அன்பிற் சிறந்த தவமில்லை
தூங்கச் செல்வதற்கு முன் வாசற்கதவைப் பூட்டிச் செல்லலாம் என்று எழுந்தேன்.
நிரஞ்சன் பாரதி
இரவு பத்தரை மணி.
தூங்கச் செல்வதற்கு முன் வாசற்கதவைப் பூட்டிச் செல்லலாம் என்று எழுந்தேன்.
Advertisement
Advertisement
வெளியே கிடந்த செருப்பொன்றின் மீது அதுவரை பார்த்திராத அயற்பொருளொன்று தென்பட்டது.
கிட்டே சென்று பார்த்தேன். ஓர் அணிற்குஞ்சு.
அதனிடத்தில் அசைவே இல்லை. இறந்து கிடக்கிறதோ என்று பதறிவிட்டேன்.
கடவுளின் நாமம் சொல்லி அதைத் தொட்டுப் பார்த்த போது லேசாக அசைந்தது. அப்போது தான் எனக்கே உயிர் வந்தது.
கையுறை அணிந்து அதை உள்ளங்கையில் ஏந்திக் கொண்டேன்.
பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தை.
நாலு காலும் ஒரு வாலும் உடைய கண் திறக்காத கைக்குழந்தை.
அணில்களுக்கும் நமக்கும் பன்னெடுங்கால பண்பாட்டு இதிகாச வரலாற்றுத் தொடர்புண்டு.
'இராம காதையில் வானர சேனை கடலில் அணை கட்டிய போது, தானும் உதவ வேண்டி ஓர் அணில் சிறிது மணலை தன் முதுகில் சுமந்து வந்து கொட்டியதாம். அதைக் கவனித்த இராமர் கனிவோடு அதன் முதுகில் தடவியதால் அதற்கு மூன்று கோடுகள் உண்டானதாம்.'
இப்படி ஒரு தொன்மக் கதை நம்மிடையே உண்டு.
இந்தத் தொன்மத்தை இராமாயணத்தில் சேர்த்த பெருமை நம் தமிழ் நிலத்தையே சாரும்.
அதைச் செய்த புண்ணியத்துக்குரியவர் தொண்டரடிப்பொடியாழ்வார்.
குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
குறுந்தொகையின் நாற்பத்தோராவது பாடலை எழுதிய புலவரின் பெயர் தெரியாததால் , அரசுப்புலவர் பூரிக்கோ, அந்தப் புலவருக்கு அணிலாடும் முன்றிலார் என்றே பெயர் சூட்டினார். அதற்கு அந்தப் பாடலில் இடம்பெற்ற 'அணிலாடும் முன்றில்' என்னும் சொற்றொடரே காரணம்.
தொல்காப்பியர், விலங்குகளின் இளமைப் பெயர்களுக்கான நூற்பாவை எழுதுகையில் அணிலின் குட்டியை 'பிள்ளை' என்று அழைக்கலாம் என்கிறார்.
ஆண் பிள்ளை, பெண் பிள்ளை, மாப்பிள்ளை போன்ற பயன்பாடுகளை நாம் அறிவோம்.
உயர்திணையாகிய மனிதப் பிறவியோடு தொடர்புடைய 'பிள்ளை' என்ற சொல்லை அஃறிணையாகிய அணிலோடு தொடர்புபடுத்தி நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர்.
உயிரிரக்கமே அவர்களின் உயிரியல்பாய் இருந்துள்ளது என்பதற்கு இதனைக் காட்டிலும் ஒரு சிறந்த சான்று தேவையில்லை.
ஆனால் கருதுவது என்பது வேறு. கருதியதை நடைமுறையில் செய்து காட்டுவது என்பது வேறு.
என் தாயார் அணிற்பிள்ளையை தன் சொந்த பிள்ளையாய்க் கருதி தன் அன்பை அதன் மீது வெளிப்படுத்தவும் செய்தார்.
ஒரு கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி, நீர்த்த பாலை ஒரு மை நிரப்பியில் நிரப்பி அதற்கு வேளை தவறாமல் ஊட்டினார். நான்கு மணி நேரத்துக்கொரு முறை ஊட்ட வேண்டும் என்பது கட்டளை. என் அன்னை அதை ஒவ்வொரு நாளும் செவ்வனே செய்தார். சலிப்போ, சோர்வோ, தொய்வோ அவரிடமிருந்து எந்த ஒரு தருணத்திலும் வெளிப்படவில்லை.
எல்லாப் பெண்களுக்குள்ளும் தாய்மை என்பது அலையடிக்கும் கடலாக எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை அன்று தான் கண்டுகொண்டேன். அந்தக் கடலின் அலைகளால் நனையப்பெறும் உயிர்கள் பெரும் புண்ணியம் பெற்றவை. அந்த உயிர் உயர்திணையா அஃறிணையா என்பது பொருட்டல்ல. அது ஓர் உயிர் என்பதே முக்கியம்.
பத்து நாள்கள் பாலுண்ட பிறகு அணிலின் கண்கள் திறந்தன. அதன் பிறகு என் தாயார் வாழைப்பழத் துண்டுகளை நன்கு மசித்துக் கொடுக்கத் தொடங்கினார். பாலும் பழமும் உண்டு அந்த அணிற்பிள்ளை செழிப்பாக வளர்ந்தது. எங்கள் வீடு முழுக்க ஓடியாடி விளையாடியது. எனக்குள் பனிக்கட்டியாய் உறைந்து போயிருந்த குறளொன்று திடீரென்று அப்போது உருகி வெள்ளமாய் பாயத் தொடங்கியது.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
இன்னோர் உயிருக்கு ஏற்படும் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதாவிட்டால் நமக்கு ஆறறிவிருந்தும் என்ன பயன் என்று கேட்கிறார் வள்ளுவர்.
நம்மை விட அறிவில் குறைந்த உயிர்களின் மீது அன்பு செலுத்தும் போது தான் நம் அன்புக்கு உண்மையிலேயே மதிப்புண்டாகிறது. அப்போதுதான் நமக்குள் இருக்கும் மனிதமும் ஒளிர்கிறது.
கிட்டத்தட்ட மூன்று வார காலம் என் தாய் அந்த அணிலை பேணி வளர்த்த போது இந்தக் குறளின் பொருளாகவே அவர் காட்சியளித்தார்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு அணில் நன்றாகவே வளர்ந்துவிட்டது. இப்போது அது சிசு அல்ல. ஒரு சிறுவன். இனிமேலும் அதை எப்படிப் பராமரிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஊனுண்ணிகளுக்கு இரையாகிவிடும் என்பதால் அதை வெளியே அனுப்பவும் முடியவில்லை.
பிறகு ஓர் அணில் வளர்ப்பு ஆர்வலரைக் கண்டுபிடித்தோம். அவர் அப்போது நான்கு அணில் பிள்ளைகளை வளர்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் பத்திரமாக எங்கள் அணிற்பிள்ளையைச் சேர்ப்பித்தோம். நண்பர்கள் கிடைத்துவிட்டதால் எங்கள் பிள்ளை அங்கு நன்கு வளர்கிறது.
'பிள்ளையை' கொடுத்தனுப்பியதும் என் அம்மாவிடம் கிண்டலாகச் சொன்னேன்.
'அம்மா, பெரிய பெரிய யோகிகள், ஞானிகளுக்கெல்லாம் லேசுல கிடைக்காத அணி(ல்) மா சித்தி உனக்குச் சுலபமா கிடைச்சுடுச்சு.'
'எப்படிடா?'
'அன்பால மா.'
'அட போடா' என்று அம்மா சொல்லிவிட்டுப் போனதும் தோன்றியது.
அன்பினும் பெரிய 'சித்தி' உண்டோ?