FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளத்தின் பெருமை... புனலூர் தொங்குபாலம்!

நாட்டின் தொன்மைக்குப் பெருமை சேர்க்கும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்று, கேரளத்தில் தனித்துவமான புனலூர் தொங்கு பாலம்.

22 ஆகஸ்ட் 2026, 8:35 pm IST
பகிர்:

நாட்டின் தொன்மைக்குப் பெருமை சேர்க்கும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்று, கேரளத்தில் தனித்துவமான புனலூர் தொங்கு பாலம். இது, 'தென்னிந்தியாவின் பழம்பெரும் தொங்கு பாலம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வனப்பகுதியில் இருந்து நகருக்குள் வன விலங்குகள் வருவதைத் தடுக்கவும், திருவிதாங்கூர் அரசின் போக்குவரத்துத் தேவைகளுக்காகவும் கட்டப்பட்ட இந்தப் பாலம், கொல்லம் மாவட்ட வணிகத்துக்கு உதவும் வகையில் எளிதில் கல்லாடா ஆற்றைக் கடக்கவும், சரக்கு வாகனங்கள் சென்று வரவும் பயன்பட்டது.

திருவிதாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் ராம வர்மா காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள புனலூர் நகரின் மையப் பகுதியில் கல்லாடா ஆற்றின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டது.

1871-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் பணி நடைபெற்று, 1877-இல் பாலப்பணிகள் முடிவடைந்தது. ஸ்காட்லாந்து பொறியாளர் ஹென்றி மேற்பார்வையில் பாலம் கட்டப்பட்டது. இதற்கான இரும்பு, மூலப்பொருள்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதன் தளம் இரும்புக் கம்பிகளின் மீது பதிக்கப்பட்ட மரப் பலகைகளாலானது. பக்கவாட்டுப் பகுதிகள், இரும்பு உலோகங்களால் ஆனவை. இப்பாலத்தின் மொத்த நீளம் 400 அடிகள். பாலத்தின் இருபுறமும் தலா இரண்டு கருங்கல் கிணறுகள் அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

தலா 53 வளையங்களைக் கொண்ட பிரம்மாண்ட சங்கிலிகளின் மீது பாலம் தொங்கி நிற்கின்றது. இதன் முனைகள் நான்கு கிணறுகளில் பொருத்தப்பட்ட பெரிய வட்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறியியல் வடிவமைப்பினால், பாலத்தின் ஒரு முனையில் செலுத்தப்படும் விசை மறுமுனை உயர்த்துவதன் மூலம் தொங்கு பாலம் சமன் செய்யப்பட்டு சமநிலையில் வைக்கப்படுகிறது.

இந்தத் தொங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன், மக்கள் இதன் மீது நடப்பதற்கு அஞ்சினர். 'ஆற்றில் விழுந்து விடுவோமோ?' என்ற அச்சம் அவர்களுக்கு நிலவ, உறுதித் தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது.

இதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட செயல் குறித்து, புனலூர் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரஞ்சித் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் ஆங்கிலப் பொறியாளரும், அவரது குடும்பத்தினரும் ஒரு நாட்டுப்படகில் பாலத்தின் அடியில் பயணித்தனர். அப்பொழுது ஆறு யானைகள் பாலத்தின் மீது நடந்து சென்றன. இந்தக் காட்சிகளைக் கண்ட புனலூர் மக்கள் வியந்தனர். பின்னர் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. இதன்பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது என எங்கள் முன்னோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்' என்றார்.

தொங்கு பாலத்தின் ஸ்திரத் தன்மையையும், பெருமையையும் கருதி, கேரள மாநில அரசு தொல்லியல் துறையினர் அதைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக்கி, பராமரித்து வருகின்றனர். 2014- ஆம் ஆண்டு முதல் இந்தப் பாலம் பாதசாரிகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் அனுமதிக்கப்படுகிறது. பாலத்தின் மீது அமர்வதற்கான இருக்கை வசதிகளும் உள்ளன. வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.

பாலத்தின் மீது நிற்கும்போது இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் கல்லாடா நதியின் அழகையும் கண்டு ரசிக்க முடிகிறது. குளிர்ந்த காற்று நம் மீது தவழ்ந்து செல்கின்றது. ஆற்று நீரில் சலசலப்பு மற்றும் கரையோர மரங்கள் இயற்கையை உணரச் செய்கிறது. இரவு நேரங்களில் இங்கு எரியும் வண்ண விளக்குகளின் ஒளியால் இப்பாலம் பொன் மஞ்சள் நிறத்தில் எழிலாகக் காட்சி தருகிறது.

பாலத்தின் இருபுறமும் தலா இரண்டு கருங்கல் கிணறுகள் என நான்கு கிணறுகள் வட்ட வடிவில் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் சுமார் 100 அடி ஆழம் கொண்டவையாகும். பால இணைப்புகள் இந்தக் கிணறுகளில் இணைக்கப்பட்டுள்ளதால், இவை பாதுகாப்பு நடவடிக்கையாக கம்பி வளையங்களால் மூடப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற புனலூர் காகித ஆலை, தென்மலை சூழலியல் பூங்கா, அருவிகள், புனலூர் மிளகுத்தோட்டங்கள், திருக்கோதீஸ்வரம் மகாதேவர் மலைக்கோயில், புனித மேரி ரோமன் கத்தோலிக்க தேவாலயம், ஆலஞ்சேரி ஜும்மா மசூதி உள்ளிட்டவை புனலூரில் காண வேண்டிய இடங்களாகும்.

இயற்கை, வரலாறு, கலாசாரம், ஆன்மிகம், சாகசம் ஆகியவற்றின் கலவையான புனலூர், கொல்லத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments