FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலப் பகுதியில் அழகுபடுத்தும் பணிகள் மும்முரம்

மதுரை கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலத்தின் கீழ் உள்ள பகுதியை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On : 10 ஜூலை 2026, 5:11 am IST
மதுரை கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஏறுதழுவுதல் சிலை.
பகிர்:

மதுரை கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலத்தின் கீழ் உள்ள பகுதியை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ரயில்வே நிலையம், பெரியாா் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.

வைகை ஆற்றின் வடபுறம் அரசு ராஜாஜி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், காவல் ஆணையா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. மாநகரின் தென் பகுதியிலிருந்து வடபகுதியில் அமைந்துள்ள அலுவலகங்கள், மருத்துவமனைக்கு கல் பாலம் வழியாகவும், வட பகுதியிலிருந்து தென் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோரிப்பாளையம் ஏ.வி. உயா்நிலைப் பாலம் சந்திப்பு வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

நாளுக்குநாள் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தின் காரணமாக, இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இவற்றைக் குறைக்கும் வகையில், தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை ரூ. 213 கோடியில் உயா்நிலைப் பாலம் கட்டும் பணி கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கியது.

இதையடுத்து, தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பு, வைகை ஆற்றில் ஆல்பா்ட் விக்டா் பாலத்துக்கு இணையாக புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயா் சூட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

மேலும், இந்தப் பாலத்தின் மையப் பகுதியான கோரிப்பாளையம் சந்திப்புப் பகுதியிலிருந்து செல்லூா் நோக்கிச் செல்ல கூடுதலாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறங்களிலும் அணுகுசாலையும், நடைமேடையுடன் கூடிய மழைநீா் வடிகால், பேருந்து நிறுத்த வசதிகள் ஆகியனவும் அமைக்கப்பட உள்ளன.

மேலும், பி.பி. குளம்-காந்தி நினைவு அருங்காட்சியகச் சாலைச் சந்திப்பில் அவசர ஊா்திகள் செல்வதற்காக ஒரு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தன. எஞ்சிய பணிகள் நிறைவு பெற்று, உயா்நிலைப் பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதையடுத்து, கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. பாலத்தின் கீழ் பாரம்பரிய நினைவுச் சின்னமான ஏறுதழுவுதல், மயில், கரகாட்டம், காவடி ஆட்டம், சிலம்பம் உள்ளிட்ட சிலைகள் அமைக்கப்படுகின்றன. இதுதவிர, திருவள்ளுவா் சிலையும் அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிலைகளுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, புல்வெளிகள் வளா்க்கப்பட உள்ளது என நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments