FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

'வனவாசம்'தான் புதுக்கவிதையின் தொடக்கம்

கல்வியிற் சிறந்தவன் கம்பன். திரைப்படக் கவிதையிற் சிறந்தவன் கண்ணதாசன்.

22 ஆகஸ்ட் 2026, 7:17 pm IST
பகிர்:

கல்வியிற் சிறந்தவன் கம்பன். திரைப்படக் கவிதையிற் சிறந்தவன் கண்ணதாசன். ஆர்மோனியப் பெட்டிக்கு அழகு தமிழை அறிமுகப்படுத்திய பெருமை ஒரு கவிஞனுக்கு உண்டென்றால், அது கண்ணதாசனுக்குத்தான் உண்டு.

'மதுரையில் இருந்த மாணிக்கத் தமிழை கோடம்பாக்கத்துக்குக் கூட்டி வந்தவன் கண்ணதாசன்' என்று வாலி ஒரு முறை கூறினார். அவர் அப்படிக் கூறுவதற்கு முன்பே ஒரு கவியரங்கத்தில் கண்ணதாசனை வைத்துக் கொண்டே, 'தென் பழனிக்குத் தெற்கே திகழ்ந்த செந்

தமிழை வடபழனிப் பக்கம் வரவழைத்தவன் கண்ணதாசன்' என்று நான் கூறினேன்.

Advertisement

Advertisement

வடபழனிப் பக்கத்தில் தானே ஒலிப்பதிவுக் கூடங்களும் படப்பிடிப்பு நிலையங்களும் இருக்கின்றன. இலக்கியங்களில் சாற்றைப் பிழிந்து திரைப்பாடலாக்கிக் கொடுத்த பெருமை இவரைத்தான் சேரும். சில நேரங்களில் இலக்கிய வரிகளை அப்படியே கையாண்டும் இருக்கிறார். இலக்கியவாதிகளெல்லாம் இவர் பாடலை மிகவும் விரும்பியதற்கு இதுவும் ஒரு காரணம்.

சினிமா பாடல்கள் என்ற கதம்பப் பூக்களுக்கு நடுவே காட்டு ரோஜாவாகப் பரிமளித்தது இவரது பாடல்கள்தாம். திரைக் கவிஞர்கள் என்ற சிற்றோடைகளுக்கு நடுவே ஜீவ நதியாகப் பெருக்கெடுத்து ஓடியவர் இவர், இலக்கியப் புலவர்கள் சொல்லாமல் விட்ட நுணுக்கமான கருத்துகளைக் கூடத் திரைப்பாட்டில் சொன்னவர் இவர்தான்.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்போன்;

புவியில் யானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னிலும் விலை மிகு பொருள் என் செல்வம்

இவைசரியென்றால் இயம்புவ தென் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை

செல்வர்தம்கையில் சிறைப்பட மாட்டேன்

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்

பண்டோர்கம்பன் பாரதிதாசன்

சொல்லாதனசில சொல்லிட முனைவேன்

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது

இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

நானே தொடக்கம் நானே முடிவு

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்

என்று கவிஞனுக்குரிய கம்பீரத்துடன் கருத்துகளை கவிதையில் இவர் சொல்லிருந்தாலும் கவிதைத் துறையில் காலூன்றி நின்றதை விட திரைப்பாட்டுத் துறையில்தான் அழுத்தமாகக் காலூன்றி நிற்கிறார்.

'கடவுள் அவதாரத்தில் கண்ணன் அவதாரம்தான் முழுமை பெற்ற அவதாரம்' என்று பக்தர்கள் சொல்வதைப் போல கண்ணதாசன் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி விஸ்வரூபம் எடுத்து நிற்பது திரைப்பாட்டுத் துறையில்தான். இதில் இவர் சொல்லாத கருத்துகள், பாடாத பொருள்கள் ஏதுமில்லை.

இன்று துட்டுக்குப் பாட்டுரைப்போர் தொகை பெருகியிருந்தாலும் மெட்டுக்குப் பாட்டுரைத்த மேலோரில், கண்ணதாசன் தொட்ட இடத்தை இதுவரை யாரும் தொட்டதில்லை.

பண்ணுக்கும் நல்ல பாட்டுக்கும் பெருமை தந்து

மண்ணுக்குள் தனது மணியுடலைப் புதைத்துவிட்டு

விண்ணுக்குள் காற்றாக விரைந் தோடிச் சென்றாலும்

இன்னும் நம் கண்ணுக்குள் நிற்கும் கண்ணதாசனது

முன்னிற்கும் தகுதி மொத்தத்தில் யார்க்குமில்லை.

1960-க்குப் பிறகு 'கண்ணதாசனின் சகாப்தம்': தொடக்கத்தில் மெட்டுக்குப் பாட்டெழுத மிகச் சிரமப்பட்டாலும், அதில் பயிற்சியும் முயற்சியும் பெறப் பெற இந்தியத் துணைக் கண்டத்தில் இவருக்கு நிகராக எவரும் எழுத முடியாது என்று புகழ் பெற்றவராக விளங்கினார். இவர் திரைத் துறையில் நுழைந்த காலத்தில் கம்பதாசன், தஞ்சை ராமையாதாஸ், கே.பி.காமாட்சி சுந்தரம், மருதகாசி ஆகியோர்தான் மெட்டுக்கு விரைவாக எழுதக் கூடியவர்கள் என்று பெயர் பெற்றிருந்தார்கள்.

மருதகாசி நுழைந்த காலத்தில்தான் இவரும் நுழைந்தார். ஆனால், ஒரு படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதக் கூடிய வாய்ப்பு மருதகாசிக்குக் கிடைத்ததைப் போல் இவருக்குக் கிடைக்கவில்லை. இவருக்குப் பின்னால் வந்தவர்தான் பட்டுக்கோட்டை. அவருக்குக்கூட எல்லாம் பாடல்களையும் எழுத வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இவருக்குக் கிடைக்கவில்லை.

பல படங்களுக்கு வசனம் எழுதினார். இவர் முதன் முதல் வசனம் எழுதிய படம் 'நானே ராஜா'. இதன் பாடல்களைப் பல கவிஞர்கள் எழுதியிருந்தார்கள். மதுரை வீரன், ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன் ஆகிய எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு இவர் கதை, வசனம் எழுதியிருந்தாலும், அந்தப் படங்களின் பாடல்களை உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி போன்றவர்கள் எழுதினார்கள். இவரும் ஒன்றிரண்டு எழுதினார்.

எல்லாத் திறமைகள் இருந்தும்கூட தன்னை ஒரு படத்தின் மொத்தப் பாடல்களையும் யாரும் எழுதச் சொல்ல மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கத்தில்தான் எல்லாப் பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்று எண்ணி 'மாலையிட்ட மங்கை' படத்தைத் தயாரித்தார் கண்ணதாசன். 'ஆசைதீர அதில் பதினெட்டுப் பாடல்களை எழுதினேன்' என்று அவரே ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 'கண்ணதாசனின் சகாப்தம்' என்பது திரைத்துறையில் 1960-க்குப் பிறகு தான் தொடங்குகிறது.

ஏனைய கவிஞர்கள் தாங்கள் படித்ததை அறிந்ததைப் பாடலாக்கினார்கள். அது நம் மூளையைத் தொட்டது. ஆனால், கண்ணதாசன் தனது அனுபவத்தைப் பாடலாக்கினார். அதனால் அது நம் இதயத்தை தொட்டது. மேலும் ஆழமாக மக்கள் மனதில் பதிந்து காலத்தை வென்று நிற்கிறது.

ஏணிப்படியாக உயர்த்திவிட்டவர்: 'நாளைப் பொழுது எப்படி விடியுமோ எதிர்காலம் என்னாகுமோ?' என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கெல்லாம் ஆறுதல் தரக்கூடிய வரிகள் அவர் பாடலில் எங்காவது ஓரிடத்தில் இருக்கும். 'பாவ மன்னிப்பு' என்ற படத்தில் அவர் எழுதிய 'சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்' என்ற பாடலில் சரணத்தில் வருகிற 'காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்' என்ற வரிகள்தான் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது. சினிமாவிலும் அரசியலிலும் என்னைச் சேர்ந்தாற் போல் வளர்ந்து விட்டவர் எம்.ஜி.ஆர்.தான் என்றாலும் அவரிடத்தில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தது கண்ணதாசனது இந்த வரிகள்தான்.

பூவை செங்குட்டுவன் சினிமா பாடல் ஆசிரியராக ஆனதற்குக் காரணமும் கண்ணதாசன்தான். ஒன்றிரண்டு படங்களுக்குப் பாடல் எழுதிய பிறகும் வாய்ப்புக் கிடைக்காமல் ஊருக்குப் போவதற்குத் தயாராக இருந்த வாலிக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்து ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்றால் அதற்கு 'சுமைதாங்கி' படத்தில் இடம் பெற்ற 'மயக்கமா கலக்கமா?, மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா' என்ற கண்ணதாசன் பாடல்தான் காரணம். எம்.ஜி.ஆர். அடிக்கடி கேட்க விரும்பிய பாடல் 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற பாடல்தான்.

ஒரு காலத்தில் திரைப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா?, ஆகாதா? என்ற விவாதம் எழுந்தபோது, 'ஆகாது' என்று கூறியவர் கண்ணதாசன். 'ஆகும்' என்று சொன்னவர் கவிஞர் சுரதா. குமுதம் பத்திரிகையில் 1958-ஆம் ஆண்டு மாறி மாறி எழுதிக் கொண்டிருந்தார்கள். கண்ணதாசன் அப்படிச் சொன்னதற்குக் காரணம் தஞ்சை ராமையாதாஸ் அப்போது கொடிகட்டிப் பறந்த காலம். அதனால் அப்படிச் சொன்னார்.

உரை நடையிலும் சாதனை புரிந்தவர் கண்ணதாசன். அவரது வனவாசத்துக்கு நிகரான உரை நடை இலக்கியம் எதுவும் இருக்க முடியாது. அவை சிறு சிறு வாக்கியங்களாகத்தான் இருக்கும். அதை சீர் பிரித்து எழுதினால் அகவற்பா ஆகிவிடும். வனவாசம் தான் புதுக்கவிதையின் தொடக்கம் என்பது என்கருத்து.

உயிருக்காக முயல் ஓடுகிறது - இரைக்காக நாய் ஓடுகிறது, ஓட்டம் ஒன்றுதான். காரணம் வேறு.

இப்படிச் சிறு சிறு வாக்கியங்களாக இருக்கும்.

எதிர்காலத்தை நினைத்தபடி அவன் கடற்கரையில் படுத்திருந்தான். நிகழ்காலம் தடியால் தட்டி அவனை எழுப்பியது என்று கவித்துவமாக எழுதியிருப்பார்.

நான் திரையுலகில் நுழைவதற்கு முன்பே கண்ணதாசனும் நானும் பல கவியரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறோம். இந்தக் கவியரங்கக் கவிதைகள் புத்தகமாக வெளிவந்தது. அதற்கு முன்னுரை எழுதிய கண்ணதாசன், 'இதில் எல்லாக் கவிதைகளும் சிறப்பாக இருக்கிறது என்றாலும், முத்துலிங்கம் கவிதையில் எங்கள் பாண்டி நாட்டுத்தமிழ் தாளம் போட்டு விளையாடுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

கடைசிக் காலத்தில் கண்ணதாசன் எந்தக் கட்சிக்குப் பாடுபட்டாரோ அந்தக் கட்சி அவரைக் கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர். தான் கண்ணதாசனைச் சிறப்பிக்க வேண்டும் என்று கருதி அவரை அரசவைக் கவிஞராக்கினார். அவர் மறைவுக்குப் பிறகு புலவர் புலமைப்பித்தனை அந்தப் பதவியில் அமர்த்தினார். அவரது பதவிக்காலம் முடிந்த பிறகு என்னை அரசவைக் கவிஞராக்கினார்.

என்னுடன் அந்தப் பதவி முடிந்துவிட்டது.

மனதில் பட்டதைப் பேசுபவர்: தொட்ட துறைகளிலெல்லாம் வெற்றி பெற்ற கண்ணதாசன் தோற்ற துறை ஒன்றுண்டு. அதுதான் அரசியல். நெப்போலியனுக்கு ஒரு வாட்டர் லூவைப் போல கண்ணதாசனுக்கு வாட்டர் லூவாக அமைந்தது அரசியல். அரசியலுக்குத் தேவையான பக்குவம், நிதானம், பொறுமை கண்ணதாசனிடம் இருந்ததில்லை. மனதில் பட்டதை அப்படியே வெளியில் பேசுவார். முதல் நாள் ஒருவரைத் தூக்கோ தூக்கு என்று தூக்கிப் பேசுவார். மறுநாள் தாக்கோ தாக்கு என்று தாக்கிப் பேசுவார்.

'நேற்றுப் போற்றினோமே இன்று தூற்றுகிறோமே மக்கள் என்ன நினைப்பார்கள்' என்று எண்ணிப் பார்க்க மாட்டார். இந்த முரண்பாடுதான் இலக்கியத்தில் அவருக்கு வெற்றி தேடித்தந்தது. இந்த முரண்பாடுதான் அவருக்கு அரசியலில் தோல்வியைத் தேடித் தந்தது. அவர் முரண்பாடுகளின் மொத்த உருவம். அவரை ரசிக்கலாம். பின்பற்ற முடியாது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு கண்ணதாசன். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டும் கண்ணதாசன்தான்.

சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்

பார் மீது நான் சாகா திருப்பேன் கண்டீர்

என்றார் பாரதியார்.

அது போல் கண்ணதாசனும்,

'மானிட இனத்தை ஆட்டிவைப்பேன், அவர் மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்றார். கண்ணதாசன் போன்றவர்களுக்கு என்றைக்கும் மரணமில்லை.

தமிழிருக்கும் காலம் வரை அவர் பெயர் இருக்கும்.

கட்டுரையாளர்:

திரைப்படப் பாடலாசிரியர்,

முன்னாள் அரசவைக் கவிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments