FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இறுதிக்காலத்தைக் கணித்தவர்!

'நாளை நான் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. நாம் அனைவரும் ஒருநாள் செல்லவேண்டியவர்கள்தான்.

18 அக்டோபர் 2026, 4:59 pm IST
பகிர்:

'நாளை நான் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. நாம் அனைவரும் ஒருநாள் செல்லவேண்டியவர்கள்தான். அந்த நேரம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வரும். ஆனால், அந்த நேரம் வருவதற்கு முன் நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் செய்ய விரும்பும் விஷயத்தைச் செய்ய முடிகிறதா? அதற்கான முயற்சியை நாம் எடுத்திருக்கிறோமா? என்று கேட்டுக் கொள்ளுங்கள்'' என்று கோவாவில் அக்டோபர் 4}இல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் நானா படேகர் கூறியிருந்தார். அடுத்த சில நாள்களிலேயே, அக்டோபர் 8}இல் அவர் மீளா ஓய்வு எடுத்துக் கொண்டார்.

ஹிந்தி, மராத்தி திரையுலகில் ஐந்து தசாப்தங்களாக நீடித்தது நானா படேகரின் கலைப்பயணம். இயல்பான நடிப்புக்கு குறியீடாக இருந்தவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தார்.

Advertisement

Advertisement

எழுபத்து ஐந்து வயதான நானா படேகர், முருட்}ஜஞ்சிராவைச் சேர்ந்த மராத்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வறுமை, குடும்பப் பொறுப்பை அவர் பதின்மூன்று வயதிலேயே சுமக்க நேரிட்டது. வறுமையிலும் கலை மீதான ஆர்வத்தால் மும்பையில் உள்ள 'ஜே.ஜே. ஸ்கூல் ஆஃப் அப்ளைடு ஆர்ட்' கல்லூரியில் சேர்ந்தார்.

பள்ளி, கல்லூரி நாள்களில் சக மாணவ மாணவியரின் வீட்டுப் பாடங்களை எழுதித் தருவார். அவர்கள் வாங்கித் தரும் தின்பண்டங்கள், தேநீர்தான் பகல் உணவு. 'சப்பாத்தி சுடும் மணத்தை நுகர்ந்தாலே எனது பசி அடங்கிவிடும்' என்று சொல்லும் அளவுக்கு வறுமை நானாவின் வாழ்க்கையில் இருந்தது.

சுவரொட்டிகள் ஓட்டியவர்!

வளர்ந்ததும், வருமானத்தை ஈட்டுவதற்காக சுவர்களில் விளம்பரப் படங்கள், திரைப்படச் சுவரொட்டிகள் வரைவது, சாலைகளில் 'ஜீப்ரா கிராசிங்' கோடுகளைப் போடுவது என்று நாள் ஒன்றுக்கு முப்பது ரூபாய் வரை சம்பாதித்தார்.

மும்பை காவல்துறையில் 'ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட்' (குற்றவாளிகளின் உருவப்படங்களை வரைபவர்) பணியிலும் நானா இருந்தார். நாடகம், திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் விளம்பரத் துறையில் பணியாற்றினார். நாடகங்களில் நடிக்க அந்த வேலையையும் விட்டுவிட்டார்.

திரைப்பட விளம்பரப் படங்கள் வரைந்து திரிந்த நானாவின் படங்கள் பிற்காலத்தில் சுவரொட்டிகளாக மும்பை நகர் முழுவதும் ஒட்டப்பட, அவற்றை ரசிக்க நானா பாந்த்ராவிலிருந்து தாதர் வரை நடந்து வந்த நாள்களும் உண்டு.

நானா நடித்த 'புருஷ்' என்ற ஹிந்தி நாடகம் 16 ஆண்டுகள் அரங்கேறியது. நானா முசாஃபர் அலியின் 'கமன்' (1978) திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஜப்பார் பட்டேலின் 'சிம்ஹாசன்' (மராத்தி, 1979) வெற்றி பெற்றது. 'சலாம் பாம்பே', 'அங்குஷ்' , 'பரிந்தா' ஆகிய படங்களில் தனது அற்புதமான நடிப்பால் நானாவின் திரை வாழ்க்கை சிறகடித்துப் பறந்தது.

'கிராந்திவீர்', 'பிரஹார்' (நானா இயக்கியது), 'யஷ்வந்த்', 'குலாம்}இ}முஸ்தஃபா', 'திரங்கா' போன்ற படங்களின் மூலம் விருதுகளும் பாராட்டுகளும் நானாவுக்குக் குவிந்தன. வழக்கமான வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களிலிருந்து விலகி, 'ராஜு பன் கயா ஜென்டில்மேன்' அல்லது 'தோடசா ரூமானி ஹோ ஜாயே' போன்ற நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 'ஜெய் ஜவான் ஜெய் கிசான்' என்ற முழக்கத்தை தன் வாழ்வில் கடைப்பிடித்தார். நானா 1988}இல் ராணுவத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்றார். கார்கில் போரின்போது 'மராத்தா லைட் இன்ஃபன்ட்ரி'யில் பணியாற்றினார். 'ராஜ்நீதி', 'நட்சம்ராட்' மற்றும் ரஜினிகாந்துடன் 'காலா', 'வனவாசம்' போன்றவை நானாவின் சமீபத்தைய படங்கள்.

பிரபல இயக்குநர் சத்யஜித் ரேயும் நானாவின் தீவிரமான, யதார்த்தமான நடிப்பு பாணியால் ஈர்க்கப்பட்டு, நானாவை வைத்து படத்தை இயக்க விரும்பினார். ஆனால் கைகூடவில்லை.

உடலை எரிக்க விறகுகளை வாங்கி வைத்தவர்தான் இறந்தால் எரிக்கத் தேவையான விறகுகளை முன்னரே வாங்கி வைத்திருந்தார். 'உடலை எரிக்க காய்ந்த விறகுகள்தான் அவசியம். பச்சை விறகுகளைப் பயன்படுத்தினால் கிளம்பும் புகை, சிதை எரியூட்டும் சடங்குக்கு வந்தவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

அது அவர்களை சிரமப்படுத்தும். என்னை நினைத்து அழுகிறார்கள் என்று தவறாகவும் புரிந்துகொள்ள நேரிடலாம். அதனால் காய்ந்த விறகுகளை வாங்கி வைத்துவிட்டேன். அதுதான் என் சொத்து. அந்த விறகுகளுடன் நான் சென்றுவிடுவேன்' என்று நானா யதார்த்தமாகச் சொன்னார்.

வீடு, வீடாகச் சென்று நிதியுதவி அளித்தவர்

'நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்காவிட்டால், சமூக விரோதக் கும்பலில் சேர்ந்திருப்பேன்'' என்று சொன்ன நானா, இளவயதில் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுவந்தவர். அவர் குடியிருந்த பகுதியில், 'குட்டி தாதா'வாக வலம் வந்த நானாவை பிற்காலத்தில் சமூக ஆர்வலராக மாற்றியது காலம்தான்!

ரூ.1.5 கோடி மதிப்பிலான ஆடம்பர கார் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அந்தத் தொகையை மகாராஷ்டிராவில் உள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவினார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் அறக்கட்டளை'யைத் தொடங்கி, ரூ.22 கோடியைத் திரட்டினார். அந்த நிதியை மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஏராளமான மரங்களையும் நட்டு, அந்தப் பகுதி மக்கள் மனங்களில் தன்னையும் நானா விதைத்துச் சென்றுள்ளார்.

நானா வீட்டிலும் சரி, படப்பிடிப்புத் தளங்களிலும் சரி, சுவையாக சமைப்பதை கலையாகச் செய்து வந்தார்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தபோதிலும், நானா மும்பை லோனாவாலா அருகே 14 ஏக்கர் பண்ணை வீட்டில் இயற்கைச் சூழலில் வாழ்ந்து வந்தார். பசுக்களையும் வளர்த்து வந்தார். நெல், கோதுமைகளைப் பயிரிட்டு வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments