FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அமைதிக்கு ஏது விலை?

"எமக்குத் தொழில் கவிதை' என்றார் பாரதி, அது போல் "எமது தொழில் ஓவியம்'' என்று கூறுகிறார் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கட்டடக் கலைத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் பி.மாணிக்கவாசகம்.

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

"எமக்குத் தொழில் கவிதை' என்றார் பாரதி, அது போல் "எமது தொழில் ஓவியம்'' என்று கூறுகிறார் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கட்டடக் கலைத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் பி.மாணிக்கவாசகம்.

 கோவையில் உள்ள கஸ்தூரி சீனிவாசா கலையரங்கத்தில் அண்மையில் ஓவியக் கண்காட்சி நடத்திய அவரை சந்தித்தோம்.

 ""நான் கோவை மாவட்டம், உடுமலையில் உள்ள ஒரு கிராமத்தில் 1951}ல் பிறந்தேன். எனது தந்தை பொற்கொல்லர் ஆவார். இருந்தாலும் மிருதங்கம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் ஓய்வு நாட்களில் கோயில்களில் மிருதங்கம் வாசிப்பார்.

Advertisement

Advertisement

 எனவே என்னை ஏதாவது ஒரு கலையில் சிறந்தவனாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்தார். இதனால் சிறுவயது முதலே ஓவியங்கள் மீது தனி ஆர்வம் ஏற்பட்டது.

 நான் 1968}ல் பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றேன். குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே சென்று ஓவியக் கலை படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ஆசிரியர் பயிற்சி படித்தேன். இங்குதான் விட்டுப்போன உறவு மீண்டும் உயிர் பெற்றது. அதாவது, ஓவியக் கலை மீது எனக்கு மீண்டும் ஆர்வத்தை ஊட்டினார் எனது ஓவியப் பேராசிரியர் ராஜகோபால்.

 பின்னர், காலத்தின் கட்டளையால் தொலைத் தொடர்புத் துறை பணியில் சேர்ந்தேன். ஆனால் எனது முழு ஆர்வமும் ஓவியம் மீதுதான். இதனால் பத்து ஆண்டுகள் கழித்து, எனது சக ஊழியர்கள் உதவியால் சென்னை ஓவியக் கல்லூரிக்குப் படிக்கச் சென்றேன். படிப்பை முடித்து 1987}ல் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தேன்.

 நான் கல்லூரியில் படித்த காலம் முதல் பல்வேறு கண்காட்சிகளை நடத்தியுள்ளேன். ஒவ்வொரு கண்காட்சியும் ஒரு சமுதாய பிரச்னையைப் பற்றிப் பேசும் கண்காட்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கண்காட்சிகளை நடத்துவேன். மேலும், சாதாரண மக்களின் வாழ்க்கை முறை, சமூகப் பிரச்னை, மனித உழைப்புகளை வெளிப்படுத்தும் வகையில் எனது படைப்புகள் இருக்கும்.

 இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றன. அமைதியைத் தவிர. முற்காலத்தில் நமது தமிழர்களின் வாழ்க்கை முறை பண்பாடு, கலாசாரம் போன்றவற்றால் இனிமையான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது வன்முறை, ஊழல், பழிவாங்கும் நோக்கம், இயற்கையை அழித்து செயற்கையான வாழ்க்கை முறை, ஓய்வின்றி உழைத்தல், பணத்திற்காக எதையும் செய்தல் போன்றவற்றால் மனித இனம் அமைதியை இழந்து வருகிறது. மேலும் அமைதியை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

 எனவே "அமைதியை தேடல்' என்ற தலைப்பில் இப்போதைய கண்காட்சியை அமைத்துள்ளேன். பணத்திற்குப் பொருள்களை வாங்கலாம், ஆனால் அமைதியை வாங்க முடியுமா? அமைதியை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். அதற்கு மனதை நல்வழியில் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன.

 இதற்கு முன் இந்தியப் பெண்களின் முக்கியத்துவம் பற்றி கண்காட்சியை அமைத்தேன். இதில் இந்த உலகிற்கு குடும்பத்தில் கணவன்-மனைவி அன்பு, தாய் பாசம் போன்றவற்றை கற்றுக் கொடுத்தது நம் பெண்கள் தான். தாயிற் சிறந்த கோயில் இல்லை என்பதற்கு உதாரணமும் இவர்கள் தான் என்பதை மையமாக வைத்து ஓவியங்களை வரைந்தேன்.

 எனது அடுத்த ஓவியப் பயணம் தண்ணீர் பற்றியது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தை விட அதிக விலைக்கு தண்ணீர் விற்கும் நிலை ஏற்படும். இது நமது நாட்டில் மட்டும் அல்ல, உலக நாடுகளிலும் தான். தண்ணீரை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. "நீரின்றி அமையாது உலகு' என்று திருவள்ளுவர் கூறியது போல தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கை நடத்த இயலாது. காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல் போன்றவற்றை நிறுத்தாவிட்டால் இந்த உலகிற்கு ஏற்படும் அழிவை யாராலும் தடுக்க முடியாது. எனவே தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு உணர்த்தும் வகையில் எனது அடுத்த ஓவியப் படைப்புகள் இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments