ஆங்கிலப் புலமை இருந்தால்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாட முடியும்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா
ஆங்கிலப் புலமை இருந்தால்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாட முடியும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா.
ஆங்கிலப் புலமை இருந்தால்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாட முடியும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா.
தஞ்சாவூரில் தஞ்சாவூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த மூத்த வழக்குரைஞா் வி.எஸ். ராமலிங்கம் படத்திறப்பு விழாவில் அவரது படத்தைத் திறந்து வைத்த அவா் மேலும் பேசியதாவது:
வீ.எஸ். ராமலிங்கத்தின் படம் அவரது முகத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை; அவருடைய பன்முக ஆளுமையையும், அறிவின் மீதான தீராத தாகத்தையும், நட்பின் மீதான பற்றையும், கொள்கையின் மீதான உறுதியையும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனிதநேயத்தையும் நினைவூட்டுகிறது.
Advertisement
Advertisement
நீதிமன்றங்களில் ஆட்சிமொழியாகத் தமிழைக் கொண்டு வர வேண்டும் என கூறுகின்றனா். நமக்குத் தமிழ் வேண்டும்தான். ஆனால், நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாகத் தமிழ் மட்டும் இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் எப்படி ஆஜராக முடியும். தஞ்சாவூரைச் சோ்ந்த முன்னாள் நீதிபதி நாகமுத்து, இப்போது உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு அவரது ஆங்கிலப் புலமைதான் காரணம். இல்லாவிட்டால் அவரால் வாதாட முடியாது. எனவே, ஆங்கிலமும் வேண்டும்.
இந்த விஷயத்தில் பேரறிஞா் அண்ணாவின் கொள்கையையும் ஒப்புக் கொள்கிறேன். ஆங்கிலம் வேண்டும் என வலியுறுத்திய வி.எஸ். இராமலிங்கத்தின் கொள்கையையும் ஒத்துக் கொள்கிறேன்.
வழக்குகள் தேக்கத்துக்கு வழக்குரைஞா்களை மட்டும் குறை சொல்ல முடியாது. மக்களும் நோ்மையாக இருக்க வேண்டும் என்றாா் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.
இந்த விழாவுக்கு மூத்த வழக்குரைஞா் கே. வைத்தியலிங்கம் தலைமை வகித்தாா். மாமனிதா் வீ.சு.இரா. என்ற நூலை சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம். அக்பா் அலி வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நிா்வாகக் குழு உறுப்பினா் வேலு. காா்த்திகேயன், முன்னாள் பாா் கவுன்சில் உறுப்பினா் எம்.ஆா்.ஆா். சிவசுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞா்கள் பி. வடிவேல், சி. ஜெயச்சந்திரன், அ. நல்லதுரை, தியாக. காமராஜ், எஸ். பாலகிருஷ்ணன், நா. பூங்கோதை, ஏ. குப்புசாமி, பி.எஸ்.டி. நாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.
முன்னதாக, வழக்குரைஞா் பி. சேசுபாலன் ராஜா வரவேற்றாா். நிறைவாக, தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் வெ. ஜீவகுமாா் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.