FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விழிப்புணர்வு விழிகள்

ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் கண்கள் தானம், 620 பேரின் உடல்கள் தானம், மூளைச் சாவு அடைந்த 4 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெற்று அளித்துள்ளார் ரோட்டரி மாவட்டம் 3231 உதவி ஆளுநர் எம்.கோபிநாத்.

Updated On : 1 மார்ச் 2026, 4:04 am IST
பகிர்:

ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் கண்கள் தானம், 620 பேரின் உடல்கள் தானம், மூளைச் சாவு அடைந்த 4 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெற்று அளித்துள்ளார் ரோட்டரி மாவட்டம் 3231 உதவி ஆளுநர் (நிர்வாகம்) எம்.கோபிநாத். இதோடு, ஆதரவற்ற 650 பேரின் சடலங்களை முறையாக அனுமதி பெற்று, அடக்கமும், தகனமும் சொந்த செலவில் செய்துள்ளார்.

வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவரும், கண் தானப் பிரிவின் மாவட்டத் தலைவருமான கோபிநாத், பல்லாயிரக்கணக்கானோருக்கு ஒளிவிளக்காக இருந்து வருகிறார். கொண்டசமுத்திரம் கவரைத் தெருவில் வசித்துவரும் நாற்பத்து எட்டு வயதான கோபிநாத்திடம் பேசியபோது:

'ரோட்டரி சங்கத்தில் 16 ஆண்டுகளாக இருந்துவருகிறேன். கண் தானம் குறித்து, குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த என்.எஸ்.மணியின் மறைவுக்குப் பின்னர் நான் இந்தப் பணியைத் தொடர்ந்தேன். 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 1,100 பேரின் கண்கள் தானம், 620 பேரின் உடல் தானம், 4 பேரின் உடல்உறுப்புகள் தானத்தைப் பெற்று பல்வேறு மருத்துமனைகளுக்கு அனுப்பியுள்ளேன்.

Advertisement

Advertisement

திருவண்ணாமலையில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தங்கி எட்டாம் வகுப்பு பயிலும் ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு எனது சொந்த செலவில் இலவசமாக கண் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு, பார்வை பெற உதவினேன்.கல்வி நிலையங்களில் கண்தானம் தொடர்பான மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறேன்.

இதுவரை 20 முறை ரத்த தானம் செய்துள்ளேன். நாற்பதுக்கும் அதிகமான ரத்த தான முகாம்களை ஒருங்கிணைத்ததன் வாயிலாக 2 ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ரத்த தானம் பெற்று ரத்த வங்கிகளுக்கு அளித்துள்ளேன்.

கல்லப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமைகள்தோறும் ஸ்கேன் செய்ய வருகை தரும் கர்ப்பிணிகளுக்கு 'உணவும் உயிரும்' என்ற தலைப்பில் சத்தான மதிய உணவும், அறுவைச் சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் பெற ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சுப்பிரமணியன் வாயிலாக 150-க்கும் மேற்பட்ட யோகா பயிற்சிகளையும் அளித்துள்ளேன். இதனால் 4,500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர். அங்கு சுகப் பிரசவம் அதிகரித்துள்ளது.

நாட்டில் எங்கு மழை வெள்ளம், இயற்கைச் சீற்றம் ஏற்பட்டாலும் நிவாரண பொருள்களைப் பெற்றுச் சென்று, நேரடியாகச் சென்று வழங்கியுள்ளேன். கரோனா காலத்தில் இயன்ற அளவுக்கு உதவினேன்.

விருதுகள்

வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருது, குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் 'கண் தான செம்மல்', வேலூர் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 'சேவை வேழம்', திருப்பூர் தேசம் காப்போம் அறக்கட்டளை சார்பில் 'விழிப்புணர்வு விழிகள்' விருது, செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் 'சேவை சக்கரவர்த்தி', குடியாத்தம் இன்னர்வீல்சங்கம் சார்பில் 'கண்ணொளி நாயகன்', ஆம்பூர் புத்தகத் திருவிழாவில் சிறந்த சேவையாளர், வேலூர் மாவட்ட நடிகர் சங்கத்தின் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். செருவங்கி நகராட்சி தொடக்கப் பள்ளி, சீவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களிலும், பாராட்டப்பட்டுள்ளேன்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, மருத்துவப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் எனது சேவையைப் பாராட்டியுள்ளனர்.

லட்சியம்

. 24 மணி நேரமும் எனது செல்போனை ஆன் செய்து வைத்திருப்பேன். நள்ளிரவு, அதிகாலையில் போன் வரும். துக்கத்துடன் இருக்கும் உறவினர்களிடம் பேசி கண்தானம் குறித்துப் பேசுவேன். உடனுக்குடன் கண் மருத்துவமனைக்குப் பேசி மருத்துவர்களை வரவழைப்பேன்.

வெளிமாநிலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பணி நிமித்தமாகச் சென்றுள்ளேன். அங்கு இருந்தபோது கூடகண்தானம் பெற்றுத் தந்துள்ளேன். இறந்தவர்களின் கண்களை தானம் அளித்தவுடன் அவர்களது உறவினர்கள் துக்கத்திலும் மன நிறைவோடு கண்களில் கவலை தோய்ந்த கண்ணீருடன் நன்றி சொல்லும் காட்சியைக் காணும்போது நெஞ்சம் கனக்கும்.

இலங்கை நாட்டில் இறந்தவர்கள் கண் தானம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை இந்தியாவிலும் வந்தால் பார்வையில்லாதவர்கள் இல்லாத நிலை இங்கும் உருவாகும்' என்கிறார் கோபிநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments