3 வயது... 45 மாரத்தான்கள்!
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஜெகதீஷ் - ரம்யா தம்பதியரின் இரண்டாவது மகள், ரிபாக்ஷாலின் விர்ஷா.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஜெகதீஷ் - ரம்யா தம்பதியரின் இரண்டாவது மகள், ரிபாக்ஷாலின் விர்ஷா. மூன்றே வயதான இவர் இதுவரையில் 45 மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கொல்வேலி கார்மல் மெட்ரிக் பள்ளியில் பிரிகேஜி படித்து வரும் ரிபாக்ஷாலின் விர்ஷா தனது மழலைக் குரலில், 'ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும்'' என்கிறார்.
தங்களது மூன்று பெண்குழந்தைகளையும் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளைப் புரிய வைக்கவேண்டும் என்பதே இவர்களின் பெற்றோரின் கனவு. அதனை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஜெகதீஷ் கூறியது:
Advertisement
Advertisement
'இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அதிகாலை 5 மணிக்கு ரிபாக்ஷாலின் விர்ஷாவுக்கு நானே பயிற்சியளித்து வருகிறேன். பயிற்சிக்குப் பின்னர் குழந்தைக்கு ஓய்வு கொடுத்து, பின்னர் பள்ளிக்கு அனுப்புகிறோம்.
குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது, மதுரையில் நடைபெற்ற 5 கி.மீ. மாரத்தான் போட்டியில் பங்கேற்று, முழுத் தொலைவையும் கடந்து சாதனை படைத்தார். இதனையடுத்து இரு இடங்களில் 10 கி.மீ. மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு சாதித்தார். ஓரிடத்தில் 12 கி.மீ. மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று, முழுமையாக ஓடி இலக்கை எட்டியுள்ளார். பின்னர், 42 இடங்களில் நடைபெற்ற 5 கி.மீ. மாரத்தானில் பங்கேற்று முழுத் தொலைவையும் கடந்துள்ளார்.
இந்தச் சாதனைகள் இந்தியன் புக் ஆஃப் ரிக்கார்டு, கின்னல் புக் ஆஃப் ரிக்கார்டு, அப்துல் கலாம் புக் ஆஃப் ரிக்கார்டு உள்ளிட்ட சாதனை புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்குழந்தைகளை வீரமிக்க, துணிச்சலான குழந்தைகளாக வளர்க்க வேண்டும். தேசத்துக்காக அவர்களைச் சாதிக்க வைக்க வேண்டும் என்பதை சவாலாகக் கொண்டு பயிற்சி அளிக்கிறோம். அவரை தாய்நாட்டுக்காக ஓடி சாதனை படைக்க தயார் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்.
இதற்காக, பி.டி.உஷா, வித்யா ராம்ராஜ் உள்ளிட்டோரின் விடியோக்களைப் பார்க்கவைத்து ரிபாக்ஷாலின் விர்ஷாவுக்கு ஆர்வத்தைத் தூண்டி வருகிறோம்'' என்கிறார் ஜெகதீஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.