FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

'ஜூட்வாலி' என்கிற அஞ்சலி...!

அந்தச் சிறிய அறையின் சுவரில் ரோஸ் நிற சாட் பேப்பரில், ஊதா நிற மையில் 'முதலில் ஒரு பையைச் செய்து அலுவலகத்தில் காட்டவும்.

10 அக்டோபர் 2026, 8:26 pm IST
பகிர்:

பொருநை வளவன்

அந்தச் சிறிய அறையின் சுவரில் ரோஸ் நிற சாட் பேப்பரில், ஊதா நிற மையில் 'முதலில் ஒரு பையைச் செய்து அலுவலகத்தில் காட்டவும். அதன் பிறகு வேலையைத் தொடரவும்' என்று எழுதி ஒட்டி இருக்கிறார்கள். கண்களில் நம்பிக்கையுடன், செயலில் முனைப்புடனும் கவனத்துடனும் சுமார் 15 முதல் 20 பெண்கள் வரைஅந்த அறையில் அமர்ந்து பணிபுரிகிறார்கள். இதுபோல எல்லா அறைகளிலும் அந்த வாசகம் எழுதப்பட்ட சார்ட் ஒட்டப்பட்டிருக்கிறது.

'ஜூட் ஃபார் லைஃப்' என்கிற முத்திரை வாசகத்துடன் மானசீகமாக இணைந்திருக்கிறார்கள் அவர்கள். அவர்களைச் சுற்றிலும் கைப்பைகள், தோள்பைகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், மடிக்கணினிப் பைகள், அலுவலகப் பொருள்கள், பாட்டில் உறைகள் எனச் சணலில் இருந்து பல வடிவங்கள் பெற்று பரந்து விரிந்துள்ளன. அத்தனையும் ஒரு பெண்ணின் எண்ணத்தில் பளிச்சிட்ட ஒரு சிந்தனைப் பொறி.

Advertisement

Advertisement

எல்லோரும் பிரியத்துடன் 'ஜூட்வாலி' என்று அழைக்கும் அவரின் இயற்பெயர் அஞ்சலி சிங். தனது தகப்பனாரிடம் உதவி கேட்டு வந்த இரண்டு பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்கிற புள்ளியில் துவங்கியது இந்தப் பெருங் கனவு. தனது தந்தை எம்.பி.சிங்கை ரோல் மாடலாக ஏற்று, ஒற்றை இயந்திரத்துடன் ஒற்றை மனுஷியாகத் தொடங்கிய பயணம், இன்று 740 இயந்திரங்களுடன் ஏராளமான பெண்களின் பொருளாதார சுய சார்புக்கு வழிகோலியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்படி (பிஎம்ஈஜிபி) 2013-ஆம் ஆண்டு 13 லட்சம் ரூபாய் கடனுதவி பெற்று, இன்று தினமும் 250 நபர்களுக்கு மேல் பணி செய்யும் ஒரு தொழிற்கூடத்தை உருவாக்கியுள்ளார்.

மரங்கள் சூழ்ந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ள அந்தத் தொழிற்கூடம் முற்றிலும் சுற்றுச்சுழலுக்கு நட்புறவாக இருக்கும் சணல் பொருள்களை உற்பத்தி செய்து வருவதால், இந்தத் தொழிற்கூடம் அமைந்திருக்கும் பகுதி பொருத்தமாகத்தான் உள்ளது. தொழில்துறை சாதனைகளைத் தாண்டி, இந்த முயற்சி குறிப்பிடத்தக்க சமூகப் பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கியதுடன், அவர்களிடையே நிதிச் சுதந்திரத்தையும் வளர்த்துள்ளது. இதன் மூலம் கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய இலக்குகளுக்கும் பங்களிப்பு ஏற்பட்டுள்ளது.

'மற்றவர்களுக்கு உதவுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், சமுதாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் வகையில் ஏதாவது செய்ய விரும்பினேன். 2010-ஆம் ஆண்டில், நெகிழியை (பிளாஸ்டிக்) ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு அப்போதுதான் தொடங்கியிருந்தது. அதுவும் ஒரு காரணமாக இருந்தது, என் முயற்சிகளுக்கு அது ஒரு கூடுதல் ஆதரவாக அமைந்தது' என்கிறார் அஞ்சலி சிங். சவாலில் இருந்துதான் சாதனை தொடரும் என்பதற்கு இதுவே சாட்சி.

'செய்த பொருள்களையெல்லாம் எப்படிச் சந்தைப்படுத்துகிறீர்கள்?' என்று கேட்கும்போது, 'சந்தையின் தேவைகளை உறுதிப்படுத்திய பின்னரே நாங்கள் பொருள்களைத் தயாரிக்கிறோம்' என்று புதிய சிந்தனையை வெளிப்படுத்துகிறார் இந்த சணல் தேவதை.

இவர் சொல்வதற்குக் கட்டியம் கூறுவதுபோல் தெரிகிறது சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் சணல் கயிறால் செய்யப்பட்ட விநாயகர் முகம். அந்த யானை முகம், விநாயகர் சதுர்த்திக்காக கனடா நாட்டுக்குத் தயாரித்து அனுப்பியதன் மாதிரிகளில் ஒன்று எனப் பெருமிதப்படுகிறார்.

நமது தேசத்துத் தேவைகள் ஏராளம் இருப்பதாகக் கூறும் அஞ்சலி, இணைய முறையிலான வியாபாரத் தளங்கள் வழியாக இப்போதும் பல நாடுகளில் இருந்து வரும் கேட்புகளுக்கு ஏற்றபடி இவரது சணல் பொருள்கள் கடல் தாண்டிச் செல்கின்றன.

'உங்களிடம் உள்ள குறைந்த விலை பொருள் என்ன?' என்று கேட்டால், 'அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்கிறார். 'பத்து ரூபாய்க்குக் கூட என்னால் பை செய்து தர முடியும்' என சவாலுடன் உறுதியளிக்கிறார்.

பார்க்கலாம், நாளை ஜென் ஆல்ஃபாவினர் சணல் கொண்டு ஆடை நெய்து அதையும் அணிந்து வந்தாலும் வருவார்கள். அப்போது அவர்களுக்கும் உடை வடிவமைத்துக் கொடுப்பார் இந்த சாதனைப் பெண்.

2021-ஆம் ஆண்டு அரசு அளித்த சுமார் ரூ.4.47 கோடி நிதியுதவி மூலம் லக்னோ பல்வகைப் பொருள்கள் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது நாட்டின் மிகப் பெரிய 'சிஎஃப்சி' எனப்படும் பொது வசதி மையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சலியின் தொழிற்கூடங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்தே உற்பத்தி செய்துகொள்வதால், அதிலும் சுயசார்பை நிலைநாட்டியுள்ளார்கள்.

லக்னோ பல்கலைக்கழகத்தின் 'வெஸ்ட்டர்ன் ஹிஸ்ட்டரி' துறையில் இருந்துதான் அஞ்சலி சிங்குக்கு சிறிய அளவில் முதல் ஆர்டர் கிடைத்துள்ளது. தேவைகளை அறிந்த பின்பே தயாரிப்புகளைத் தொடங்குவதால், அஞ்சலி சிங் மொத்தமாகத் தயாரித்து கையிருப்பு வைப்பதில்லை.

கடந்த 16 ஆண்டுகளில் 'வேலை இல்லை, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறும் நிலை வந்ததில்லை எனவும், வருடத்தின் 365 நாள்களும் பிஸியாகவே இருப்பதாகவும், குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வரும் மார்ச், ஏப்ரல் வரை கைவினைஞர்களுக்கு ஓய்வெடுக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட கிடைக்காத அளவுக்கு அதிக ஆர்டர்கள் இருப்பதாகப் பெருமிதப்படுகிறார் இந்த 'ஜூட்வாலி'.

பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், தேசிய சணல் வாரியம், ஜவுளி மற்றும் துணிநூல் அமைச்சகம், பாரம்பரிய தொழில்களின் மறுமலர்ச்சிக்கான நிதித் திட்டம் என எல்லோரும் இணைந்து களம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் களத்தில் கொல்கத்தா, தில்லி, தமிழகம் என மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட மூலப் பொருள்கள் உத்தரப் பிரதேசத்தில் உருவம் பெறுவது இன்னொரு தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஆதாரம்.

'மொத்தமாக ஆர்டர் கிடைத்தால் உங்களால் சமாளிக்க என்ன திட்டங்கள் இருக்கிறது?' என்று கேட்டதற்கு, 'அந்த நாளுக்காகக்தான் நாங்கள் காத்திருக்கிறோம். எங்களின் அலுவலகத்துக்கு வந்து பணி செய்யும் பெண்கள் போலவே, வீடுகளில் எந்திரத்துடன் இருக்கும் எங்களது பெண்களுக்கும் இடைவிடாத பணி கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம்' என்கிறார் அஞ்சலி சிங்.

உத்தரப் பிரதேசத்தின் பெண்கள் மட்டுமல்லாது தேசத்தின் எல்லா பகுதிகளில் இருக்கும் பெண்களும் சுயசார்பும், பொருளாதார சுதந்திரமும் பெற வேண்டும் என்பதைத் தனது பரந்த எண்ணமாக வைத்திருக்கிறார்.

'விமானப் பயணிகளுக்கு சேவையாற்றும் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும்' என்கிற கனவுடன் இருந்த ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி, இன்று ஆயிரக்கணக்கான பெண்களை பொருளாதார வானில் சுதந்திரமாகப் பறக்கவிட்டிருக்கிறார். சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட அரசு கொள்கைகள் திறம்படச் செயல்படுத்தப்படும்போது பெண்கள் கையை உயர்த்தி விண்ணதிர வெற்றிக் கோஷமிடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments