முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஆனைமங்கலச் செப்பேடுகள் சொல்வது என்ன?

சோழர் காலத்தைச் சார்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் 1700-களில் டச்சு ஆளுகையின்போது நாகப்பட்டினத்துக்கு கிறிஸ்தவ மதப்பணிக்காக வந்த ஃபுளோரன்டியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

Updated On : 24 மே 2026, 12:00 am IST
பகிர்:

சோழர் காலத்தைச் சார்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் 1700-களில் டச்சு ஆளுகையின்போது நாகப்பட்டினத்துக்கு கிறிஸ்தவ மதப்பணிக்காக வந்த ஃபுளோரன்டியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. தமிழ், சம்ஸ்கிருத மொழிகளைக் கொண்ட 21 செப்பேடுகளும் சுமார் 30 கிலோ எடையுடையவை. இதில், பிணைக்கப்பட்டுள்ள செப்பு வளையத்தில் மாமன்னர் ராஜேந்திரசோழனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேடுகளில் பெளத்த விகாரைக்கு ராஜராஜசோழன் அறக்கொடைகள் வழங்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நெதர்லாந்தின் லைடென் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தச் செப்பேடுகளை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது, நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சோழர் கால ஆனைமங்கலச் செப்பேடுகள் தி ஹேக் நகரில் மே 16-இல் நடைபெற்ற விழாவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

தமிழர்களின் மிகச்சிறந்த பொக்கிஷமாகப் போற்றப்படும் இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் குறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த பௌத்த ஆய்வாளரான முனைவர் பா. ஜம்புலிங்கம் கூறியது:

Advertisement

Advertisement

'தொடர் முயற்சிகளின் விளைவாக வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இந்தச் செப்பேடுகள் 'லைடென் செப்பேடுகள்' என அழைக்கப்பட்டது. இனிமேல் 'ஆனைமங்கலச் செப்பேடுகள்' என்று அழைக்கப்படும்.

சோழநாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினமான நாகப்பட்டினத்தில் அசோகர் எழுப்பிய 'பதரதிட்ட விகாரை' என்கிற பெளத்த விகாரை இருந்ததாகவும், அங்கு ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசாரிய தர்மபாலர் தங்கி, நெட்டிபகரணட்டகதா என்ற உரை நூலை பாலி மொழியில் எழுதியதாகவும், அங்கு மகாகாசபதேரர் தங்கியிருந்தார் எனவும் மயிலை சீனி வேங்கடசாமி தன்னுடைய 'பெளத்தமும் தமிழும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

720-இல், பல்லவ மன்னன் ராஜசிம்மன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம போத்தவர்மன் காலத்தில் சீனாவிலிருந்து நாகப்பட்டினத்துக்கு வருகிற பெளத்த சமய வணிகக் குழுக்களின் வழிபாட்டுக்காக புத்த விகாரம் கட்டப்பட்டது. பின்னர், இது 'சீனா கோயில்' என்றழைக்கப்பட்டது. வெனிஸ் நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்ற மார்க்கோபோலோ நாகப்பட்டினத்தில் சீனா கோயில் என்ற ஒரு கோயில் இருந்ததாகக் கூறுகிறார். இவ்வாறாகப் பரவத் தொடங்கிய பெளத்தமானது சோழ மன்னர்கள் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.

11-ஆம் நூற்றாண்டில் 'கடாரம்' என்றழைக்கப்பட்ட நாட்டில் ஸ்ரீவிஜய நாட்டு மன்னரான சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீமார விஜயோத்துங்கவர்மன், சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (985 -1014) அனுமதியுடன் நாகப்பட்டினத்தில் பெளத்த விகாரம் கட்டியதாக பெரிய ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது. ஸ்ரீமார விஜயோத்துங்கனின் தந்தையான சூளாமணிவர்மன் பெயரால் கட்டப்பட்டதால், அதற்கு 'சூளாமணி விகாரம்' எனவும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.

அதன் பராமரிப்புக்காக முதலாம் ராஜராஜன் தனது 21- ஆவது ஆட்சியாண்டில் (1006-ஆம் ஆண்டு) தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆனைமங்கலம் என்ற ஊரின் நில வருவாயைக் கொடையாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார். வாய்மொழியாக அளிக்கப்பட்ட இந்தக் கொடையானது அவரது மகன் முதலாம் ராஜேந்திரன் (1012 -1044) காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டதுடன், செப்பேட்டுப் பட்டயமாகப் பொறிக்கப்பட்டது. அதுவே 'பெரிய ஆனைமங்கலச் செப்பேடு' என அழைக்கப்படுகிறது.

முதலாம் குலோத்துங்க சோழன் (1070 -1120) மேலும் சில ஊர்களைத் தந்ததாக சிறிய ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது. அப்போது இந்த விகாரம் 'ராஜராஜப்பெரும்பள்ளி' என அழைக்கப்பட்டது. இச்செப்பேட்டில் ராஜேந்திரசோழப் பெரும்பள்ளி என்ற மற்றொரு பெளத்த விகாரமும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

21 ஏடுகளைக் கொண்ட முதல் தொகுதி ராஜேந்திரச் சோழனாலும், 3 ஏடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதி குலோத்துங்கச் சோழனாலும் வழங்கப்பட்டது. 14 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்ட 21 செப்பேடுகளைக் கொண்ட தொகுதியானது வெண்கல வளையத்தால் கோர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறே மற்றொரு தொகுதியும் கோர்க்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்திய கல்வி, பண்பாடு, அரசியல், கட்டடக்கலை, பொருளாதாரம், ஆட்சியமைப்பு உள்ளிட்ட செய்திகளை இந்தச் செப்பேடுகள் கொண்டுள்ளன. முன் பகுதியில் சோழர் கால முத்திரை காணப்படுகிறது. இந்தச் செப்பேடுகள் தமிழக, சோழர், பெளத்த வரலாற்றுக்கு முக்கியமான பங்களிப்பாகத் திகழ்கின்றன.

நாகப்பட்டினத்தில் இருந்த விகாரைகள் 1867-இல் இடிக்கப்பட்டு சுவடின்றி மறைந்துவிட்டது. சற்றொப்ப அதே காலகட்டம் தொடங்கி விகாரை இருந்த இடத்திலும், அருகில் பிற பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட 350 நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகள் இந்திய, வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெளத்த சமய எச்சம் என்ற அளவில் நாகப்பட்டினம் நகரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் சந்தைத் தோப்பைச் சேர்ந்த புத்தர் சிலை மட்டுமே உள்ளது.

ஆனால், நாகப்பட்டினத்தில் புத்த விகாரையின் எச்சங்களோ, நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகளோ அந்நகரில் இல்லை. இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் புத்த விகாரை இருந்ததற்கு சாட்சியாக இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் மட்டுமே உள்ளன.

மேலும், மாமன்னர் ராஜராஜசோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் பிற மதங்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கும், சமய நல்லிணக்கத்துடன் இருந்ததற்கும், பிற சமயங்களைப் போல பெளத்த மதத்துக்கு ஆதரவு அளித்ததற்கும் ஆதாரமாக இந்தச் செப்பேடுகள் இருக்கின்றன. ஆகவே, ஆனைமங்கலச் செப்பேடுகளை நாகப்பட்டினத்தில் பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிக்கு தக்க பாதுகாப்புடன் வைக்கலாம். மீட்கப்பட்டதை உரிய முறையில் பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே தற்போதைய தேவை.

இனி வருங்காலங்களில் ஆய்வாளர்களும், வரலாற்று அறிஞர்களும் ஆனைமங்கலச் செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது 'லைடென் பல்கலைக்கழகத்திலுள்ள' என்பதற்கு மாறாக 'தமிழ்நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள' என்ற பெருமையுடன் குறிப்பிடுவர்' என்கிறார் ஜம்புலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.