கோலிவுட் ஸ்டூடியோ! | 29-11-2026
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி.

எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும்
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. வட இந்தியப் பெண்ணாக நடித்த அவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த தமிழ்ப் பட வாய்ப்புகள் வரிசை கட்டத் தொடங்கின.
'அயோத்தி'யைத் தொடர்ந்து 'எலக்சன்', 'கிஸ்', '29', 'அப்பாகுட்டி' என அடுத்தடுத்த படங்களைக் கொடுத்த ப்ரீத்தி அஸ்ரானி தற்போது நடிகர் முகேனுடன் இணைந்து 'நிறம்' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
Advertisement
Advertisement
இதுகுறித்துப் பேசிய அவர், 'எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கு நல்ல படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் கதையம்சம் கொண்ட படங்கள் எனக்கு அமைவது சிறப்பாக இருக்கிறது. ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எனக்குத் தொடர்ந்து கிடைக்கும்படியாக எனது நடிப்பை வெளிப்படுத்துவேன்.' எனத் தெரிவித்துள்ளார்.
நடிகனாக இருப்பதற்கு நிறைய ஒழுக்கம் தேவைப்படுகிறது
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது திரைப்படத்தை வெளியிடத் தயாராகியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். தனக்கே உரிய தனித்துவமான உருவாக்கத்தால் கவனம் பெற்ற மிஷ்கின், இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.
'நந்தலாலா', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சவரக்கத்தி', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாவீரன்', 'ஐ அம் கேம்' என எண்ணற்ற படங்களில் நடித்த மிஷ்கின் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'ட்ரைன்' திரைப்படத்தில் பிஸியாகியிருக்கிறார். ரயிலில் நடக்கும் கதையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள மிஷ்கின் நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 'நடிகர்களை அவர்கள் போக்கில் நடிக்க விடுவதே எனக்கு வசதியாக இருக்கிறது. நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். நடிகனாக இருப்பதற்குக் கவலையாக இருக்கிறது. நேர மேலாண்மை செய்வது கடினம். இந்த பிப்ரவரியுடன் நடிப்பதை நிறுத்தி விடலாமா எனத் தோன்றுகிறது. நடிகனாக இருப்பதற்கு நிறைய ஒழுக்கம் தேவைப்படுகிறது' எனத் தெரிவித்தார்.
இந்தக் கதை எனக்கு நல்ல வெற்றியைக் கொடுக்கும் 'சீன்' திரைப்படம் கொடுத்த வெற்றி நடிகர் சூர்யாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தாண்டு வெளியான அவரது திரைப்படங்களான 'கருப்பு', 'விஸ்வநாதன் & சன்ஸ்', 'சீன்' ஆகிய மூன்று திரைப்படங்களுமே நல்ல வெற்றி பெற்ற நிலையில் தனது அடுத்த திரைப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர்.
ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேலுடன் மீண்டும் இணைந்துள்ள நடிகர் சூர்யா அத்திரைப்படத்துக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கெனவே 3 கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் 4 ஆம் கட்டப் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
மருத்துவத்துறையை மையமிட்ட இந்தக் கதை தனக்கு நல்ல வெற்றியைக் கொடுக்கும் என உறுதியாக நம்பும் சூர்யா இத்திரைப்படத்தை விரைந்து முடித்து திரைக்குக் கொண்டு வர உழைத்து வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபிகா படுகோனேவின் தடுமாற்றம்...
இன்றைக்குத் திரையில் பார்க்கும் நடிகர்கள் பலரும் தங்களது தொடக்க காலத்தில் நடிப்பு வகுப்புக்குச் சென்றவர்கள்தான். அப்படி தன்னிடம் நடிப்பு வகுப்புக்கு வந்த இன்றைய பிரபல நடிகை தீபிகா படுகோனே குறித்த தகவலைப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் அனுபம் கெர்.
கோவாவில் நடைபெற்று வரும் 2026 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய அனுபம் கெர், 'தீபிகா படுகோன் என்னிடம் 3 மாத காலம் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டார். அப்போது அவர் பிரபலமான மாடலிங்காக இருந்தார். ஷாருக்கானுடன் நடிக்க உள்ள படத்துக்காக அவர் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாக அவரை நடிக்கச் சொன்னபோது சற்றுத் தடுமாறினார். தொடர்ச்சியாக, அவரை சரியாக செய்யச் சொன்னபோது அவர் அழத் தொடங்கிவிட்டார். ஒருகட்டத்தில் மிகச்சரியாகச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.' எனத் தெரிவித்தார். 'சித்திரமும் கைப்பழக்கம்' என்பதை சும்மாவா சொன்னார்கள்...