செம்பொருள் கண்ட சித்தாந்தச் சுடர்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சைவ சித்தாந்தப் பேரறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் சைவ சித்தாந்த ஞானபானு கா. வஜ்ஜிரவேல் முதலியார்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சைவ சித்தாந்தப் பேரறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் சைவ சித்தாந்த ஞானபானு கா. வஜ்ஜிரவேல் முதலியார். காஞ்சிபுரத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் ஆ. கச்சபாலைய முதலியார் - க.அம்மாக் கண்ணு அம்மாள் இணையருக்கு 24.04.1906 அன்று வஜ்ஜிரவேல் முதலியார் பிறந்தார்.
பள்ளிப் படிப்பைக் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் முடித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1929-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்றார்.
பின்னர், சைதாப்பேட்டையில் 1932-இல் எல்.டி. பட்டம் பெற்றார்.
Advertisement
Advertisement
தான் பயின்ற காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி ஏற்றார். ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பின்னர் அந்தப் பள்ளியிலேயே தலைமை ஆசிரியராகவும் செவ்வனே பணியாற்றி, நல்லாசிரியர் விருதையும் பெற்றார்.
திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகளிடம் சிவஞான போதச் சிற்றுரையைக் கேட்கத் தொடங்கி, சொந்த முயற்சியாலும் பெரியவர்கள் கூட்டுறவாலும் சைவ சாத்திரங்களிலும் இலக்கியங்களிலும் செம்மாந்த புலமை அடைந்தவர் சைவ சித்தாந்த ஞானபானு கா. வஜ்ஜிரவேல் முதலியார்.
இவர் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்களால் நடத்தப்பெற்ற மெய்கண்டார் கல்லூரியில் முதல்வராகப் பணி செய்த சிறப்புடையவர்; மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் தத்துவத் துறையில் தனி அலுவலராகப் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.
சைவ சித்தாந்தத்தில் இவரிடத்தில் இருந்த நுண்மான் நுழை
புலத்தால், காசி பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும், அலாகாபாத் பல்கலைக்கழகத்திலும் சிவஞான சித்தியார் குறித்த சொற்பொழிவாற்றியுள்ளார்.
திருக்குறளின் உட்கிடை சைவ சித்தாந்தமே' எனும் அற்புதமான நூலைத் தந்தவர். சைவம், திருவருட்பயன் உரை, சைவமும் வைணவமும், சைவசித்தாந்தத் திறவு போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். சிவஞான மாபாடியம்' என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
சித்தாந்த உலகின் செழும் சுடரான பேராசிரியர் க. வஜ்ஜிரவேல் முதலியாரின் அரிய கட்டுரைகள் அனைத்தையும் அவர் ஆற்றிய சைவ சித்தாந்த உரைகளையும் கட்டுரைகளாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்று 36 ஆண்டுகளுக்கு முன்பே எந்தையார் ஒளவை நடராசன் தமிழவேள் சிவாலயம் ஜெ. மோகனிடம் சொன்னதன் விளைவாகச் செம்பொருள் காண்பது அறிவு' என்கிற அரும்பெரும் நூலாக அண்மையில் சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 34-ஆவது ஆண்டு தெய்வச்
சேக்கிழார் விழாவில் தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது குரு மகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளால் வெளியிடப்பட்டது.
திருக்குறள் தொடர்பாக மட்டுமே 19 கட்டுரைகளையும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கருத்துகள் முதல் பல்வேறு நுண் தலைப்புகளில் 15 கட்டுரைகளையும் கரும்புக்காட்டில் அகப்பட்டது போல் கணுவெல்லாம் இனிக்கும் இக்களஞ்சியத்தில் காணமுடியும்.
வஜ்ஜிரவேலனார் ஆங்கிலம், கணக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியில் அருணை வடிவேலனார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். ஞானபானு திருவாவடுதுறைப் புலவராகவும் வடிவேலனார் தருமையாதீனப் புலவராகவும் விளங்கினர்.
தருமையாதீனத்தின் மூலமாக 12 திருமுறைகளும் உரையாக வந்துள்ளன. மரபு வழியிலே சைவத்தைச் சொல்லி உரை கண்டிருப்பதுதான் அதன் சிறப்பு. முதல் திருமுறையின் உரை சா. தண்டபாணி தேசிகருடையது.
இரண்டு மற்றும் நான்காம் திருமுறைகளின் உரை முத்து சு. மாணிக்கவாசகனுடைய உரை. மூன்றாம் திருமுறையின் உரை பண்டித கந்தசாமி பிள்ளையினுடையது. ஐந்தாம் திருமுறைக்குப் புலவர்கள் சோ. சிங்காரவேலனார், குருசாமி தேசிகர் இருவரின் உரையை வஜ்ஜிரவேலனாரும் வடிவேலனாரும் மேற்பார்வை பார்த்தனர்.
ஆறிலிருந்து பதினோராம் திருமுறை வரை வடிவேலனாரின் உரை. பன்னிரெண்டாம் திருமுறை கு. சுந்தரமூர்த்தியின் உரை. ஞானபானுவின் உரையைப் பார்க்கும்போதுதான் அதன் தாக்கம் வடிவேலனாரின் திருவாசக உரையிலும் உள்ளது எனத் தெரிகிறது.
தில்லையிலே அப்பர் பாடிய அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்' என்னும் பதிகத்தில் அன்னம் என்பது சோற்றைக் குறிக்காது, வீடுபேற்றையே குறிக்கும் என்கிறார் வஜ்ஜிரவேலனார்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடும் திருக்கோயில்' திங்களிதழில் வஜ்ஜிரவேலனார் சைவ சமயம், தத்துவம் மற்றும் ஆன்மிகம் குறித்துப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற சாத்திர நூல்களின் தத்துவக் கருத்துகளை எளிய தமிழில் விளக்கித் தொடர் கட்டுரைகளாகவும் தனி ஆய்வுகளாகவும், சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான பதி, பசு, பாசம் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் இயல்புகளைப் பற்றிய ஆழமான கட்டுரைகளையும் தீட்டியுள்ளார்.
தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் ஆகிய திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ நெறிகள் மற்றும் வழிபாட்டுத் தத்துவங்கள் குறித்த செழுஞ்சொற் பனுவல்களும், திருக்கோயில்களின் அமைப்பு, ஆகம விதிகள், வழிபாட்டின் உட்பொருள்கள் மற்றும் சைவ சமயச் சடங்குகளின் ஆன்மிக நோக்கம் பற்றிய விளக்கங்கள், சமயம் சார்ந்த வாழ்வியல் வழிகாட்டுதல்கள் மற்றும் அறக்கோட்பாடுகள், சைவ சித்தாந்தத் தத்துவங்களைச் சாத்திரச் சட்டகங்களுக்குள் மட்டுமே முடக்கி வைக்காமல், அனைவரும் உணரும் வகையில் எளிய தமிழில் வஜ்ஜிரவேலனார் விளக்கிப் பரப்பியுள்ளார்.
திருக்குறளின் மெய்யியலையும் சைவ சமயக் கோட்பாடுகளையும் இணைத்த அவரின் சிந்தனை முத்துகள் தமிழ்த் தத்துவ வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பவை. தனது 83 ஆண்டுகால வாழ்வில் அவர் விதைத்துச் சென்ற
ஆன்மிக, மெய்யியல் விதைகள் எதிர்காலத் தலைமுறைக்கும் சைவ நெறியின் ஆழத்தைப் புகட்டும் காலப் பேழையாக மின்னி மிளிரும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.