவு காரணமாகும். தற்காலக் கல்விமுறையில் தாய்ப் பாஷைகள் பெரிதும் அலட்சியமாய்விட்டன.
ராஜாங்கத்தின் ஆதரவு பெற்று நடைபெறும் கல்விச்சாலைகளிலே ஓரளவாவது தாய்ப்பாஷை மூலம் போதனை நடக்க வேண்டுமென ஜனங்கள் அனைவரும் ஆசைப்படுகின்றனர். அந்த ஆசை கூடிய சீக்கிரம் கைகூடுமா? கூடாதா? என்று சொல்லப் புகுதல் வீணே ஜோஸ்யம் சொல்லப் புகுவது போலாகும்.' எனத் தாய்மொழி அலட்சியப்படுத்தப்படுவதற்கும் திருக்குறளைக் கற்பது குறைவதற்கும் உள்ள தொடர்பை உணர்த்தியிருந்தார்.
சங்க இலக்கியங்களில் பலவற்றை முதன்முதலாகப் பதிப்பித்து வழங்கிய பெருமைக்குரியவர் உ.வே. சாமிநாதையர். அவருடைய தந்தை வேங்கடசுப்பையர். தாயார் சரசுவதி. தாய் தந்தையரை எல்லையின்றி நேசித்த தலைப்பிள்ளை அவர்.
உ.வே. சாமிநாதையர் தன் வாழ்க்கையில் சொந்தத் தாய்தந்தையர் அல்லாமல் ஒரு மனிதரை ஒருசேரத் தாயாகவும் தந்தையாகவும் கருதிப் பார்த்திருக்கின்றார். அப்படிக் கருதுமளவு அவர் அன்பு பாராட்டியிருக்கின்றார். அவர் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் எஸ். சுப்ரமணிய ஐயர்தான்.
'மணி ஐயரை நான் உண்மையிலே சில விஷயங்களில் என் தந்தையாரைப் போலவே எண்ணியிருந்தேன். என்னுடைய தமிழாராய்ச்சி விஷயத்திலும் அபிவிருத்தி விஷயத்திலும் அவருக்கிருந்த பேரன்பே அதற்குக் காரணம்.
'நான் கும்பகோணத்தில் வேலைபார்த்து வந்தபோது தமிழ் நூற்பதிப்பின் பொருட்டு விடுமுறைக் காலங்களில் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கியிருப்பேன். அக்காலங்களில் ஒவ்வொரு முறையும் மணி ஐயரைப் பார்த்துச் செல்வேன். போகும்போதெல்லாம் அவர் கூறும் வார்த்தைகளால் என் காது குளிரும்.
'அலைச்சலினாலும் உழைப்பினாலும் சரியான வேளையில் ஆகாரமில்லாமல், ஏதோ கிடைத்ததை உண்டுவிட்டுக் காரியத்தில் கண்ணாயிருப்பேன். என் நிலையை அவர் நன்கு உணர்ந்தவர். ஆதலின் நான் போனால் ஸ்நானம் செய்யச் சொல்லித் தம்மோடு சாப்பிடச் சொல்வார்; தம் சமையற்காரனை அழைத்து, 'அடே அவர் இரவும் பகலும் உழைத்துக் கஷ்டப்படுகிறார். நிறைய நெய்விடு, தேங்காய்ப்பால் காய்ச்சிக் கொடு; பாலிலே கற்கண்டு போட்டுக் காய்ச்சிக்கொடு' என்று உத்தரவு செய்வார். அந்த உபசாரத்தினாலும் உணவினாலும் என் வயிறு குளிரும். அக்காலங்களில் அவரை என் தாய்போலக் கருதினேன்.'
இவையெல்லாம் நெகிழ்ச்சியோடு நீதிபதி மணி ஐயரைப் பற்றி அவர் எழுதியவை.
தமிழின்மீது மட்டுமன்று; சர் எஸ். சுப்பிரமணிய ஐயர் சமஸ்கிருதத்தின்மீதும் ஈடுபாடு கொண்டவர். சமஸ்கிருத அறிஞர்களைப் போற்றியவர். இரண்டு வடமொழி அறிஞர்கள் 'மகாமகோபாத்தியாய' பட்டம்பெறப் பரிந்துரைத்தவரும் அவர். மகாமகோபாத்தியாய கபிஸ்தலம் தேசிகாசார்யரைத் திருப்பதியிலிருந்து சென்னைக்குத் தமது இல்லத்திற்கு வரவழைத்து அவரிடம் சங்கர பாஷ்யத்தையும் ராமாநுஜ பாஷ்யத்தையும் முறையாகப் படித்தாராம்.
எஸ். சுப்ரமணிய ஐயரின் சமஸ்கிருத ஈடுபாடு, ஞானம் முதலியவற்றை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 'திராவிட கவி திருவள்ளுவர்' பற்றிய மிக முக்கியமான செய்தியை நாம் மீண்டும் பேசும்போது நினைத்துப்பார்க்க வேண்டி வரும்.
அறிஞர்களுக்கு மட்டுமல்ல எளியவர்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்துவந்தார் அவர். அவர் நீதிபதியாக இருந்தபோது நீதிமன்றத்தில் 'பங்கா' இழுப்பவராக ஒரு முதியவர் இருந்தார். வசதிக் குறைவால் சில சமயம் அவர் அழுக்கடைந்த உடை அணிந்து வருவாராம். அது பிடிக்காத இன்னொரு நீதிபதி 'அவருக்கு வயதாகிவிட்டதால் வேலைக்கு உதவமாட்டான். வேலையிலிருந்து நீக்கிவிடலாம்' என நீதிமன்றப் பதிவாளருக்கு எழுதிவிட்டாராம். அதனையறிந்த முதியவர் மணி ஐயரிடம் வந்து முறையிட்டாராம். அவர் உடனே அம்முதியவரைத் தனக்கு 'பங்கா' இழுக்கும்படி மாற்றி ஏற்பாடு செய்துவிட்டாராம். 'இவன் கிழவன், வேலை செய்ய இயலாதவனென்றால், நான் இவனைவிடப் பிராயத்தில் முதிர்ந்தவன். ஏழு ரூபாய் சம்பளம் வாங்கும் இவன் வேலை செய்ய உபயோகமற்றவனென்றால் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் நான் இவனைக் காட்டிலும் உபயோகம் இல்லாதவனே' என்று கூறினாராம்.
அவர் மதுரையில் வழக்கறிஞராக இருந்தபோது தனக்கு கோச் வண்டி ஓட்டிய இசுலாமிய முதியவரைச் சென்னைக்கு அழைத்துக்கொண்டாராம். இறுதிக் காலம் வரை அவரைப் பாதுகாத்து வந்தாராம். எளியவர்கள் பலரது கல்விச் செலவை ஏற்று உதவியுமிருக்கிறார்.
எஸ். சுப்பிரமணிய ஐயர் வாழ்க்கையைத் திரு.வி.க.வே ஒரு காவியம் எனக் குறிப்பிட்டுவிட்டார். அந்தக் காவியத்தின் எல்லாக் காண்டங்களையும் நாம் இங்கே பார்த்துமுடிப்பது எளிதன்று. இப்போதைக்குச் சில படலங்களைக் கண்ட மகிழ்வோடு நிறைவுகொள்வோம்.
இப்போது நீதிபதி சர் எஸ். சுப்பிரமணியம் தலைமைதாங்கிய 'திருவள்ளுவர் திருநாள்' பொதுக்கூட்டத்திற்கு வந்துசேர்வோம். இந்தத் திருநாள் கொண்டாட்டத்திற்குத் திருவாவடுதுறை ஆதீனத்தார் திருக்குறளின் அதிகாரங்களைக் குறிப்பிடும் வகையில் 133 ரூபாய் கொடை வழங்கியிருந்தனராம். அந்தக் காலத்தில் 133 ரூபாய் என்பது மிகப்பெரும் தொகை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்தக் கூட்டத்தில் தியாகசீலர் வ.உ. சிதம்பரனார் இப்படிப் பேசி முடித்தார்:
'இது ஒரு காலத்தில் ஒரு தேசத்திற்கு மட்டும் பொருந்தியதல்ல. நாகரிகம் நிறைந்த இராஜ்யங்கள் எல்லாவற்றிற்கும் திருவள்ளுவரின் குறள் சிறந்த சாஸனமாகவேயிருக்கும்.
'ஜாதி வேற்றுமையைப்பற்றி நாம் கொண்டிருக்கும் அவிவேகத்தைக் குறள் 2000 வருடங்களுக்கு முன்னேயே போக்கி நமக்கு ஞானத்தைக் கொடுத்தது. ஆனால் அதற்குப் பாத்திரர்களாகாமல் இன்னும் அஞ்ஞானத்திலேயே அமர்ந்திருக்கிறோம்.'
கால, தேச எல்லைக்கோடுகளைக் கடந்தது திருக்குறள் என்பதையும், திருக்குறளை வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்தால் சாதி வேற்றுமையோடு நாம் இருந்திருக்க மாட்டோம் என்பதனையும் வ.உ. சிதம்பரனார் அழுத்தமாக எடுத்துரைத்திருந்தார்.
'சுதேசமித்திரன்' ஆசிரியர் ஏ. அரங்கசாமி அய்யங்கார் பேசிய பேச்சு நம் காலத்தில் நடந்தேறிய பெரும் பணியொன்றிற்கு விதைபோடுவது போல அமைந்திருந்தது.
'இன்று நாம் கூடிக் கொண்டாடும் உற்சவத்திற்குக் குறளே பிரதானம். நாட்டுக்கு வேண்டிய சகல விஷயங்களும் குறளில் பொருந்தியிருக்கின்றன. குறள் அடிகள் தமிழ்நாட்டிற்கு உபயோகப்படுவது போலவே, எல்லா நாடுகளுக்கும் உபயோகப்படக் கூடியன. குறளை ஆங்கிலேயத்தில் மொழிபெயர்த்திருப்பதுபோல் இந்தியாவில் நடமாடிவரும் எல்லா சுயபாஷைகளிலும் மொழிபெயர்த்து பிரசுரம் செய்யும்படி நாம் செய்ய வேண்டும். இத்துடன் திருவள்ளுவர் மண்டபம் ஒன்றுவேண்டும்.'
திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்னும் சீரிய சிந்தனையை உரையில் வெளிப்படுத்தியிருந்தார் அவர். பிறிதொரு முக்கியமான விருப்பத்தைத் 'திருவள்ளுவர் மண்டபம் ஒன்று வேண்டும்' எனத் தம் உரையில் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் தமிழக முதல்வராக இருந்த கலைஞரின் முயற்சியில் உருப்பெற்ற 'வள்ளுவர் கோட்டத்'தை எண்ணிப்பாருங்கள். 'சுதேசமித்திரன்' ஆசிரியர் கண்ட கனா நனவாகிவிட்டதே பெரிய அளவில்!
இந்திய அளவில் காங்கிரசின் தலைவராகும் வண்ணம் தகுதிகொண்ட பேராளுமை அன்னி பெசண்ட். அந்த அன்னி பெசண்டும் திருவள்ளுவர் திருநாள் பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். தலைவர் உட்பட அனைவரும் தமிழில் பேசினர். 'சுயபாஷையைப் பின்பற்றுதலே நாட்டின் எழுச்சிக்கு அறிகுறியாம்' என ஆங்கிலத்தில் பேசினாராம் அன்னி பெசண்ட்.
இப்போது தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் திருக்குறள் குறித்த திருப்புமுனைச் சிந்தனைகளை ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்திய தலைமை உரையைப் பார்க்கலாம்.
இன்றைக்கும் திருவள்ளுவரைக் கிறித்தவத்துக்குள் கிடத்தும் முயற்சிகளும் வள்ளுவரை வடமொழிக்குள்ளிருந்து கண்டெடுக்கும் முயற்சிகளும் இல்லாமல் இல்லை எனும் துயர்சுமந்த சூழலில் உண்மையை உரத்துச் சொன்ன சர் எஸ். சுப்பிரமணிய ஐயர் மகான்தான்! மாமுனிவர்தான்! என்பதைத் தமிழச் சாதி உணரவேண்டும்.
இப்போது சர் எஸ். சுப்பிரமணிய ஐயரின் வடமொழி ஈடுபாட்டை, சமஸ்கிருத ஞானத்தை நினைவூட்டிக் கொள்ளுங்கள். அரைகுறையாகச் சமஸ்கிருதம் கற்ற, ஆங்கில வழிச் சமஸ்கிருதம் கற்ற இற்றைநாள் மனிதரல்லர் அவர்.
அவருடைய தலைமையுரையின் மையப் பகுதியை மனங்கொள்வோமா?
'அவருடைய (திருவள்ளுவருடைய) விசேஷகரமான உபதேசங்கள் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவரால் குறிப்பிடப்பட்டிருப்பவைகளின் எதிரொலியென்று சொல்லப்படுகிறது. இது ஆச்சரியத்தை விளைவிக்கக் கூடியதாகும். இது கீழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு நல்ல விஷயங்களும் மேல்நாட்டின் செல்வாக்கினாலுண்டானதாக எழுதுகிற மேல்நாட்டு சரித்திரக்
காரர்களின் சூழ்ச்சியாகும். அவர்களுக்கு தாங்கள் இந்த தேசத்திற்கு வருவதன் முன் இந்த நாடானது அஞ்ஞானத்தில் அழுந்தி அதிலுள்ளவர்கள் சீர்திருந்தாதவர்களாயிருந்தார்களென்பது அபிப்பிராயம் போலும். சில காலத்திற்கு முன்னிருந்த இக்கொள்கையானது நாளடைவில் மாறுதலடைந்து வருகிறது. இன்னும் காலம் செல்லச் செல்ல அவைகள் அடியுடனொழிந்துவிடும்.
'திருவள்ளுவரின் அறிவானது சமஸ்கிருத பாஷையிலிருந்து உண்டானதாகச் சொல்லப்படுவதும் தவறு. இந்து மதத்தின் கொள்கைகள் முழுமையும் அவர் நன்குணர்ந்தவராயினும் அவருடைய ஞானமானது திராவிடத்தின் மூலமாகவே ஏற்பட்டது என்பதும், தென்னிந்தியாவில் ஆரியர்கள் வருவதற்கு முன்னதாக இருந்த நாகரீகத்தின் பெருமையை அந்த திராவிட நூல்கள் நன்கு விளக்குகின்றனவென்பதும் நிச்சயம். இந்த நாகரீகமானது வியாபிக்கப் பெற்றிருந்த ஜனங்களில் பெரும்பாலோரும் வழங்கிவந்தது தமிழ் பாஷையே.
'கிறித்தவத் தாக்கத்திலோ இந்துமத - சமஸ்கிருதத் தாக்கத்திலோ திருக்குறள் தோன்றவில்லை; திருவள்ளுவரின் ஞானம் திராவிடத்தின் மூலமாகவே ஏற்பட்டது. அந்த திராவிடத்திற்கு அடிப்படை தமிழ்மொழியே! திராவிட கவி - திருவள்ளுவர்' - என்ற ஆழ்ந்த கருத்தை, வள்ளுவச் சுயத்தை உணர்ந்து உணர்த்தியவர் சர் எஸ். சுப்பிரமணிய ஐயர்!
இந்த அரிய வரலாற்றுக்கு ஆதாரம் எது தெரியுமா?
1918 மே மாதம் 27ஆம் தேதி வெளிவந்த 'சுதேசமித்திரன்' நாளிதழ்!
(தொடரும்)