மகளிர்மணி

குழந்தையின்மை ஏன் ஏற்படுகிறது?

பவித்ரா


தாய்மை என்பது ஒரு வரம். ஒரு பெண் முழுமையடைவதே அவள் தாய்மை அடையும்போதுதான். முன்னரெல்லாம் 7, 8 குழந்தைகள் பெற்றெடுப்பது மிகவும் சுலபம் என்றிருந்த காலகட்டம் மாறி தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பதே பெரும் சவாலாக மாறியுள்ளது. திருமணம் எனும் இல்லறத்துக்குள் நுழையும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் முதலில் கேள்விக்குள்ளாகும் ஒரு விஷயமாகவே தற்போது இப்பிரச்னை மாறியுள்ளது.

இப்பிரச்னை குறித்தும், இதைத் தீர்க்கும் எளிமையான வழிமுறைகள் குறித்தும் நமக்கு விளக்குகிறார் மருத்துவர் மிருதுபாஷினி கோவிந்தராஜன்.

இவர், மகப்பேறு குழந்தையின்மை சிகிச்சை நிபுணராக 46 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார். லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளித்துள்ள இவர், மெனோபாஸ் மேலாண்மை, கர்ப்பத்துக்கு முந்தைய, பிந்தைய சிகிச்சைகள் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்கா, கனடா நாடுகளில் பணியாற்றியுள்ள இவர் சென்னை ஸ்டான்லியில் மருத்துவம் பயின்றவர். தற்போது கோவையிலுள்ள மதர்ஹூட் மருத்துவமனையின் கிளினிக்கல் டைரக்டராக இருந்து வருகிறார்:

""20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரித்தல் என்பது மிகவும் சுலபமான விஷயமாக இருந்தது. 15 சதவீத தம்பதிகளுக்கு மட்டுமே கருவுறுதலில் பிரச்னை என்பது இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் குழந்தையின்மை என்பது ஒரு பூதாகரமான பிரச்னையாக மாறியுள்ளது. அதற்கு தற்போதுள்ள வாழ்க்கை முறையும் ஒரு காரணம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், கருவுறுதலைத் தள்ளிப்போடும் தம்பதிகள், 30 வயதுக்குமேல் கருவுறுதலுக்கு முயற்சிப்பது, உடல் எடை, உடல்நலக் குறைபாடுகள் போன்றவையே குழந்தையின்மைக்கான முக்கியக் காரணம்.

வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் மாறும்போது சர்க்கரை, ரத்த அழுத்தம், பிசிஓடி போன்ற நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. பள்ளிப் பருவத்தில் உள்ள ஆண், பெண் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கும் பிரச்னை தற்போது அதிகரித்துள்ளது. இந்த எடை அதிகரிப்பும் கருவுறுவதலுக்கான மிகப்பெரிய தடையாக உள்ளது. பிளாஸ்டிக், செயற்கை உரங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் பொருள்களின் பயன்பாடும் இப்பிரச்னைக்கு இன்னொரு முக்கியக் காரணமாக இருக்கிறது.

பொதுவாக மருத்துவத்துறையைப் பொருத்தவரை 25 - 30 வயதுக்குள் கருவுறுவதையே ஆதரிக்கிறோம். 25 - 30 வயதுக்குள் கருத்தரிப்பதுதான் ஆரோக்கியமானதாகும். அந்த வயதைத் தாண்டினாலே கருவுறுதலில் கட்டாயமாகப் பிரச்னை ஏற்படும். 30 வயதுக்குமேல் ஆனாலே கர்ப்பப்பை பிரச்னை, சுற்றுச்சூழலினால் பிரச்னை, ஹார்மோன் பிரச்னை, ஜெனடிக் பிரச்னை போன்றவை அதிகம் ஏற்படும்.

இளம் வயதில் மனித உடலில் முட்டைகளின் உற்பத்தி அதிகமாகக் காணப்படும். ஆனால், வயதாக ஆக அதன் எண்ணிக்கை குறையும். இதில், பெண்ணுக்குப் பிரச்னையா, ஆணுக்குப் பிரச்னையா என்பதை சில பரிசோதனைகள் மூலமாக துல்லியமாகக் கணக்கிட இயலும்.

முந்தைய காலகட்டத்துக்கும் தற்போதுள்ள வாழ்க்கை முறைக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. தற்போது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். ஐ.டி வேலைகளில் உள்ளவர்கள் சிலர் இரவு முழுக்க வேலை செய்கின்றனர். இதுபோன்ற சமூகக் காரணங்களாலும் கருத்தரிப்பில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மாதத்தில் ஒருமுறை ஏற்படும் ஓவுலேஷன் காலம் என்பது தள்ளிப்போவதே பெரும்பாலானவர்களுக்குப் பிரச்னையாக உள்ளது.

தற்போதுள்ள வாழ்க்கை முறையை நாம் கண்டிப்பாக மாற்றியமைக்க வேண்டும். இதை மாற்றினாலே கருவுறுதல் எளிமையாக ஏற்படும். உடல் எடை அதிகரிப்பதையும் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களும் உடல் எடையிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயியாக இருந்தால் செயற்கை உரங்களை கையில் பயன்படுத்துதல் கூட கருத்தரிப்பதற்கு பிரச்னையை ஏற்படுத்தும். வேலையைப் பொருத்தும் கூட கருவுறுதலில் பிரச்னை ஏற்படும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் கட்டாயம் கூடாது.

ஜிம்மில் 4, 5 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் கூட உடலுக்கு கேடுவிளைவிக்கும். புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ் என்பதை இன்றைய இளைஞர்கள் நிறையபேர் பயன்படுத்துகின்றனர். புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸில் ஹார்மோன் கலவை உள்ளது. அதைத் தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர். இதை எடுத்துக் கொள்பவர்கள் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.

உணவு முறையைப் பொருத்தவரை சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமானதாகும். அதிக அளவிலான கலோரிகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பீட்ஸா, பர்கர் சாப்பிடக் கூடாதென்று சிலர் கூறுவார்கள். பீட்ஸா பர்கர் மட்டுமல்ல ஜிலேபி, மைசூர்பா சாப்பிட்டாலும் அதுவும் கலோரிதான். எவ்வளவு சாப்பிடுகிறோம், எப்படிப்பட்ட உணவை சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். அதிக அளவிலான சர்க்கரைப் பொருள்கள், எண்ணெய்ப் பொருள்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தென்னிந்திய உணவு முறை மிகவும் சிறப்பு வாய்ந்தது. காலையில் இட்லி, சாம்பார் என எடுத்துக் கொண்டால் அதில் கார்போஹைட்ரேட், காய்கறிகள், புரோட்டின் என சரிவிகிதமான சக்திகள் கிடைத்துவிடும். இதுபோன்ற சரிவிகித உணவு முறையைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு ஒரு இனிப்பு கடை இருக்கும். ஆனால், இப்போது ஒவ்வொரு தெருக்களிலும் இனிப்பு பலகாரக் கடைகள் உள்ளன. டீ கடைகளில் கீரை வடை கிடைக்கும். ஆனால், இப்போதெல்லாம் அதிகப்படியான எண்ணெயில் சமைக்கப்படும் உணவுகளே கிடைக்கிறது. இப்போது வீடுகளில் ஏதாவது சுபநிகழ்ச்சிகள் என்றால்கூட கேக் வாங்கும் பழக்கம் வந்துவிட்டது. கண்டிப்பாக இது ஆரோக்கியமான பழக்கம் இல்லை. இதை நாம் மாற்ற வேண்டும்.

கருவுறுதலில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஏராளமான வழிமுறைகள் தற்போது வந்துவிட்டன. சில கால அவகாசங்களில் பிரச்னைகளைத் தீர்த்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். 80, 90 காலகட்டங்களில் நான்கு, ஐந்து குழாய்களின் வழியாகத்தான் உடலில் முட்டைகளைச் செலுத்த முடியும். அவை அடைத்திருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால், தற்போது எளிமையாக முட்டைகளை உடலுக்குள் செலுத்தி வளர்த்து வெளியே எடுத்து "டெஸ்ட் ட்யூப் பேபி'யை உருவாக்க முடியும்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவத் துறையில் இந்த முட்டையை யாரும் பார்த்திருக்கவில்லை. ஆனால், தற்போது அறிவியல் துறையின் வளர்ச்சியின் காரணமாக இவை எல்லாம் சாத்தியாமாகியுள்ளது. தற்போது குழந்தையின்மை என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில் அனைத்துத் தொழில்நுட்பங்களும் உள்ளன.

கர்ப்பப்பையில் வரும் பிரச்னைகள், கர்ப்பப்பை குழாய் அடைப்பு போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் தற்போது அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவம் உள்ளது. முன்னரெல்லாம் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் ஒரு வயதுக்குமேல் எந்த மருத்துவமும் செய்ய இயலாது. ஆனால், தற்போது ஒரு சில அணுக்களை வைத்தே குழந்தையைப் பெற்றெடுக்கும் ஏராளமான மருத்துவ முறைகள் வந்துவிட்டன. எனவே, குழந்தை இல்லை என்ற மனக்கவலை யாருக்கும் வேண்டாம்.

பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், சாதாரண காலகட்டத்திலேயே தொற்று நோய்கள் கர்ப்பிணிகளுக்கு வருவது வழக்கம். சாதாரண மனிதர்களுக்கு வரும் எந்த நோய்த் தொற்றும் கர்ப்ப காலத்தில் பெண்களை பாதிக்கலாம். கர்ப்பப் பையின் உள்ளே வரும் நோய்த் தொற்றுகளைத் தவிர மற்ற அனைத்து வகையான நோய்த் தொற்றுகளும் எந்த காலத்திலும் ஏற்படலாம்.

கரோனா தொற்று நோய் என்பதால் கண்டிப்பாக கர்ப்பிணிகளைத் தாக்கக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியில் செல்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளும், அவர்களது குடும்பத்தினரும் கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி குமரிக்கு வருகை: தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது -காங்.

கோட்டையில் இளவரசி ‘அபிநயா’...!

திரைப்படம் எடுக்கும் வரை காந்தியை யாருக்கும் தெரியாது: மோடி!

புணே சம்பவம்: தலைமை மருத்துவ அதிகாரி பணி நீக்கம்!

வெளியானது ‘சூர்யா 44’ படக்குழு விவரங்கள்!

SCROLL FOR NEXT