முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இணையத்தில் காந்தி அருங்காட்சியக ஆவணங்கள்

'மகாத்மா காந்தி அருங்காட்சியகங்களில் உள்ள ஆவணங்கள் எண்ம வடிவத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.

Updated On : 28 மார்ச், 2026 at 10:29 PM
பகிர்:

'மகாத்மா காந்தி அருங்காட்சியகங்களில் உள்ள ஆவணங்கள் எண்ம (டிஜிட்டல்) வடிவத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. 10 ஆயிரம் புகைப்படங்கள், 40 ஆயிரம் கடிதங்கள், அவரோடு லார்டு இர்வின் உள்ளிட்ட தலைவர்களுடன் பி.பி.சி. செய்தி நிறுவனம் 1950-களில் ஒலிபரப்பிய நேர்காணல்கள் ஆகியவற்றை இணையவழியில் பதிவேற்றம் செய்வதோடு, தமிழ் உள்பட இந்திய மொழிகளில் குரல் வழி மொழிபெயர்ப்பு செய்யவுள்ளோம்.

அவற்றில் இடம்பெறும் தமிழ் வாசகங்களையும் படித்துக் கொள்ளலாம். இந்தப் பணி இரு மாதங்களில் முடிவடையும்' என்கிறார் புதுதில்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ. அண்ணாமலை.

தஞ்சாவூருக்கு அண்மையில் வருகை தந்த அவரிடம் பேசியபோது:

'1948 - ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி மறைந்தவுடன் அவரது நினைவைப் போற்றும் வகையில், முக்கிய இடங்களில் முழுமையான பொதுமக்கள் பங்களிப்புடன் அருங்காட்சியகங்கள் அமைப்பது என ராஜேந்திர பிரசாத், ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

இதன்படி வசூலான ரூ. 11 கோடியில் மதுரை, மகாராஷ்டிர மாநிலம் வார்தா, மணி பவன், குஜராத் மாநிலம் அகமதாபாத், பிகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்கம் பராக்பூர், தில்லி ஆகிய 7 இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் காந்தி பயன்படுத்திய பொருள்கள், சுதந்திரப் போராட்டங்களை நினைவுகூரும் பொருள்கள், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், ஆவணங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

10 ஆயிரம் புகைப்படங்கள்

தான் வாழ்ந்த காலத்திலேயே மகாத்மா காந்தி பெரும்பாலான ஆவணங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவர் உருவாக்கிய இயக்கங்கள் அதற்கு முன்பு நடைபெறாத புதுமையானவை.

இவையெல்லாம் எதிர்வரும் தலைமுறையினருக்குப் பயன்படும் என்பதால், அவரே அனைத்தையும் ஆவணப்படுத்தியிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் குறித்த பத்திரிகை செய்திகள், அவர் வாசித்த நூல்கள் உள்ளிட்டவை அருங்காட்சியகங்களில் உள்ளன.

அந்தக்காலத்தில் அதிகபட்சமாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டது அநேகமாக மகாத்மா காந்திக்காகவே இருக்கும். கிட்டத்தட்ட 10 ஆயிரம் புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. அவரது கடைசி தருணம் வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பாகவே வைத்துள்ளோம்.

உள்ளூர் தலைவர்கள் முதல் ஹிட்லர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அனைவருக்கும் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இவையெல்லாம் பல நாடுகளிலும் பரந்து இருந்தாலும் கூட, அவர்களைத் தொடர்பு கொண்டு அனைத்து அசல், நகல்கள் என ஏறத்தாழ 40 ஆயிரம் கடிதங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

காந்தியின் ஆவணப் படங்கள், செய்தி படச்சுருள்கள் உள்ளன. இதில், சில காட்சிகளைப் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. ஒரு தொழுநோயாளியை காந்தி தனது ஆஸ்ரமத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டதற்கான புகைப்படங்கள் உள்ளன. எங்களுடைய ஆவணக் காப்பகத்தில் அந்தத் தொழுநோயாளிக்கு காந்தி மசாஜ் செய்து சிகிச்சை அளிக்கும் வீடியோவே இருக்கிறது.

சென்னையில் கஸ்தூரிபாயுடன் காந்தி எடுத்துக் கொண்ட புகைப்படமும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவையாறு காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் கிளை ஆற்றில் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டபோது, செய்தித்தாளில் வெளியான புகைப்படமும் உள்ளது. திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட மணப்பாறைக்கு காந்தி வந்தபோது, அவரிடம் உள்ளூர் பிரமுகர்கள் நிதி சேகரித்து வழங்கிய வீடியோவும் இருக்கிறது.

காந்தி தொடர்பான தேஷ் பாண்டே சேகரிப்புகளும் எங்களிடம் உள்ளது. பம்பாய் மாகாணத்தில் 1930 - 31- ஆம் ஆண்டுகளில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு, 8 தொகுப்புகளாக உள்ளன. உப்பு சத்தியாகிரகத்தின் நேரடி சாட்சியாக உள்ள இந்தப் புகைப்படங்

களில் பெண்கள் தங்கள் குழந்தைகளோடு தன்னெழுச்சியாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதுபோன்ற போராட்டம் உலகில் வேறெங்கும் நிகழ்ந்திருக்காது. இந்தப் புகைப்படங்களை எல்லாம் தில்லி அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக நடத்தி, பின்னர் மற்ற அருங்காட்சியகங்களுக்கு அனுப்புகிறோம். அங்கு இந்தப் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு, கண்காட்சி நடத்தப்படுகிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

1913-இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காந்தி அமர்ந்துள்ளார்.

அதில், காந்தியைத் தவிர அவருடன் உட்கார்ந்திருக்கும் அனைவரும் பெண்கள். இவர்களில் தமிழ்ப் பெண்கள் 17 பேர். பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வராத அக்காலகட்டத்தில் பெண்ணுரிமைக்கு அவர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை இந்தப் புகைப்படம் உணர்த்துகிறது. இதேபோல, லண்டனில் காந்தியுடன் ஆலைத் தொழிலாளர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்திலும் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர்.

இவ்வளவு பெண்களுடன் உலகத் தலைவர்கள் யாரும் இப்படியொரு புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை.

அருங்காட்சியகங்களில் காந்தி உடுத்திய உடை, அவரைச் சுட்டுக் கொல்லப்பட்டபோது ரத்தக்கறை படிந்த ஆடை, அவர் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு போன்றவையும் இடம்பெற்றுள்ளன' என்கிறார் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.