அசத்திய மாணவர்கள்...
காட்பாடி என்.டி.டி.எஃப். நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்ற "ப்ராஜெக்ட் எக்ஸ்போ 2026' கண்காட்சியில், மாணவர்களே நூறு படைப்புகளை உருவாக்கி அசத்தியிருந்தனர்.
காட்பாடி என்.டி.டி.எஃப். நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்ற "ப்ராஜெக்ட் எக்ஸ்போ 2026' கண்காட்சியில், மாணவர்களே நூறு படைப்புகளை உருவாக்கி அசத்தியிருந்தனர். பத்து மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவ, மாணவியர் இதைப் பார்வையிட்டு அதிசயித்து வியந்தனர்.
மாணவர்களுக்கு பொறியியல் மீதான ஆர்வத்தை உண்டாக்கும் நோக்கத்துடனும், அவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கும் வகையிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து நிறுவன முதல்வர் பி.கணேஷிடம் பேசியபோது:
Advertisement
Advertisement
'எங்கள் நிறுவனத்தில் பயிலும் மெக்கட்ரானிக்ஸ், டூல் மேக்கிங் ஆகிய பிரிவுகளில் முதலாம், இரண்டாம் ஆண்டுகளிலும் பயிலும் மாணவர்கள் அறுபது பேர் ஒன்றுசேர்ந்து, எங்களது மேற்பார்வையில் இந்தக் கண்காட்சியை நடத்தினர்.
ரோபோடிக்ஸ், ஆட்டோமேட்டிக் கிளீனிங், ஐ.ஓ.டி., இன்டஸ் ஆட்டோ மெஷின் போன்ற நூறு படைப்புகளை மாணவர்களே உருவாக்கியிருந்தனர்.
தொழிற்சாலையில் ஒரு கருவி இயந்திரத்தில் தயாராகும் விதம் குறித்து டூல் மேக்கிங் பிரிவு மாணவர்கள் உருவாக்கிய படைப்பு கண்காட்சியில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.
வேலூர் ஊரீசு மேல்நிலைப் பள்ளி, வாணி வித்யாலயா, பெருமுகை அரசு மேல்நிலைப் பள்ளி, அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பில்லாந்திப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி, கே.வி.குப்பம் சாய் குருஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்பட பத்து மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 654 மாணவ, மாணவியர் கண்காட்சியைப் பார்வையிட்டு, படைப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர். பள்ளி மாணவர்களுக்கு எழுந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ததோடு, படைப்புகளின் விளக்கங்களையும் என்.டி.டி.எஃப். மாணவர்கள் அளித்தனர்.
கண்காட்சியைப் பார்வையிட்ட பள்ளி மாணவர்கள் மனம் மகிழும் வகையில், நிறைவில் பொழுதுபோக்கு அம்சங்களையும் என்.டி.டி.எஃப். மாணவர்கள் வடிவமைத்திருந்தனர். பந்து வீசுதல், பலூன் சுடுதல் போன்ற விளையாட்டுகளையும் பள்ளி மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
என்.டி.டி.எஃப். மாணவர்கள் அசத்திய கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்த்து வியந்தனர் என்றே சொல்லலாம்'' என்கிறார் பி.கணேஷ்.
என்.டி.டி.எஃப். மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ்.சக்திவேல் கூறுகையில், 'கண்காட்சியில் எங்களது படைப்புகளும் பங்கேற்றது புதுமையான அனுபவமாக இருந்தது. பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அவர்களுக்கு பொறியியல் மீதான ஆர்வமும் அதிகரித்தது'' என்கிறார்.