சமையல்...சமையல்...: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் சீடை வகைகள்.
வெல்லச் சீடை
தேவையான பொருள்கள்:
அரிசி மாவு - 1 கிண்ணம்
Advertisement
Advertisement
வறுத்த உளுந்த மாவு, நெய்- தலா1 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
வெள்ளை எள்- சிறிதளவு
வெல்லம் - 1/2 கிண்ணம்
எண்ணெய், ஏலக்காய்த் தூள் - தேவையான அளவு
செய்முறை: அரிசி மாவை சல்லடையில் சலித்து, அதனுடன் உளுந்த மாவு, ஏலக்காய்ப் பொடி, தேங்காய், நெய், வெள்ளை எள் ஆகியவற்றைக் கலக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீரைவிட்டுக் காய்ச்சி, வடிகட்டி , கலந்த மாவில் ஊற்றி, கெட்டியாகப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, துணியில் 5 நிமிடம் உலர்த்தவும். வாணலியில் இளஞ்சூடாக எண்ணெய்யைக் காயவைத்து, உருண்டைகளைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பொரித்தெடுக்கவும்.
உப்புச் சீடை
தேவையான பொருள்கள்:
அரிசி மாவு - 6 டம்ளர்
உளுந்து மாவு -1 டம்ளர் (வறுத்தது)
எள்ளு - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 50 கிராம்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும், அரிசி மாவைப் போட்டு, 5 நிமிடம் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் உளுந்து மாவு, உப்பு, எள்ளு, வெண்ணெய், பெருங்காயம், சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துப் பிசையவும். சீடை வெடிக்கமால் இருக்க, ஒரு துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும். இதனால் உருண்டைகள் உலர்ந்துவிடும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யைக் காய வைத்து, எண்ணெய் கொள்ளும் அளவுக்குச் சீடையைப் போட்டு மீடியம் தீயில் பொரித்து எடுக்கவும்.
தேன்குழல் முறுக்கு
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 4 கிண்ணம்
வெள்ளை உளுந்து - 1கிண்ணம்
வெண்ணெய்,எள் - தலா1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: அரிசியை நன்றாகக் களைந்து, 6 மணி நேரம் வெயிலில் காய வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் உளுந்தைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். எக்காரணத்தைக் கொண்டும், உளுந்தை நிறம் மாறும் வரை வறுக்கக் கூடாது. பிறகு அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக முறுக்குப் பிழியும் பதத்துக்கு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கலந்துகொண்டு, வெண்ணெய், எள், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும், தேன்குழல்முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து எண்ணெய்யில் போட்டு, மிதமான தீயில் வைத்து,
சடசடப்பு அடங்கிய சிறிது நேரத்தில், வெள்ளை நிறம் மாறுவதற்கு முன்பே தேன்குழல் முறுக்கை எடுத்துவிட வேண்டும்.
தட்டை
தேவையான பொருள்கள்:
அரிசி மாவு - 1 டம்ளர்
உளுந்து - 2 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை, கடலைப்பருப்பு -தலா 2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள், எள் -தலா 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும், அரிசி மாவை ஈரப்பதம் போக நன்றாக வறுக்கவும். உளுந்தையும் வாசனை வரும் வரை வறுத்து, பொட்டுக்
கடலையுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும். கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயை மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன், அரிசிமாவு, அரைத்த உளுந்து மற்றும் பொட்டுக்கடலை, பொடிப்பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், ஊறவைத்த கடலைப்பருப்பு, எள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தி தேய்க்கும் பலகையில் சிறிது எண்ணெய் தடவி, தட்டையாக தேய்த்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், தணலை மிதமாக வைத்து,தட்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
-சௌமியா சுப்ரமணியன், பல்லாவரம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.