காலிங்கராயன் அணைக்கட்டு பருந்துப் பார்வையில் 
ஞாயிறு கொண்டாட்டம்

நதிநீர் இணைப்பின் முதல்வன்...

பதிமூன்றாம் நூற்றாண்டு வரை வானம் பார்த்த பூமியாக இருந்த ஈரோடு முதல் கரூர் வரையிலான பகுதிகள் இன்று 'பச்சைப் பசேல்' என்று காட்சி அளிக்கின்றன.

க.தங்கராஜா

பதிமூன்றாம் நூற்றாண்டு வரை வானம் பார்த்த பூமியாக இருந்த ஈரோடு முதல் கரூர் வரையிலான பகுதிகள் இன்று 'பச்சைப் பசேல்' என்று காட்சி அளிக்கின்றன. இதற்குக் காரணம் காவிரியையொட்டி வெட்டப்பட்ட 'காலிங்கராயன் வாய்க்கால்' எனும் 'காலிங்கராயன் அணைக்கட்டு நீர்ப்பாசனத் திட்டம்'.

நதிநீர் இணைப்பின் முன்னோடியாக, இன்றைக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்தக் கால்வாயை 750 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய காலிங்கராயனை கடவுளாக மேற்கு மண்டல மக்கள் இன்றும் வழிபடுகின்றனர்.

வாய்க்கால் கடைமடை

இஸ்ரேல் நீர் மேலாண்மைத் திட்டத்தை உலகமே புகழும் இன்றைய காலகட்டத்தில், விஞ்ஞான ரீதியிலான செயற்கைப் பாசனத் திட்டத்தை அன்றே வெற்றிகரமாகச் செயல்படுத்திய காலிங்கராயன் கால்வாயானது 'உலகப் பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்பு' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.அங்கீகரித்த நீர்ப்பாசனம், வடிகாலுக்கான சர்வதேச ஆணையமும் பெருமைப்படுத்தியுள்ளது.

'காலிங்கராயனைப் பற்றி முழுமையாக மக்கள் அறிந்திராமல் இருக்கின்றனரே?' என்கிற ஆதங்கத்தில், பத்து ஆண்டுகள் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே ஆய்வு செய்து, இதுவரை அறிந்திராத தகவல்களைச் சேகரித்து நூலாக எழுதியிருக்கிறார் பேராசிரியர் க.பானுசந்தர்.

ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட கொடுமுடி அருகேயுள்ள புஞ்சை கொளாநல்லி கிராமத்தைச் சேர்ந்த பானுசந்தர், விமானப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்று, எம்.பி.ஏ. பட்டமேற்படிப்பை முடித்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் மேலாண்மைத் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

'காலிங்கராயன்- நதிநீர் இணைப்பின் முதல்வன்' என்ற தனது முதல் நூலின் மூலம் வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்த மனநிறைவோடு உள்ள பானுசந்தரிடம் பேசியபோது:

'ஈரோடு அருகேயுள்ள வெள்ளோடு கனகபுரத்தில் பிறந்த லிங்கய்யன், வீரபாண்டியனின் படையில் போர் வீரனாகச் சேர்ந்து, கொங்கு நாட்டின் 24 நாடுகளில் ஒன்றான பூந்துறை - மேல்கரை அரைய நாட்டின் தளபதியானார். இந் நாடு, ஒருபக்கம் காவிரியையும் மறுபக்கம் அமராவதியையும் எல்லையாகக் கொண்டது. இடையில் பவானி, நொய்யல் ஆறுகள் பாய்ந்தாலும், அவை தாழ்வான பகுதியில் இருந்ததால், வேளாண்மைக்கு நீரை எடுப்பதில் சிக்கல் இருந்தது. இதனால் மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இதனால் காலிங்கராயன், தனது நிலப்பரப்பை வளமாக்க நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தினார்.

எனது கற்பித்தல் பணிக்கு இடையிடையே தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு, காலிங்கராயன் குறித்து அறிய 2016 முதல் தொடர்ந்து உழைக்கும் உத்வேகத்துடன் செயல்பட்டேன்.

அவருடைய ஆட்சியில் கட்டப்பட்ட கோயில்கள், கொடைகளை அறிந்து எனது கவனத்தைச் சிதறவிடாமல், மிகச் சிறந்த பொறியியல் அறிவையே சேகரித்தேன்.

திருவனந்தபுரம், கொல்கத்தா, தில்லி வரைஆவணங்களையும், தகவல்களையும் தேடினேன். சில ஆவணங்கள் இங்கிலாந்தில் இருந்தன. பல ஆவணங்களை யாரோ, என்ன காரணத்தினாலோ அழித்துச் சென்றுவிட்டனர். கட்டமைப்பு குறித்த ஆய்வுக்கு வாய்க்காலின் மொத்த தூரத்துக்கும் சென்றேன். பல இடங்களில் பாம்புகளும் விஷப் பூச்சிகளும் நிறைந்த, அணுக முடியாத பல நீர்ப்பாசன அமைப்புகளைக் கண்டறிய வேண்டியிருந்தது.

ஈரோடு மாநகரின் மொத்தக் கழிவுகளும் பாயும் 'பெரும்பள்ளம்', 'குரங்கன்பள்ளம் ஓடை' புதைகுழிகளில் உயிரைப் பணயம் வைத்து இறங்கி, புகைப்படங்களை எடுத்து, தரவுகளைச் சேகரித்தேன். அவருடைய பொறியியல் பெருமைகளை 300 பக்கங்களுக்குள் சுருக்கியதே மிகவும் சிரமமாக இருந்தது.

ஒரு கரை மட்டுமே கொண்ட விளிம்புக் கால்வாய்

ஆய்வில் கிடைத்தவை

காலிங்கராயன் தனது இரண்டாவது அணையை நொய்யல் ஆற்றில் ராசாம்பாளையம் அருகே கட்டி, அதன் மூலம் 1291-ஆம் ஆண்டு முதல் 1317 வரை பாசனம் நடத்தியுள்ளார். 'வரகுணன் அணைக்கட்டு' என்ற இந்த அணைக்கட்டு, இன்று உருக்குலைந்து 'ஓட்டை அணை' என்று அழைக்கப்படுகிறது.

பவானியின் குறுக்கே வெறும் பாறைக் கற்களைக் கொட்டி நீரைத் தடுப்பதற்கு அருகேயுள்ள ஊராட்சிக் கோட்டை மலையில் இருந்து 7 டன் முதல் 10 டன் வரையிலான கற்களை யானைகள் பூட்டப்பட்ட வாகனங்களில் கொண்டு வந்தது, நீரின் அழுத்தத்தைத் தாங்குவதற்காக அணைக்கட்டின் தலைப்பகுதியை நேராக வடிவமைக்காமல் பாம்பு போல வளைத்து வளைத்து வடிவமைத்தது, நதிகளை இணைப்பதற்கு முன்னதாக குளங்களை இணைத்தது, ஓடையின் கீழ் நீர்வழிப்பாலம், ஓடையின் மேல் நீர்வழிப்பாலம், கடைமடை வரையிலும் வாய்க்காலை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் கட்டமைப்புகளை அறிந்தேன்.

வாய்க்காலில் முதல் நீர் திறப்பு நடைபெற்ற 1282 தை 5- ஆம் தேதி விழாவில் பங்கேற்ற பாண்டிய மன்னன் வீரபாண்டியன், சகோதரர் சுந்தரபாண்டியன், தந்தையார் பேரரசன் மாறவர்மன் குலசேகரன், ஏராளமான சிற்றரசர்கள், அமைச்சர்கள் வந்திருந்தனர்.

 1317-இல் காலிங்கராயன் போரில் மறைந்தவுடன் ஹொய்சாளர்கள், இஸ்லாமியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் காலம் வரை அந்த அணைக்கட்டு பல்வேறு காலகட்டங்களில் சேதமடைந்தன. பின்னர், அவை பழுதுகள் பார்க்கப்பட்டதோடு, பராமரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 ஆங்கிலேயர் ஆட்சியில், பாசனப் பகுதியில் நெல்லுக்கு மட்டும் பல மடங்கு கூடுதல் விலை கிடைத்துள்ளது. பாசனத்தைப் பயன்படுத்திய மக்களின் குறையைத் தீர்ப்பதற்காக, 'நீர்வாரச் சந்தை' என்ற பெயரில் குறைதீர் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

காலிங்கராயனின் மறைவுக்குப் பின்னர் அவரைச் சார்ந்தோர் தங்களின் கால்நடைகளுடன் 80 மைல் பயணித்து பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன் ஊத்துக்குளிக்கு புலம்பெயர்ந்தனர்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளேன். காலிங்கராயனின் நினைவைப் போற்றும்விதமாக, அவருக்கு மணிமண்டபம் கட்டி, சிலையை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது' என்கிறார் பேராசிரியர் பானுசந்தர்.

கே.பானுசந்தர்

'ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் இருந்து அந்தக் காட்சியை நான் கண்டேன். அது, தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் நதிகள் பாய்கின்றன. அதைத் தாண்டி இருமருங்கிலும் நெல், மஞ்சள், வாழை, கரும்பு வயல்களாக எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்ற பூமி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பசுமை மட்டுமே. அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்களை உண்ணுவதற்காக கிளிகளும் குருவிகளும் கொக்குகளும் மயில்களும் காத்திருக்கின்றன.

அந்தப் பூமி கானகம்போலக் காட்சி தருகிறது. ஆங்காங்கே விவசாயத் தொழிலாளர்களின் தலைகள் மட்டும் தென்படுகின்றன. அவர்களின் கால்கள் அனைத்தும் நீருக்குள் மூழ்கியுள்ளது. இந்தக் காட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டும் இல்லை; தொடர்ந்து 90 மைல்கள் தூரத்துக்கு இடைவெளியின்றி இப்படியே இருப்பதைக் கண்டு அதிசயித்தேன்' என்று ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஆர்.ஹோம் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்காக, அப்போதைய பம்பாயில் (மும்பை) இருந்து ஈரோடு வழியாக ரயிலில் 1889- ஆம் ஆண்டில் பயணித்த அவர் தனது பயணக் குறிப்பில் மேற்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்னதாய் ஓர் அரண்மனை

இளைஞர்களிடம் வாசிப்பு அதிகமாகிவிட்டது

தமிழக மருத்துவத் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கண்டுபிடி கண்ணே!

பெர்னாட்ஷா அறிந்துகொண்டது..

SCROLL FOR NEXT