கொலுவில் மிளிரும் கலை
தென்னிந்தியாவில் மட்டுமே நவராத்திரியின் போது வீடுகளில் கொலு வைக்கும் வழக்கம் உள்ளது.
- பார்வதி ரமேஷ்
நூறாண்டு காணும் பொம்மைகள்
தென்னிந்தியாவில் மட்டுமே நவராத்திரியின் போது வீடுகளில் கொலு வைக்கும் வழக்கம் உள்ளது. அதிலும், கேரளத்தில் கொலு வைப்பதில்லை. மூன்று நாள் கொண்டாட்டம் மட்டும்தான். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே நவராத்திரி கொலு ஆண்டுதோறும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
Advertisement
Advertisement
வடஇந்தியாவில் நவராத்திரி உற்சவத்தின்போது, கோயில்களில் உள்ள தெய்வங்கள் - மலைமகள், அலைமகள், கலைமகள் என்று முறைப்படி சிறப்பு அலங்காரங்களும் வழிபாடும் நடக்கும்.
தென்னிந்தியாவில் கோயில்களில் நவராத்தியின்போது, 9 நாள்களில் ஒவ்வொரு நாளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிறத்தில் உற்சவருக்கு பட்டாடை அணிவித்து, அலங்காரம் செய்வார்கள். வீடுகளில், அவரவர் நிதி வசதிக்கு ஏற்ப கொலு வைப்பார்கள்.
வீட்டின் அளவைப் பொறுத்து கொலு படிகள் எண்ணிக்கையில் மாறும். கொலு பார்க்க உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தினருடன் வந்து போவார்கள். கொலு பார்க்க வரும் பெண்களுக்கு ஜாக்கெட் துணி வழங்குதல், சிறுவர்களுக்கு இனிப்புகள் என ஒரு பக்கம் கொண்டாட்டங்கள் தனியாக நடக்கும்.
கொலு வைக்கும் குடும்பத்தினர் ஆண்டுதோறும் கொலுவில் புதுமை செய்ய ஆசைப்படுவார்கள். குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு இந்த ஆர்வம் அதிகம். கொலுவின் நடுவே பார்க் அமைப்பார்கள். சிலர் மலைக்கோயிலை சித்திரிப்பார்கள். சிலர் இக்கால பாஷன் ஷோ போல பல ஆடைகள் அணிந்த பொம்மைகளை அமைப்பார்கள். பொம்மைகளும் அந்தந்த ஆண்டுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். புதிதாக பொம்மைகள் வந்து சேரும்.
கொலு படிகளில் ஒரு காலத்தில் இசைத்தட்டு பொம்மைகள் இருந்தன. பிறகு டேப் ரெக்கார்டர். இப்போது செல்போன், டி.வி. பார்க்கும் குடும்பம் பற்றிய கொலுபொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சுப்பராயன் சந்தானம் அவர்கள் வீட்டில் வைத்திருந்த கொலுவை, விஜயதசமிக்கு முன்னாள் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த கொலு மிகச் சிறியது. ஆனால், என்னை வசீகரித்தது. அந்தச் சிலைகளின் அழகு நான் இதுவரை வேறெந்தக் கொலுக்களிலும் காணாத ஒன்று.
அவர்களிடமே இதுபற்றி கேட்டபோதுதான் தெரியவந்தது. இந்தப் பொம்மைகள் அனைத்தும் 1927-ஆம் ஆண்டில் வாங்கப்பட்டு, கடந்த 99 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கொலுவில் வைக்கப்பட்டு வருகிறது.
1927-ஆம் ஆண்டு, கிரீன் ரேடியோ கம்பெனியில் பொறியாளராகப் பணியாற்றினார் எல்.எஸ்.வி. ஈஸ்வர். இவர் மணம்புரிந்த பார்வதி பாலக்காட்டைச் சேர்ந்தவர். அப்போதைய வழக்கப்படி அவருக்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தது.
சென்னைக்குப் புதிது. உறவுகளை அக்கம்பக்கத்து மனிதர்களைத் தெரிந்துகொள்ள அன்றைய உத்தியாக, அவர் மாமியார் ஆதரவுடன் கொலு வைக்க விரும்பினார். அதற்காக பொம்மைகளை இருவரும் தேர்வு செய்தனர். அப்போது தொடங்கிய கொலுவை, தற்போதும் பெரிய மருமகள் வனஜா தொடர்கிறார், அதே பொம்மைகளுடன்.
இந்தப் பொம்மைகள் அனைத்தும் களிமண்ணால் செய்யப்பட்டவை. அன்றைய நாள்களில் ரவிவர்மா போன்ற ஓவியர்கள் வரைந்த தெய்வ உருவங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகச் செய்யப்பட்ட சிலைகள். சிவப்பு, பச்சை, பழுப்பு
நிறம், மஞ்சள் என அடர் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட கலை வடிவங்கள். மேலும் இவை கனமானவை. இப்போதும் வண்ணம் குலையாமல் இருக்கின்றன. முகத்தில் அடிக்கிற பளீச் வண்ணம் இதில் கிடையாது.
சந்தையில் இப்போதும் நவராத்திரியின் போது சிலைகள் கிடைக்கின்றன. கொலு நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. ஆனால், அந்தக் காலச் சிலைகளுக்கு இருக்கும் அழகு தற்போதைய சிலைகளில் இல்லை. இப்போது பெரும்பாலும் காகிதக்கூழால் செய்கிறார்கள். அல்லது பிளாஸ்டிக். இந்த நவீனக் கால நகைகள், சேலைகள் இந்த தெய்வச் சிலைகளிலும் அமைந்து விடுகின்றன. தெய்வச் சிலைகளின் முகச்சாயலும்கூட திரைப்பட நடிகையரின் சாயல் கொண்டுவிடுகின்றன.
சந்தானம் அவர்களது வீட்டுக் கொலுவில் நான் பார்த்தவை நூறாண்டுப் பழைமையான பொம்மைகள் என்பது மட்டுமல்ல. அவற்றில் அக்காலத்தில் ரவிவர்மாவின் ஓவியத்தில் இருந்த நுட்பமும் அழகும் இந்தச் சிலைகளில் முப்பரிமாணம் கொண்டிருந்தது. அந்த நேர்த்திதான் இதன் சிறப்பு.
ஜார்ஜ் டவுன், மயிலாப்பூர், மாம்பலம், திருவான்மியூர், நுங்கம்பாக்கம் தற்போது வாலாஜாபாத் எனப் பல வீடுகளுக்கு குடிபெயர்ந்தபோதும் இந்தச் சிலைகளைப் பத்திரமாகக் கொண்டுவந்துள்ள சந்தானம் குடும்பத்தினரின் பழைமை போற்றும் பண்பும், கலையுணர்வும் பாராட்டுக்குரியவை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.