FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆறாம் தலைமுறையாக ராமாயணச் சுவடி வாசிப்பு!

செட்டிநாடு நகரத்தார்களின் சேவை மனப்பான்மை சைவ, தமிழ்த் தொண்டுகளில் அதிகம்.

18 அக்டோபர் 2026, 3:45 pm IST
பகிர்:

மதுரை ஆர்.கணேசன்

செட்டிநாடு நகரத்தார்களின் சேவை மனப்பான்மை சைவ, தமிழ்த் தொண்டுகளில் அதிகம். சிவ மரபைச் சேர்ந்த நகரத்தார்கள் வைணவத்தைப் போற்றுவதன் அடையாளமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீராமனின் நாமத்தை உச்சரிப்பது மட்டுமில்லாது, வரலாற்றை வாசிக்கின்றனர். 'ராமக் காவியமான ராமாயணத்தை வாசிப்பதால் வீட்டில் மங்களங்கள் உண்டாகும், உடல், மனம் சுற்றுப்புறச்சூழல் சுத்தமாகி புனிதம் பெருகும்' என்பது அவர்களின் கூற்றாகும்.

செட்டிநாட்டின் 76 ஊர்களில் வாழும் இந்த மக்களில் சுமார் பத்து சதவீதம் வீடுகளில் ராமாயண ஏடுகளை வாசிக்கின்றனர்.

Advertisement

Advertisement

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட நெற்குப்பை இரணிகோயில் ந.பழ.குடும்பத்தினர் 175 ஆண்டாக, ஆறாம் தலைமுறையாக ராமாயண ஏடு வாசித்து வருகின்றனர். இதுகுறித்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் மா.இராமரத்தினம் கூறியது:

'எங்களது முன்னோர்கள் தனிப்பட்ட பலனை எதிர்பார்த்து எதையும் செய்ய மாட்டார்கள். ஸ்ரீராமனின் வரலாறு பொது நன்மைக்காக வாசிக்கப்படுகிறது. நகரத்தார் குடும்பங்களில் வாரிசு வழிவழியாக குடும்பத்துக்காகவும், சமூக நன்மைக்காகவும் ராமாயணத்தைப் படிக்கின்றனர்.

எங்களது குடும்ப முன்னோர் ந.பழ.நல்லகருப்பன், அடுத்து ந.பழ. முத்து பழனியப்பன் சகோதரர்கள் கொழும்பு நகரில் வணிகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது நல்ல கருப்பன் செட்டியாருக்கு வைசூரி அம்மை பாதிப்பால் பார்வை குறைபா டு ஏற்பட்டது. இந்தக் குறை நீங்க வேண்டி ராமாயண ஏடு எழுதி படிப்பதாக வேண்டினர். அதன்படி படித்ததால், பார்வைக் குறைபாடு சரியாகியது. இதனால் எங்கள் முன்னோர்கள் 1850-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைவெளியின்றி ராமாயண ஏடு வாசித்து வந்தனர். அதனைப் பின்பற்றி நாங்களும் வாசிக்கின்றோம்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று ஏடு எடுத்து வாசிக்க ஆரம்பிப்போம். முதல் நாள் ஸ்ரீராமர் பிறப்பு, இரண்டாம் நாள் சீதா கல்யாணம் என்று அதில் உள்ள ஒவ்வொரு கதைக்களம் தொடங்கி இரண்டாவது சனிக்கிழமையன்று ராமர் பட்டாபிஷேக வைபவத்தை நடத்தி பூர்த்தி செய்வோம்.

இந்த நாள்களில் சைவ உணவு மட்டுமே உண்போம். துக்க காரியங்களுக்குச் செல்ல மாட்டோம். ஒரு வேளை எதிர்பாராத விதமாக வீட்டில் தீட்டு நடந்து விட்டால், ஏடு வாசிப்பது அடுத்த ஐப்பசி மாதம் வரை கூட செல்லும். இப்படி வாசிக்கின்ற நாள்களில் அன்னதானம் வழங்கப்படும். குறிப்பாக 'ஸ்ரீபரத்வாஜர் விருந்து' நடைபெறும்.

அந்தக் காலத்திலேயே எங்களது தகப்பனார் மு.மாணிக்கம் செட்டியார் பனை ஓலையில் உள்ள தமிழ் எழுத்துகளை எளிதாகப் படிக்கும் வகையில் கைப்பிரதியாக மாற்றியமைத்ததை இன்றைக்கும் நாங்கள் வாசித்து வருகின்றோம்'' என்கிறார் ராமரத்தினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments