ஆங்கிலத்தைக் கல்யாணம் செய்தேன் தமிழைக் காதலிக்கிறேன்
தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பட்டிமன்றங்கள் அரங்கேறுவது, தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக அது இருப்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பட்டிமன்றங்கள் அரங்கேறுவது, தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக அது இருப்பதை உணர்த்துகிறது. பேச்சாளர்கள் தங்களின் வாதத் திறமையின் மூலம் தமிழின் சுவையையும், அழகையும் வெளிப்படுத்துகின்றனர். பண்டிகைகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், சுப நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பட்டிமன்றங்கள் நிகழ்த்தப்படுவது சிறப்பு.
இப்படிப்பட்ட பட்டிமன்றங்களில் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவர், நடுவர், 52 ஆண்டுகள் பேச்சு உலகில் வலம் வரும் பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன். இளங்கலையில் இயற்பியலும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் 34 ஆண்டுகள் பணியாற்றியவர்.
2004 -ஆம் ஆண்டில் பணி ஓய்வுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள தமிழ் மேடைகளில் உரையாற்றுவதையே முழு வேலையாகச் செய்து வருகிறார். இதுவரை சுமார் 4,500 பட்டிமன்றங்களில் உரையாற்றியுள்ளார். ஊக்க உரை, ஆன்மிகச் சொற்பொழிவு என 1,500 மேடைகளுக்கு மேல் முழங்கியிருக்கிறார். பல நாடுகளுக்குப் பயணம் செய்து, தமிழ் மணம் பரப்பியிருக்கிறார். 'கம்பன்: சில தரிசனங்கள்', 'என் மேடை அனுபவங்கள்' என்கிற புத்தகங்களை எழுதியுள்ளார். பல பட்டங்களைப் பெற்றுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து:
Advertisement
Advertisement
'பேச்சு என்பது ஒரு கலை. அந்தக் கலையைச் சரியாகக் கையாளத் தெரிந்ததால்தான், பேராசிரியராக இருந்தாலும் பேச்சாளராக இருக்க முடியும். பேச்சாளராகப் பரிமளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு பயிற்சிக்காகப் பேராசிரியராக ஆனேன்.
சிறு வயதில் இருந்தே எனக்குப் பேச்சாளராக வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. மதுரையில் பிறந்ததால், சுற்று வட்டாரத்தில் எங்கு பட்டிமன்றங்கள் நடந்தாலும், இளம் வயதிலேயே அதில் கலந்துகொள்வேன். பின்னர், 'இந்தத் தலைப்பில் நான் பேசியிருந்தால், என்ன பேசியிருப்பேன்' என்று வீட்டுக்கு வந்து பேசிப் பார்ப்பேன்.
பேராசிரியர் பணி எனக்கு ஊதியம் தந்தது, பேச்சாளர் பணி சமூகத்துக்கு நம்மால் இயன்றதைச் செய்கிறோம் என்கிற நிம்மதியைத் தந்தது.
முதல் பேச்சு அனுபவம்
முதன் முதலில் நான் ஏறியது பேச்சு மேடையல்ல, கவியரங்க மேடை. 1973- ஆம் ஆண்டு, தென்காசித் திருவள்ளுவர் கழகம் சார்பில் கவிஞர் மீரா தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்டேன். அங்கு அடர்த்தியும் அர்த்தமும் நிறைந்த கவிதைகளை பாடும் கவிஞர்கள் மத்தியில் சிறந்த கவிதையைப் பேசினேன்.
அதே ஆண்டுதான் திருமணமும் நடந்தது. எனது துணைவியார் தென்காசியைச் சேர்ந்தவர். அதனால் கவியரங்கத் தலைவர், 'பொதுவாக எல்லா ஊர்களிலும் கவிஞர்களுக்கு பொன் கொடுப்பார்கள்; இவ்வூரில் இந்தக் கவிஞருக்கு பெண் கொடுத்துள்ளனர்' என்று வேடிக்கையாகச் சொன்னார்.
தமிழ்ப்பேச்சாளரான சுவாரஸ்யம்
நான் பயின்ற மதுரை தியாகராஜர் கல்லூரியிலே மாதம் ஒருமுறை ஒரு மிகச்சிறந்த பேச்சாளரை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். அறிஞர் அண்ணா, கருணாநிதி, குன்றக்குடி அடிகளார் போன்ற பெரிய பேச்சாளர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் பேச்சு எனக்குத் தமிழின் மீது ஆர்வத்தைத் தூண்டியது.
அக்காலத்தில் எனக்கு வகுப்பெடுத்த பேராசிரியர் சங்கரநாராயணன், பேராசிரியர் ஒளவை நடராஜன், பேராசிரியர் சுப. அண்ணாமலை போன்ற மிகப்பெரிய பேராசிரியர்கள் தமிழின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கக் காரணமாக இருந்தனர்.
அவர்களுடைய வகுப்புகளைக் கேட்கும்போதே, இது மாதிரி ஒரு பேச்சை நாமும் பேச வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள்ளே உறுதியாகிக் கொண்டிருந்தது. அப்படித்தான் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவனாக இருந்தாலும், நான் ஒரு தமிழ்ப் பேச்சாளரானேன். விளையாட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆங்கிலத்தைக் கல்யாணம் செய்துகொண்ட நான் தமிழைத்தான் இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
மக்களின் எதிர்பார்ப்பு
பட்டிமன்றங்களில் வெகு சிலரே சிந்தனையை எதிர்பார்த்து வருகிறார்கள். பெருவாரியான மக்கள் சிரிப்பதற்கே வருகிறார்கள். இன்றைக்கு வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. வாழ்க்கையில் ஏராளமான பிரச்னைகளைச் சந்திக்கிற மனிதர்கள், கொஞ்சம் மனநிம்மதி செய்து கொள்வதற்காகத்தான் பட்டிமன்றத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய சிந்தனை எல்லாம் கொடுத்தால் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.
அவர்கள் ஏற்கெனவே மூளை காய்ந்து, வற்றி வருகிறார்கள். அவர்கள் மூளையை, மனதைக் கொஞ்சம் உற்சாகப்படுத்துற மாதிரி எளிமையாக, இன்னும் சொல்லவேண்டுமென்றால், கிச்சுகிச்சு மூட்டுவதாக நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தால் போதும்.
பேச்சாளர்களுக்கும் அது வசதியாக இருக்கிறது. அங்கே பார்த்தது, இங்கே பார்த்தது எல்லாம் வைத்து விளையாட்டாக வேடிக்கையாகப் பேசிவிட்டால் போதும். இப்போதெல்லாம் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது சீரிய சிந்தனைகளையோ அழுத்தமான கருத்துகளையோ அல்ல; விளையாட்டான பேச்சுகளை, கேலிப் பேச்சுகளை, நையாண்டி பேச்சுகளைத்தான்.
அதுவும் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றம் ஒலிபரப்பத் தொடங்கிய பிறகு, அந்தத் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக அவர்கள் பெரிய சிந்தனையான விஷயங்கள் எல்லாம் 'எடிட்' செய்துவிட்டு, கைதட்டு வாங்கக்கூடிய, சிரிக்க வைக்கக்கூடிய அந்தத் துணுக்குகளை மட்டும் ஒளிபரப்புகிறார்கள்.
தொலைக்காட்சி பட்டிமன்றத்தை நடத்துபவர்களே, 'ஒன்னும் சீரியசா எதுவும் பேச வேணாம் சார். சும்மா 17 நிமிடம் நல்லா வயிறு குலுங்க சிரிக்க வச்சாப் போதும்' அப்படின்னு சொல்லித்தான் பட்டிமன்றத்துக்கே அழைக்கிறார்கள். ஆனால், சிரிக்க வைப்பதற்காகத்தான் பட்டிமன்றம் நடத்த வேண்டும் எனில், அது பேச்சாளர்களுக்கு அவமானம். பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டுவதற்குத்தான் நடத்தப்படவேண்டும்.
சிரிப்பும் சிந்தனையும்
நகைச்சுவை யாரையும் காயப்படுத்தாமல், யாருடைய குணாம்சங்களையும் குறை சொல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் அடிப்படை எதிர்பார்ப்பு. நகைச்சுவை நாகரிகமாக இருக்கவேண்டும். நகைச்சுவை என்பதைவிட ஆங்கிலத்தில் சொல்வது அர்த்தபுஷ்டியாக இருக்கிறது. 'சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்'. அதாவது நகைச்சுவையில் கூட ஓர் அறிவு.
நாம் எடுத்துக்கொண்ட கருத்தைச் சொல்வதற்கு நகைச்சுவை ஒரு கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய, நகைச்சுவையையே மையமாக வைத்துப் பேசுவது என்பது ஒரு பேச்சாளருக்கு அழகல்ல. சிரித்து அடுத்த நொடி சிந்திக்க வேண்டும். சிரிப்பையும், சிந்தனையையும் கலந்து கொடுக்கவேண்டும்.
நகைச்சுவை என்பது ஒரு மிகப்பெரிய கலை. சார்லி சாப்ளின் மாதிரி என்.எஸ். கிருஷ்ணன் மாதிரி இருக்க வேண்டும். சமூக பிரச்னை, சமூக அக்கறை, நகைச்சுவை வழியாகக் கூட வெளியே வரவேண்டும். பேச்சுகளில் அப்படி நகைச்சுவை மிளிரும் என்றால், பேச்சரங்கத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும்' என்கிறார் சிவகாசி ராமச்சந்திரன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.