92 வயது ரகசியம்!
தொண்ணூற்று இரண்டு வயதிலும் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகிறார் செல்லம்மாள்.
தொண்ணூற்று இரண்டு வயதிலும் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகிறார் செல்லம்மாள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் மறைவுற்றபோதும், வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டார். இவர்களது நான்கு மகள்களும் ஒரு மகனும் சென்னையிலேயே தங்கள் குடும்பத்தினருடன் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
செல்லம்மாள் தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் உள்ள வீட்டிலும் தனியாகத் தங்கி, தனது அன்றாட வேலைகளைத் தானே செய்கிறார். இந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக வாழ்வது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இவர் இளம் வயதிலிருந்தே 'குரோஷே' கைவினைக் கலையில் ஆர்வம் கொண்டவர். எனவே ஸ்வெட்டர், தொப்பி, கைப்பை, பர்ஸ், பாய், சுவர் அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி வருகிறார். இந்தக் கலையைப் பணம் எதுவும் பெறாமல், தஞ்சாவூரில் பலருக்கு இலவசமாகப் பயிற்றுவித்தும் வருகிறார்.
Advertisement
Advertisement
'வயது என்பது ஒரு எண் மட்டுமே; மனதில் தன்னம்பிக்கையும், வாழ்க்கையில் ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்' என்பதற்கு உதாரணமாகத் திகழும் செல்லம்மாளிடம் பேசியபோது:
'எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன். என் வேலைகளை நானே செய்வேன். நல்ல எண்ணங்களுடன் வாழ்வதே என் ரகசியம். அதிகாலையிலேயே கண் விழித்து, இறைவனை வணங்குவேன். பிறகு வீட்டின் வாசலில் கோலம் போடுவேன். மார்கழி மாதத்திலும் அதிகாலையிலேயே பெரிய வண்ணக் கோலங்களைப் போடுவேன். கோலம் போடும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். கோலம் என்பது ஒரு கலை, ஒரு வழிபாடு; வீட்டுக்கும், சுற்றுப்புறத்துக்கும் அழகைச் சேர்க்கிறது.
முடிந்தவரை என் சமையலை நானே செய்து சாப்பிடுவேன்.
அளவான உணவு, ஒழுங்கான வாழ்க்கை, மன நிம்மதி ஆகிய மூன்றும்தான் எனது ஆரோக்கியத்தின் ரகசியம். சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய் போன்ற பிரச்னைகள் இல்லாமல் வாழ்கிறேன்.
உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டும் என்று ஆர்வம் உள்ளதால், தினமும் செய்தித்தாள்களைப் படிப்பேன்.
சென்னையில் மகன் வீட்டிலும், தஞ்சாவூரில் இருக்கும் என் சொந்த வீட்டிலும் தனியாகத் தங்குவேன். தனியாக இருப்பதில் அச்சமில்லை. தன்னம்பிக்கை இருந்தால் பயம் வராது.
திருமணம், பிறந்தநாள், குடும்ப நிகழ்ச்சிகள் என்று முடிந்தவரை எல்லாவற்றிலும் கலந்துகொள்வேன். மனம் இளமையாக இருந்தால் வயது ஒரு எண்ணே.
கைவினைக் கலை
நான் சிறுமியாக இருந்தபோதே 'குரோஷே' கலையைக் கற்றுக்கொண்டேன். ஸ்வெட்டர், குல்லா (தொப்பி), கைப்பை, பர்ஸ், பாய், பொம்மைகள், சட்டை, சுவர் அலங்காரங்கள் உள்ளிட்ட பல வகையான பொருள்களைச் செய்கிறேன். இந்தக் கலை அழியாமல் இருக்க, மற்றவர்களுடன் இலவசமாகப் பயிற்றுவிப்பதில் எனக்கு மனநிறைவு கிடைக்கிறது.
யாராவது சொல்லிக் கொடுத்தால், இருசக்கர வாகனம் கூட ஓட்டிப் பார்க்க ஆசை இருக்கிறது. இளம்பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஒரு கைவினைக் கலையாவது கற்றுக் கொள்ளுங்கள். அது வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் துணையாக இருக்கும்' என்கிறார் செல்லம்மாள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.