பள்ளியில் ஆங்கிலப் பூங்கா!
மொழிக் கற்றல் என்பது வகுப்பறைச் சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், அனுபவம் வாயிலாக மாணவர்களிடம் சென்றடைய வேண்டும் என தேசியக் கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.
மொழிக் கற்றல் என்பது வகுப்பறைச் சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், அனுபவம் வாயிலாக மாணவர்களிடம் சென்றடைய வேண்டும் என தேசியக் கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, பள்ளியில் புதுமையான ஆங்கிலப் பூங்கா உருவாக்கியுள்ளார் ஆசிரியர் ச.சரவணன். ஆம்பூர் பெத்லேகம் நகராட்சி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரான அவரிடம் இந்தப் புதுமையான முயற்சி குறித்துப் பேசியபோது:
'பல மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். கடினம் எனக் கருதுகின்றனர். இந்த நிலையை மாற்றி, புதுமையான கற்றல் உத்திகளைக் கையாண்டு, மாணவர்கள் விளையாடிக்கொண்டே கற்கும் வகையில் இந்த ஆங்கிலப் பூங்காவை உருவாக்கினேன்.
இந்தப் பூங்கா தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் செயல்பாட்டு அடிப்படையிலான கற்றல், அனுபவமிக்க கற்றல், திறன் சார்ந்த கற்றல், ஒருங்கிணைந்த கற்றல், விளையாட்டு வழிக் கற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முக்கிய அம்சமாக ஃபோனிக்ஸ் மலர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மலரும் ஒரு எழுத்தின் ஒலியைக் குறிக்கும். இதனால் மாணவர்கள் எழுத்துகளின் ஒலியைத் தெளிவாக உச்சரிக்கக் கற்கின்றனர்.
சரியான உச்சரிப்புத் திறனை வளர்ப்பதில் இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சொற்களஞ்சிய ரயில் மாணவர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் புதிய சொற்கள், அவற்றின் பொருள், பயன்பாடு இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் விளையாட்டின் மூலம் புதிய சொற்களைக் கற்பதோடு மட்டுமல்லாமல், அந்தச் சொற்களைக் கொண்டு வாக்கியங்களையும் உருவாக்கக் கற்கின்றனர்.
டயர் நூலகம்
ஆங்கிலப் பூங்காவில், பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய டயர்களை வண்ணமயமாக மாற்றி, அவற்றில் கதைப் புத்தகங்கள், சிறுவர் இதழ்கள், ஆங்கிலப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஓய்வு நேரங்களிலும் மாணவர்கள் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் உருவாகியுள்ளது. இலக்கண மூலையில் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, காலங்கள், வாக்கிய அமைப்பு போன்ற இலக்கணக் கூறுகள் எளிமையான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் இலக்கணத்தை மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, நேரடியாகப் புரிந்துகொண்டு கற்றுக் கொள்கின்றனர். கேள்விச் சக்கரம் மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டுகிறது. என்ன? ஏன்? எப்போது? எங்கே? யார்? எப்படி? போன்ற கேள்விகளின் மூலம் மாணவர்கள் உரையாடல் திறனை வளர்த்துக் கொள்கின்றனர்.
அகர வரிசை டயர்கள், சொல் டயர்கள், வினைச்சொல் சக்கரம், கர்சிவ் எழுத்துப் பயிற்சிச் சுவர், உரையாடல் மூலை, வார்த்தைச் சுவர், பழமொழிச் சுவர், விளையாட்டு அடிப்படையிலான மொழிப் புதிர்கள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் வளங்கள் இந்தப் பூங்காவில் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலப் பூங்கா உருவாக்கப்பட்டவுடன் ஆங்கிலத்தில் வாசிக்கத் தயங்கிய மாணவர்கள் தற்போது ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். புதிய சொற்களைக் கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியுள்ளனர். கல்வி என்பது புத்தகங்களுக்குள் மட்டுமே அடங்கியதல்ல. அது அனுபவத்தின் மூலம் வளர வேண்டிய ஒரு திறன் என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது' என்கிறார் ச.சரவணன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.