FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிலைகளை மீட்கும் ஆவணக் காப்பகம்

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அரிய சிலைகள் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தின் உதவியோடு இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளன.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
பகிர்:

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அரிய சிலைகள் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தின் உதவியோடு இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் உள்ள சைவ ஆகம ஓலைச்சுவடிகளுக்கு யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது.

சமூகவியல் ஆராய்ச்சி, சூழலியல் ஆய்வுகள், ஓலைச்சுவடிகளையும் ஆகமங்களையும் குறித்த இந்தியவியல் ஆய்வுகள், புவித் தகவலியல் ஆய்வுகள், பழம்பெரும் நூலகம், புகைப்பட ஆவணக் காப்பகம் உள்ளிட்டவற்றுடன் எழுபது ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த நிறுவனம் புதுச்சேரி கடற்கரையில் புகழ்பெற்ற ஸ்ரீஅரவிந்தர்- அன்னை ஆசிரமம் அருகே அமைந்துள்ளது.

1955-ஆம் ஆண்டு மார்ச் 20-இல் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி நிறுவனமானது பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகமும், பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையமும் இணைந்த கூட்டு மேற்பார்வையின் கீழ் இயங்குவதோடு, புதுதில்லியில் உள்ள மனித அறிவியல் மையத்துடன் இணைந்துள்ளது.

Advertisement

Advertisement

தொடக்கத்தில் நிறுவனத்தின் முதல் இயக்குநரான கண் மருத்துவர் ஜீன் ஃபிலியோசாட் தலைமையில் இந்திய நாகரிகம், கலாசாரம், தென் இந்தியாவின் வரலாறு, மதங்கள் ஆகியன குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தது. 1988-இல் சமூக அறிவியல் துறை, 2022-இல் புவி அளவியல் துறை ஆகியன தொடங்கப்பட்டன.

ஆராய்ச்சித் திட்டங்களுக்காக பிரான்ஸ் - இந்திய அரசுகள் நிதியுதவி அளிக்கின்றன. இதுதவிர, இந்தியப் பல்கலைக்கழகங்கள், பிரெஞ்சுப் பல்கலைக்கழகங்கள், ஐரோப்பிய - அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், உலக வங்கி, ஃபோர்டு அறக்கட்டளை போன்ற தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் உதவிபுரிகின்றன. தற்போது நான்கு முக்கியத் துறைகளில் இந்த நிறுவனம் சிறப்புற விளங்கிவருகிறது. இந்த நிறுவனச் செயல்பாடுகள் குறித்து பணியாற்றுவோர், ஆராய்ச்சியாளர்களிடம் பேசினோம்.

தகவல் தொடர்பு அலுவலர் எட்கர்

பிரான்ஸ் தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இந்தியாவுடன் ஒப்படைத்த அந்த ஒப்பந்தத்தை புதுச்சேரியில் கொண்டாடும் வகையில் பல்வேறு கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் நிறுவன வரலாறு, அதன் பல்வேறு துறைகள், ஆய்வுப் பணிகள் அவற்றின் வளர்ச்சிப் பயணம், காட்சிப் பதிவுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும்.

இந்த நிறுவனம் தொடங்கிய காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் கோயில்களில் உள்ள எண்ணற்ற சிலைகளைப் படம் பிடித்ததோடு, ஆவணக் காப்பகத்தையும் அமைத்துள்ளது.

இந்தியாவின் பொக்கிஷங்களான சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு அவை கண்டறியப்படும்போது, அவற்றின் உண்மைத் தன்மைகளை எங்களிடம் உள்ள ஆவணங்களுடன் ஒப்பீடு செய்கிறோம். பின்னர் அவற்றை மீட்க உதவுகிறோம்.

இதன்படி, 2026 மார்ச் மாதத்தில் ஆக்ஸ்போர்டில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகமானது செளந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 16- ஆம் நூற்றாண்டின் திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையை இந்தியாவுக்குத் திருப்பி அளித்தது. விருத்தாசலத்தில் திருடுபோன அர்த்தநாரீஸ்வரர் சிலையையும், தமிழ்நாட்டின் ஸ்ரீபுரந்தன் நடராஜர் சிலையையும் ஆஸ்திரேலிய நாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அண்மையில் அளித்தது. ஜெர்மனியில் இருந்த துர்கை அம்மன் சிலை மீண்டும் நாடு திரும்பியுள்ளது.

புகைப்பட ஆவணக்காப்பகத் துறையின் தலைவர் கோ.ரமேஷ் குமார்

கோயில்களில் உள்ள கற்சிலைகள், உலோகச் சிலைகளை படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளோம். இவையே இன்று அரசுக்கு ஒப்பிட்டுக்காக உதவி செய்கின்றன. நூல் வெளியீடுகளை உரிய கட்டணம் செலுத்தி பெறலாம். ஜ்ஜ்ஜ்.ண்ச்ல்ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்திலும் பார்வையிடலாம். கட்டடக்கலை, புகைப்படக் கலைகளின் தொன்மை குறித்தும் ஆய்வுகளைத் தொடர்கிறோம். தமிழ்நாட்டின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு எங்கள் புகைப்பட ஆவணக் காப்பகம் உதவுகிறது.

இணை ஆராய்ச்சியாளர் கே. திருக்குமரன்

நூலகத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றில் சம்ஸ்கிருதம், தமிழ் ஓலைச்சுவடிகள் அதிகம். அன்றாட வாழ்வியல் குறித்து ஆகமம் கூறும் அரிய விஷயங்கள் இங்குள்ள ஓலைச்சுவடியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காண தற்போது பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

இருந்தாலும், ஆய்வு மாணவர்கள் உரிய அனுமதி பெற்று ஆராய்ச்சி செய்யலாம். இணைய வழியிலும் ஓலைச்சுவடிகளை அறியலாம். ஓலைச்சுவடிகள் சார்ந்த நூல்களை பணம் செலுத்திப் பெறலாம்.

இத்தாலியைப் பூர்விகமாகக் கொண்ட நூலகத் துறைத் தலைவர் டி. மார்கிரிட்டா

இங்குள்ள பழமையான நூலகத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 70 ஆயிரம் நூல்கள் இடம் பெற்றுள்ளன. நிறுவனத்தின் வெளியீடுகளான நூல்கள், படப்பதிவுகளையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் உரிய அனுமதி பெற்று பார்வையிடலாம். திருவாவடுதுறை ஆதீனம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளேன். கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளைப் படிக்கும் அளவுக்கு நான் புலமை பெற்றுள்ளேன்.

உதவி ஆய்வாளர் கோகிலவாணி

தாவர ஆய்வுக்கு உதவிகளை சூழலியல் துறை மேற்கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடங்களில் வளர்ந்த செடிகள், மரங்கள், இலைகள், விதைகள், பூக்களின் மகரந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளையும் சேகரித்து வருகிறோம். இதற்கு முன்னோடியாகிய விளங்கியவர் முனைவர் எ. தணிகைமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments