நிறுவனத்தால்தான் நமக்குப் பெருமை
தமிழக அறிவுஜீவிகளின் ஆளுமைகள் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்தாலும், வெகுசிலர் தங்கள் புகழை உள்நாட்டிலேயே நிலைநிறுத்தி வருகின்றனர்.
மிழக அறிவுஜீவிகளின் ஆளுமைகள் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்தாலும், வெகுசிலர் தங்கள் புகழை உள்நாட்டிலேயே நிலைநிறுத்தி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வி. காமகோடி. கல்வியுலகுக்கும் அறிவியல் துறைக்கும் அவரது பங்களிப்பைப் பாராட்டும் விதமாக அவருக்கு மத்திய அரசு அண்மையில் 'பத்மஸ்ரீ' விருது வழங்கியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள தேர்வு நடைமுறை சீர்திருத்த உயர்நிலைக் குழுவின் உறுப்பினராக காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சி சங்கர மடத்துடன் இவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான தொடர்பு இருந்து வருவதை இவரது பெயர் சொல்லும். இவரது மனைவி ரேணுகா, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பயன்பாட்டில் முதுகலை அறிவியலில் தங்கப் பதக்கம் பெற்றவர். ஒரே மகள் பாரதி முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் 'பத்மஸ்ரீ' விருது பெற்றபோது, காமகோடியிடம் பிரதமர் நரேந்திர மோடி கை கொடுத்து 'வாழ்த்துகள் சகோதரரே' என்று கூறியதை பெருமகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார்.
Advertisement
Advertisement
'சிறந்த பேராசிரியருக்கான குடியரசுத் தலைவர் விருதை 2002-ஆம் ஆண்டில் என் தந்தை பெற்றார். அவரைப் போல நானும் வேஷ்டியுடன் சென்று, அவர் பெற்ற அதே இடத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது பெற்றேன்' என்று மனம் நெகிழ்கிறார் காமகோடி.
விருது பெற்றுள்ள காமகோடியை ' தினமணி' சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கச் சந்தித்தோம். அறிவியல் ஆளுமைக்கு அப்பால் எளிய குடும்பத் தலைவராக, வாழ்வின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்த சக மனிதராக, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக , எளிமையான பேராசிரியராக பல விஷயங்களை உரையாடினார்.
'இந்த விருதுக்குக் காரணம் எனது மாணவர்களும், சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தின் அடையாளமும்தான்' என்று சொல்லும் பேராசிரியர் காமகோடி உரையாடலின் ஒரு பகுதி:
'நாம் பணிபுரியும் நிறுவனத்தின் பின்னணி இல்லையென்றால், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். அதுபோன்று மாணவர்களின் பண்பு, நடத்தை, திறன், சாதனைகள் மூலமே நிறுவனத்தின் பெருமையைத் தக்க வைக்க முடியும். இப்படியாக, நிறுவனத்தால் நாங்கள் பெருமை பெறுகின்றோம். மாணவர்களின் சாதனைகளில் நிறுவனம் பெருமை அடைகிறது. இதை மாணவர்களுக்கு நான் உணர்த்த சமீபத்திய சம்பவத்தைச் சொல்ல வேண்டும் .
இந்த ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். முதலாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு முகக் கவசம் அணிந்து ஒரு தோள் பையோடு சென்றேன். யாரும் என்னை அடையாளம் காணவில்லை. மாணவர்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதையும் கவனித்தேன். சில பேராசிரியர்கள் என்னை கடந்தபோது, 'குட் மார்னிங்' சொன்னேன். அவர்கள் பதிலுக்கு வணக்கம் கூட கூறாமல் கடந்து சென்றனர். நிகழ்ச்சியின் நடுவில் வேஷத்தைக் கலைத்துவிட்டு எழுந்து மேடையை நோக்கிச் சென்றேன். என்னைக் கண்டுபிடித்தவுடன் கரகோஷம். அப்போது மாணவர்களிடம் பேசினேன். சிறிது நேரத்துக்கு முன்பு நடைபெற்ற என்னுடைய அனுபவங்களை மாணவர்களிடம் விளக்கினேன்.
ஐ.ஐ.டி. இயக்குநர் என்கிற முறையில் வரும்போது எனக்கு ஏராளமான மரியாதை இப்போது கிடைத்தது. ஆனால், முகக் கவசம் அணிந்து உட்கார்ந்திருந்தபோது என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. நிறுவனத்தால்தான் நமக்கு மரியாதை கிடைக்கிறது.
நீங்கள் இப்போது மாணவர்கள். அடுத்த நான்கு, ஐந்தாண்டுகள் படிக்கும்போது ஒன்றை நினைவில் நிறுத்துங்கள். உங்கள் நடத்தை, சாதனை இந்த நிறுவனத்துக்கு பெயர் சேர்க்கும். அல்லது கெட்ட பெயரைக் கொண்டு வரும். இந்த நிறுவனத்தின் பெயரைக் கட்டிக் காக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு என உணர்த்தினேன். நிறுவனத்தை தாயாக கருதவேண்டும். தாயைத் தர்ம சங்கடத்தில் நிறுத்தக் கூடாது. மாறாக பெருமை சேர்க்க வேண்டும்.
நாம் தலைமைப் பொறுப்பேற்று இருக்கும் நிலையில் சுயநலமற்று, பிறர் நலன் பேணுபவராக இருக்க வேண்டும். நமக்கென்று தொடங்கினால், அதில் தோல்விதான் ஏற்படும். நிறுவனத்துக்கென்று எதையும் தொடங்கினால், அதில் வெற்றி கிடைக்கும்.
சுயநலமற்ற நிலை வரும்போது எல்லாமே சரியான இடத்தில் சரியாகப் பொருந்தும். எவைகளிலாவது சுயநலம் இருந்தது என்றால், அது இரண்டாம் தரம் தான். நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் சுயநலமின்றி உழைக்கவேண்டும். அது தான் அடிப்படை. மற்றவைகளை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டார்ட்-அப்
எத்தனையோ புதுயுகத் தொழில் முனைவு (ஸ்டார்ட்-அப்) ஐ.ஐ.டி.யில் வந்திருக்கிறது. இதில் எந்த நிதித் தொடர்பும் எனக்குக் கிடையாது. மகாபாரதத்தில், 'ஒருவரோடு நாம் நீண்ட நாள் நட்போடு இருக்க வேண்டுமென்றால், அவர்களோடு நிதி கையாளுதல் இருக்கக்கூடாது. நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது' என்று கூறப்பட்டுள்ளது.
நான் நிறைய ' ஸ்டார்ட்-அப்'புகளுக்கு உதவி செய்துள்ளேன். தெரிந்தவர்களை வைத்து உதவி செய்கின்றோம். அதில் நிதி சார்ந்த கையகப்படுத்தல் நிகழ்ந்தால், அது சுயநலம் சார்ந்ததாக மாறுகிறது. அப்போது உலகம் வேறு மாதிரியாக இருக்கும். இதனால் சுயநலமற்றதாக இருந்தால்தான் இந்த உலகத்துக்கு நாம் எதாவது செய்ய முடியும். இவைகளை நான் காஞ்சி பெரியவரிடம் கற்றேன். காரணம், அவர் மிகவும் கண்டிப்பான தேசப் பக்தியோடு இருந்தார்.
மாணவர்களே ஊக்கம்
தொழில்நுட்பம் என்பது அடிப்படையிலான புரிதல். தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்வது மூலம் புதிய யோசனைகள், கருத்துகள் வருகின்றன. என்னை ஊக்கப்படுத்தியது மாணவர்கள்தான். இன்றைய மாணவர்கள் எடுக்கின்ற துணிச்சலான முடிவுகளை நான் அவர்களது வயதில் இருந்தபோது எடுத்திருப்பேனா என்பது சந்தேகமே! 12 வருடமாக இருக்கின்ற ஒரு முனைவர் பயிற்சி மாணவர் ஸ்டாட்-அப் வரை வளர்ந்தது ஓர் உதாரணம். இவர்களைப் போன்றவர்களால்தான் ஊக்கமடைகின்றோம். மாணவர்கள் என்னை விட சிறந்த அறிவாளிகளாக இருக்கின்றனர். நன்றாகப் படிக்கின்றனர். அதுதான் எனக்குப் பெருமை. இதனால் தான் நான் 'பத்மஸ்ரீ' பட்டம் வாங்கும் போது மாணவர்களே காரணம் எனக் குறிப்பிட்டேன்.
ஆதிசங்கரர், 'ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா'ன்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கார். அது கேள்வி பதில் ரீதியில் இருக்கும். அதில் ஆதிசங்கரர், 'குரு என்பவர் தான் சொல்கிறாரோ அதை அவர் முழுசா புரிந்து கொண்டு சொல்கிறவர். ஒரு மாணவர் நன்மைக்காக எப்போதும் பிரயத்தனம் செய்கின்றவரும், எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நல்லவைகளை மாணவர்களுக்குக் கொடுப்பவரும் தான் குரு' என்று சொல்கிறார்' என்கிறார் வி.காமகோடி.
படம் :ஆர். கிருஷ்ணராஜ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.