FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நெகிழும் கிரன்பேடி: சிறை கைதிகளை சீர்திருத்த உதவிய 'விபாசனா'

தற்காலத்தில், நாட்டில் சிறு குற்றங்கள் தொடங்கி, கடுமையான கொலை, கொள்ளைகள், கற்பழிப்புக் குற்றங்கள் வரை மிகுதியாகிவிட்டன.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

தற்காலத்தில், நாட்டில் சிறு குற்றங்கள் தொடங்கி, கடுமையான கொலை, கொள்ளைகள், கற்பழிப்புக் குற்றங்கள் வரை மிகுதியாகிவிட்டன.

தொலைக்காட்சிகளிலும், அச்சு ஊடகங்களிலும் குற்றங்கள் தொடர்பான செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. காவல்துறை நடவடிக்கைகள் காரணமாக, விசாரணைக் கைதிகள், குற்ற தண்டனை பெற்றவர்கள் என பலரும் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.  சமீபகாலமாக சிறைவாசிகளுக்கு காந்திய சிந்தனைகளைக் கற்பித்தல், யோகா, தியானப் பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன. இவையெல்லாம், சிறைவாசிகளிடையே மனமாற்றத்தை ஏற்படுத்துமா? அவற்றால் உண்மையிலேயே அவர்களுக்கும், இந்த சமூகத்துக்கும் பயன் ஏற்படுமா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், டெல்லி திகார் சிறையின் ஐ.ஜி. ஆகப் பணியாற்றிய போது சிறைவாசிகளுக்கு விபாசனா தியானத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தவரும், தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான கிரன்பேடி தனது அனுபவங்களை ஒரு கருத்தரங்கில் உணர்ச்சிபொங்க பகிர்ந்து கொண்டார். அதன் தொகுப்பு:  

""நான் பல்வேறு உலக நாடுகளிலும் இருக்கும் சிறைச்சாலைகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், அவை அனைத்தையும் விட  மிகவும் சவால்கள் நிறைந்தது திகார் சிறைச்சாலை. ஆசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலை திகார் சிறைதான்! 

Advertisement

Advertisement

திகார் சிறையின் ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் நான் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, தினமும் சிறைச்சாலையின் அனைத்து வார்டுகளையும் சுற்றிப் பார்த்து, காவலர்கள், கைதிகள் என அனைவருடனும் நேரடியாக உரையாடுவதுதான். இதனால், சிறைவளாகம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது முதல் சிறைவளாகத்தின் உள்ளே நடக்கும் தாதாக்களின் அட்டகாசம் வரை எல்லாமே என்னுடைய கவனத்துக்கு வந்தன. 

கீழே பணிபுரியும் அதிகாரிகள் அனுப்பும் அறிக்கைகளை மட்டுமே படித்திருந்தால், அவற்றில் பல சீரியசான விஷயங்கள் என்கவனத்துக்கு வராமலே போயிருக்கும். தவிர, சிறைச்சாலை வளாகத்தின் உள்ளே ஒரு நடமாடும் புகார் பெட்டியை அறிமுகப்படுத்தினேன்.  அதன் மூலமாக எவரும் தங்களுடைய பிரச்னைகளை எழுதி, அந்த புகார்ப் பெட்டியில் போட்டு, என்னுடைய உடனடி கவனத்துக்குக் கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டது.  

அந்தப் புகார்ப் பெட்டியின் சாவி என்னிடம்தான் இருக்கும் என்பதால், பலரும் தைரியமாக பல விஷயங்களை எனது கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள்.
இது போன்ற நடவடிக்கைகளால், சிறைக்கைதிகளின் நம்பிக்கையைப் பெற்ற நான், அடுத்து, இவர்களை நல்லவர்களாக வெளி உலகத்துக்கு அனுப்புவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கினேன். அப்போது, தான் கற்றுக் கொண்ட விபாசனா தியானப்பயிற்சியைப் பற்றி ராஜேந்திரகுமார் என்ற சிறை கண்காணிப்பாளர், என்னிடம் குறிப்பிட்டார். 

நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னைக்கு, இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும் எனத் தோன்றியது. அதை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினேன். 

முதல் கட்டமாக, நானும் மற்ற சிறை அதிகாரிகளும் விபாசனா வகுப்பில் பங்கேற்றோம். அடுத்து, நூறு, நூறு பேர்கள் கொண்ட குழுக்களாக சிறை வாசிகளுக்கு விபாசனா தியான வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு விபாசனா தியானம் சொல்லித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில், மிகவும் ஆபத்தானவர்கள் என கருதப்பட்ட இரு கைதிகளை, சங்கிலியிட்டு, தியான வகுப்புக்கு அழைத்து வந்தார்கள். தியான ஆசிரியர், சங்கிலியை அகற்றும்படிக் கூறினார்.  

சிறை அதிகாரிகள் அதற்கு உடன் படவில்லை. கடைசியில், கைதிகளின் சங்கிலிகள் அகற்றப்பட்டன. ஆனால், தியான ஆசிரியருக்குப் பக்கத்தில்  துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் நிறுத்தப்பட்டனர். ஏதாவது பிரச்னை என்றால், அவர்களை சுட்டுக் கொல்லவும் கூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்குத் தேவையே ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆயிரம் பேர் கொண்ட முதல் பயிற்சி வகுப்பு ஆரம்பித்த இரண்டாவது தினம், கடும்மழை, காற்று. நாங்கள் வகுப்பு நடத்துவதற்காக அமைத்திருந்த ஷாமியானா பந்தல் தரையோடு தரையாக விழுந்தது. 

இன்னொரு பகுதி காற்றில்  பறந்தது. விபாசனா தியான ஆசிரியர், பயிற்சி ஆரம்பித்து விட்டால், இடைவெளி இல்லாமல் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். போர்க்கால நடவடிக்கையாக பலரும் உழைத்து, பந்தலை செப்பனிட்டு, தியான வகுப்புகள் தொடர்ந்தன. 

சிறைவாசிகளுக்கு, நாங்கள் தியான வகுப்பை கட்டாயப்படுத்தவில்லை. இது ஒரு புதிய முயற்சி; இந்தப் பரிசோதனைக்கு உங்களை உட்படுத்திக் கொள்ளுங்கள். பிடித்திருந்தால், தொடர்ந்து கடைபிடியுங்கள். வேண்டாம் என்றால், விட்டு விடுங்கள்; சிறையில் இருக்கும் போது, இதை முயற்சி செய்து பார்த்தால் பாதகம் ஒன்றுமில்லை என்ற எனது அணுகுமுறைக்கு, கைதிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விபாசனா பயிற்சி முடிந்த பிறகு, கைதிகளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தபடி, "இது வரை நீங்கள் யார் யாருக்கெல்லாம் கெடுதல் செய்திருக்கிறீர்களோ, மனம் காயம் படும்படி நடந்து கொண்டிருக்கிறீர்களோ, அவர்களிடம் மனமாற மன்னிப்புக் கேளுங்கள்! என்று சொன்னதும், ஆயிரக்கணக் கானவர்கள் மன முருகி கண்ணீர் விட்டார்கள். 

நார்வே நாட்டுப் பிரஜை ஒருவர் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதாகி, சிறையில் இருந்தார். அவரும் விபாசனா தியானம் பயின்றார்.  அதன் பிறகு, அவரது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதியிடம், தான் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டார். 

அவரது வக்கீலுக்கு இது அதிர்ச்சியை அளித்தது. நீதிபதி,  ""நீயாக குற்றத்தை ஒப்புக்கொள்ளும் போது,  உனக்கு பத்தாண்டு சிறை தண்டனை ஊர்ஜிதமாகும் என்பது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டபோது, அவர் சொன்ன வார்த்தைகள் :   ""குற்ற உணர்வுடன் வாழ்வதை விட, குற்றத்தை ஒப்புக்கொண்டு, சந்தோஷமாக தண்டனை அனுபவிப்பதற்கு ஏற்ப நான் மனப்பக்குவம் பெற்றுவிட்டேன்'' என்றார்.

சில அபாயகரமான ரவுடிகள், விபாசனா தியானம் கற்றுக் கொள்ள விரும்பவில்லை.  அவர்களோடு, விபாசன ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் பேசி, அவர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு முக்கிய 
திருப்பம். 

திகார் சிறையில் விபாசனா தியானம் பயிற்றுவிக்கப்பட்டதன் காரணமாக அதனை திகார் ஆசிரமம் என குறிப்பிட  ஆரம்பித்தனர். 

இந்த நிகழ்வினை இஸ்ரேல் நாட்டவர்கள் இருவர் ஓர் ஆவணப்படமாக எடுத்தனர். ஒரு திரைப்படவிழாவில் ஒளிப்பரப்பியபோது அதற்கு விருதும் கூட வழங்கப்பட்டது. 

தியான வகுப்புகள் மட்டுமில்லாமல், தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, எழுத்தறிவு, சுயதொழில் பயிற்சி போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

சிறைக்குள் வந்தபோது சிறை ஆவணத்தில் கைநாட்டு போட்ட சிலர், விடுதலையாகிப் போனபோது, கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது''. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments