FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இயற்கையின் தொட்டில்... அந்தமான்!

சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் பிரபு-மோகன்லால் நடித்த "சிறைச்சாலை' என்ற சினிமா பார்த்தேன். அந்தமானின் இயற்கை அழகை "அந்தமான் காதலி' என்ற திரைப்படத்தில் பார்த்து ரசித்தேன்.  நான் வனத்துற

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் பிரபு-மோகன்லால் நடித்த "சிறைச்சாலை' என்ற சினிமா பார்த்தேன். அந்தமானின் இயற்கை அழகை "அந்தமான் காதலி' என்ற திரைப்படத்தில் பார்த்து ரசித்தேன்.

 நான் வனத்துறையில் வனச்சரகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். அந்தமான் சென்று அந்த இயற்கை எழில் கொஞ்சும் தீவுகளைப் பார்க்க ஆவல் கொண்டேன்.

 அந்த நேரத்தில் எனது நண்பரின் நண்பர் அந்தமானுக்குச் சுற்றுப் பயண ஏற்பாடு செய்து வருவதாக தகவல் தெரிவித்தார். உடனே அந்த சுற்றுப்பயணத்தில் நானும் என் மனைவியும் இணைந்து கொண்டோம்.

Advertisement

Advertisement

 சென்னையிலிருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தில் அந்தமான் போர்ட் பிளேயர் விமான நிலையம் சென்றடைந்தோம். அந்தமான் நிக்கோபார் என்ற பெயர் கொண்ட இந்திய யூனியன் பிரதேச மக்கள் வசிக்கும் 38 தீவுகளுடன் மொத்தம் 572 தீவுக்கூட்டங்கள் கொண்டது.

 மலைப்பகுதிகள் கொண்ட நீளமான நிலப்பகுதி, உயரமான மலை உச்சிகள், நீரில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் சிறுசிறு குன்றுகள் மற்றும் சமதள பகுதிகளும் மரங்கள் அடர்ந்த எழில் கொஞ்சும் தனித்தனி தீவுக்கூட்டங்களாக நம் கண்களுக்குக் காட்சியளித்தன.

 சாத்தம் தீவு

 போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 1/2 கி.மீ. தூரம் கடல் மேல் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் வழியாக சாத்தம் தீவினைச் சென்றடைந்தோம். இங்கு முதலில் வன அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். இதில் அரிய வகை வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களையும் ஒரு சில விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிரற்ற உடல்களின் தோல்களைக்கொண்டு உருவங்களாக அமைத்து வைக்கப்பட்டிருந்ததையும் கண்டோம்.

 வைபர் தீவு

 1789-ம் ஆண்டில் இத்தீவிற்கு முதலில் வந்த பிரிட்டிஷ் கப்பலின் பெயரான வைபர் என்பதையே இத்தீவிற்குப் பெயராக சூட்டப்பட்டுள்ளது. இந்தச் சிறிய தீவு போர்ட் பிளேயரிலிருந்து ஒரு மணி நேர படகு பயண தூரத்தில் அமைந்துள்ளது. மலை உச்சியில் ஒரு மண்டபமும், தூக்கு மேடையும் கட்டப்பட்டுள்ளன.

 முதன் முதலில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கைதிகளைத் துன்புறுத்தி நீதிமன்ற தண்டனைக்குப் பிறகு இங்குதான் தூக்கிலிட்டார்கள். இந்தத் தூக்குமேடை இந்திய விடுதலைக்குப்பின் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. 1857-ல் இந்தியாவில் பல இடங்களில் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தில் கைது செய்யப்பட்ட 200 கைதிகளையும் இங்கு கொண்டு வந்து இறக்கினார்கள்.

 ரோஸ் தீவு (Ross Island)

 இத்தீவு சர் டேரியல் ரோஸ் என்ற ஆங்கில மெரைன் சர்வேயரின் பெயரால் அழைக்கப்பட்டது. இது போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 30 நிமிட படகுப் பயண தூரத்தில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இங்கு தலைமை கமிஷனர் பங்களா கட்டப்பட்டது. பின் அவரது அலுவலர்களின் குடியிருப்பு, பணியாளர்களின் குடியிருப்புகள் ஆகியன கட்டப்பட்டன.

 இங்கு பால் ரூம், பேக்கரி, கிறிஸ்தவ ஆலயம், மின்நிலையம், கிளப், மைதானம், நீச்சல்குளம், மருத்துவமனை என சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு 1941 வரை இது ஆங்கிலேயரின் ஆட்சியின் தலைமையிடமாக இருந்தது.

 இப்பகுதியை 1942-லிருந்து 1945 வரை ஜப்பானியர்கள் ஆண்டனர். அப்போது அங்குள்ள கட்டடங்கள் பாழடிக்கப்பட்டன. இடிந்த கட்டடங்களின் சுவர்களில் ஆலமரங்கள் வேர்விட்டு வளர்ந்துள்ளதைப் பார்த்து, பழைய நிலையை கற்பனையில் எண்ணி வியந்து போனோம்.

 ரெட் ஸ்கின் தீவு (வண்டூர்)

 இது நீர்வழித்தடத்தால் சிறுசிறு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்வதற்கான நுழைவுத் தீவாக ரெட் ஸ்கின் தீவு உள்ளது. போர்ட் பிளேயரிலிருந்து 27 கி.மீ. தூரம் தரை வழியாக ரெட் ஸ்கின் தீவின் வண்டூர் எனும் இடத்திற்குச் சென்றோம்.

 அடிபாகம் கண்ணாடி இழைகளால் அமைக்கப்பட்டுள்ள சிறிய படகு இணைக்கப்பட்ட பெரிய படகில் பயணித்தோம். 1/2 மணி நேர பயணத்திற்குப் பின் சிறிய படகில் மாறி ஆழமற்ற கடல்பகுதியுள்ள பவளப்பாறைகள் உள்ள தீவிற்குச் சென்றோம்.

 அங்கிருந்து கண்ணாடி இழை கொண்ட படகில் பயணித்து கடலுக்கு அடியில் உள்ள பவளப் பாறைகளையும் மீன்களையும் கண்டு ரசித்தோம். பின்னர் ஆழம் குறைந்த தெளிந்த கடல் நீரில், ஒவ்வொருவராக "லைஃப் ஜாக்கெட்' அணிந்து நீர்புகாத கண்ணாடி அணிந்து நீச்சல் வீரர்களின் துணையோடு நீரில் மூழ்கி நேரடியாக வண்ண மீன்களையும், நட்சத்திர மீன்களையும் பவளப் பாறைகளையும் கண்டுகளித்து, நீந்தி மகிழ்ந்தோம்.

 ஹேவ் லாக் தீவு (ராதாநகர் கடற்கரை)

 2 1/2 மணி நேர கப்பல் பயணத்தில் இத்தீவினை அடைந்தோம். இது கோவிந்தன் நகர் துறைமுகம் ஆகும். அங்கிருந்து ஜீப் மூலம் 12 கி.மீ. தூரத்தில் உள்ள ராதாநகர் கடற்கரைக்குச் சென்றோம். இந்தக் கடற்கரை நீல நிற கடல் நீரையும் வெண் மணல் பரப்பினையும் கொண்டதாகும். நிலப்பரப்பில் நெடிய அடர்ந்த பசுமை மாறாக் காடுகளைக் காண மிகவும் ரம்மியமாக இருந்தது. நீரின் அடியில் வெண்மணல் பரப்பு அழகாக உள்ளதைக் கண்டு ரசித்தோம்.

 போர்ட் பிளேயர்

 இது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய யூனியன் பிரதேசத் துறைமுகத் தலைநகராகும். 1789-ம் ஆண்டில் ஆர்கிபால்ட் பிளேயர் என்ற ஆங்கில அதிகாரி இத்தீவிலுள்ள கட்டடங்களை ஆய்வு செய்தார். இவரது பெயரையே தீவுப் பெயராய் வைத்துவிட்டார்கள்.

 முதலில் பிரிட்டிஷ் அரசு ரோஸ் தீவினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தது. 1954-க்குப் பிறகு போர்ட் பிளேயரைத் தலைநகராக மாற்றிக்கொண்டனர். இந்தியாவிலிருந்து இந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்களை இங்கு குடியமர்த்தினார்கள். அந்த இடம் இப்போது சுற்றுலாத்தலமாகவும் வணிக நகரமாகவும் மாறிவிட்டது.

 செல்லூலார் சிறைச்சாலை

 பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து 1857-ல் ஏற்பட்ட சிப்பாய் கலகம் எனும் முதல் சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை இத்தீவுகளுக்கு கொண்டு வந்தார்கள். சுதந்திரப் போராட்ட கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு 1896-ம் ஆண்டில் போர்ட் பிளேயரில் மத்திய மண்டபம் போன்ற இடத்திலிருந்து ஏழு கிளைகளாக, தனித்தனி அறைகள் கொண்ட மூன்று அடுக்கு சிறைச்சாலையைக் கட்ட ஆரம்பித்தனர். சுமார் 10 ஆண்டுகளில் 680 தனித்தனி அறைகளைக் கட்டினார்கள்.

 1979-ல் அப்போதைய பிரதமர் மொராஜிதேசாய் இதனை பார்வையிட்டு தேசிய நினைவிடமாக அறிவித்தார். சுதந்திரப் போராட்டத் தியாகி வீரசாவர்க்கர், 1910-1937-ம் ஆண்டுகள் வரை 27 ஆண்டுகள் சிறையிலிருந்தார். அந்தமானில் உள்ள தீவுகளைச் சுற்றிப் பார்த்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியும் வைபர் தீவின் தூக்குமேடையும், செல்லூலார் சிறைச்சாலையையும் சுற்றிப்பார்த்து ஏற்பட்ட வேதனையும் மாறி மாறி வந்து சென்றன.

வாசகர்கள் தங்களின் சுற்றுலா அனுபவங்களை படத்துடன் அனுப்பி வைக்கலாம். சிறந்தவை பிரசுரமாகும். email:photokadir@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments