கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!
காட்சி-1: தன்னிடம் காதலை வெளிப்படுத்தப் போகிறான் என்ற ஆவலில் இருக்கிறாள் ஒரு பெண். அவளை நெருங்கி வரும் அவன், ""நான் காதலிக்கிற பெண் எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கணுமா... நிச்சயமா உன்னை மாதிரி இல்ல...'
காட்சி-1 :
தன்னிடம் காதலை வெளிப்படுத்தப் போகிறான் என்ற ஆவலில் இருக்கிறாள் ஒரு பெண். அவளை நெருங்கி வரும் அவன், ""நான் காதலிக்கிற பெண் எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கணுமா... நிச்சயமா உன்னை மாதிரி இல்ல...'' என்கிறான். அந்த இளம் பெண்ணின் முகம் வாடுகிறது.
காட்சி-2 :
Advertisement
Advertisement
தன்னுடைய முகத்தை கண்ணாடியில் அவ்வப்போது பார்த்து ஒப்பனை செய்துகொண்டு நேர்முகத் தேர்வுக்குப் போகிறாள் ஒரு பெண். நேர்முகத் தேர்வில் அவள் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில்களே சொல்கிறாள். ஆனாலும் அவளுக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அந்தப் பெண்ணின் மனம் வாடுகிறது.
காட்சி-3
கல்லூரியில் அந்தப் பெண்ணை எல்லா மாணவர்களும் ஆளுக்கொரு பட்டப் பெயர் வைத்து கலாட்டா செய்கிறார்கள். காரணம் தெரியாமல் அந்தப் பெண் வருந்துகிறாள்.
- இந்த மூன்று பெண்களுக்குமே அவர்களின் தோழி அல்லது அவர்களின் உடன்பிறந்தவர்களால் ஒரு முகப்பூச்சு க்ரீம் அறிமுகமாகிறது. அந்த முகப்பூச்சு க்ரீம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலஇடைவெளிகளில் அவர்களின் மேனியை சிவப்பாக்குகிறது. அவ்வளவுதான் அந்தப் பெண்களின் வாழ்க்கையே தலைகீழாகிறது!
"என்னோட காதலியைப் பார்க்க ஆசையா...' என்றபடி அவளின் முகத்தின் முன் கண்ணாடியைக் காட்டுகிறான் காதலன்!
லிஃப்டிலிருந்து வெளிவரும் நிறுவனத்தின் டைரக்டரின் எதிரில் முகப்பொலிவுடன் தோன்றும் அந்தப் பெண்ணுக்கு வேலை கிடைக்கிறது!
விடுமுறைக்குப் பின் கல்லூரிக்கு வரும் அந்தப் பெண்ணின் அழகில் கல்லூரியே மெய்மறந்து போகிறது!
இந்த விளம்பரங்கள் எல்லாமே தோலின் நிறம் ஒருவருக்கு வெண்மையாக சிவப்பாக இருப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. சிவப்பு நிறமே சிறந்தது என்னும் மாயை காலம்காலமாக சமூகத்தில் நிலவிவருகிறது.
படிப்பில், பணியில், ஊதியத்தில் என்று எல்லாவிதத்திலும் ஆணுக்கு நிகராகப் பெண் இருந்தாலும் திருமணம் என்று வரும்போது, மணமகள் தேவை விளம்பரத்தில் எல்லோரும் சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். சிவப்பு நிறம்தான் திறமைக்கு, அறிவுக்கு அடையாளம் என்று நினைக்கிறார்கள்.
""எல்லா நிறமும் ஒன்றுதான். நிறத்திற்கு அப்பாற்பட்டதுதான் அழகு'' என்னும் விழிப்புணர்வை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் "வுமன் ஆஃப் வொர்த்' என்னும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஏற்படுத்திவருகிறது.
இந்த அமைப்பின் நிறுவனரும் இயக்குநருமான கவிதா இமானுவேல், ""நாங்கள் சிகப்பான நிறமுள்ளவர்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை. நிறங்களுக்கு அப்பாற்பட்டது அழகு. தோலின் நிறத்தை வைத்து ஒருவரை வெறுக்காதீர்கள். நாங்கள் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் எதிர்க்கிறோம்'' என்றார்.
பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடந்த விழிப்புணர்வு முகாமில் நாடகம், நடனம் போன்ற பல கலை வடிவங்களின் வாயிலாகவும் கறுப்பு நிறத்தை ஆதரிக்கும் கருத்தை வெளிப்படுத்தினர்.
இந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகை அனு ஹாசன் பேசியதை திரையில் ஒளிபரப்பினர்.
""நான் சிறுபிள்ளையாய் இருக்கும்பொழுது சிகப்பாக இருக்கும் பெண்கள்தான் அழகாக இருப்பார்கள் என்று நினைத்ததுண்டு!
இந்த சமுதாயம் சிவப்பாக இருப்பதுதான் அழகு என்ற எண்ணத்தைத் தருகிறது.
தோலின் நிறத்தில் வித்தியாசம் காண்பது தவறான ஒன்று.
ஒருவரது தோலின் நிறத்தின் மேல் முக்கியத்துவம் காட்டும் எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. நம்மிடம் இருக்கும் அழகையும் நிறத்தையும் நாம் ரசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்!'' என்றார் அனு ஹாசன்.
கறுப்பு நிறத்தை ஆராதித்த அந்த நிகழ்ச்சியில் சிவப்பான நிறைய பேரும் கலந்துகொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.