FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாரம்பரிய இலக்கிய மரபில் புதிய வடிவம்...

எனது இருபது வயது வரை நான் வரைந்துகொண்டிருந்ததால் அதிகம் எழுதவில்லை.

24 அக்டோபர் 2026, 8:23 pm
பகிர்:

'எனது இருபது வயது வரை நான் வரைந்துகொண்டிருந்ததால் அதிகம் எழுதவில்லை. என்னை ஒரு எழுத்தாளராக ஒருபோதும் கருதியதில்லை. பல புகழ்பெற்ற நூல்களை எழுதிய பிறகும், இன்னும்கூட நான் என்னை எழுத்தாளராகக் கருதுகிறேனா? என்று தெரியவில்லை. எனக்கு ஏதோ ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது.

'புத்தகம்' என்பது படைப்புகளை உருவாக்குவதற்கு வசதியான ஒரு வடிவம். ஆனால், அது தரும் திருப்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், ஒரு கருத்தை முழுமையாக வெளிப்படுத்த இந்த வடிவம் போதுமானது என்று எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை' என்று நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் என்கிற கர்வமின்றி தன்னடக்கத்துடன் கருத்தைப் பதிவு செய்கிறார் ஆன் கார்சன்.

2026-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கும் கனடாவைச் சேர்ந்த இவர் கவிஞர், கட்டுரையாளர், செவ்வியல் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பல்வேறு தளங்களில் பரிணமிக்கிறார். பாரம்பரிய மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடலில் ஈடுபட்டு, சமகால இலக்கியத்துக்குப் புதிய வடிவங்களை உருவாக்கிய அவரது துணிச்சலான, புத்தாக்கமிக்கப் படைப்புகளுக்காக இந்தப் பரிசு முன்மொழியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கனடாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் இலக்கியத்துக்காகப் பெறும் மூன்றாவது நோபல் பரிசாகும். இதற்கு முன்னதாக 1976-ஆம் ஆண்டு சால் பெல்லோவுக்கு 'படைப்புகளில் வெளிப்படும் மனித புரிதல், சமகால கலாசாரம் குறித்த நுணுக்கமான பகுப்பாய்வுக்காகவும், 2013-ஆம் ஆண்டு சமகாலச் சிறுகதைகளின் மேதையான ஆலிஸ் மன்ரோவுக்கும் வழங்கப்பட்டன.

'சமகால கவிதைகளைப் பின்தொடரும் மக்களின் சிறிய உலகில், கார்சன் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பொறாமையையும் போற்றுதலையும் ஒருங்கே தூண்டி வருகிறார்' என்று நியூயார்க் டைம்ஸ் புத்தக விமர்சனத்தில் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் டாப்னி மெர்கின் எழுதினார். கார்சன் தனது நீண்ட பதிப்புப் பயணத்தில் விமர்சனப் பாராட்டுகளையும் பரந்த வாசகர் வட்டத்தையும் பெற்றுள்ளார்.

பலவகை இலக்கியப் பாணிகளைக் கடந்து செல்லும் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, லிப்ரெட்டோக்கள், உரைநடை விமர்சனங்கள், செய்யுள், நாவல்களையும் வெளியிட்டுள்ளார். சிறந்த பகடியுடன் எழுதும் திறன் பெற்றவர். இவரது கவிதைகள் மனதை நொறுக்குவதாக உள்ளன. காதல், ஆசை, பாலியல் ஏக்கம், விரக்தி குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார்.

வாழ்க்கைப் பயணம்

கார்சன் 1950-ஆம் ஆண்டில் ஒன்டாரியோவின் டொராண்டோவில் பிறந்தார். போர்ட் ஹோப்பில் இருந்த உயர்நிலைப் பள்ளியில், மதிய உணவு நேரத்தில் அவருக்குப் பண்டைய கிரேக்க மொழியைக் கற்பிக்க ஒப்புக் கொண்ட ஆலிஸ் கோவன் என்கிற லத்தீன் ஆசிரியருடனான சந்திப்பு, அவரைச் செவ்வியல், ஹெலனிக் இலக்கியத்தின் மீது பேரார்வத்துடன் ஈர்க்க வழிவகுத்தது. அந்தத் தாக்கங்கள் இன்றும் அவரது படைப்புகளில் காணப்படுகின்றன. தனது அனைத்துப் படைப்புகளுக்கும் சொற்பிறப்பியல்தான் தொடக்கப் புள்ளி என்று அவரே அடையாளம் காட்டியுள்ளார்.

பள்ளிப்படிப்பின்போது ஜான் மில்டன் பற்றிய கட்டாயப் பாடத்தால் அதிருப்தி அடைந்ததால், இருமுறை பள்ளிப்படிப்பைக் கைவிட்டார் என்கின்றனர். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் செவ்வியல் துறையில் தனது இளங்கலை (1974), முதுகலை (1975), முனைவர் (1981) பட்டங்களைப் பெற்றார். இவர் மெக்கில், மிச்சிகன் பல்கலைக்கழகம் உட்பட, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் கற்பித்துள்ளார்.

குக்கன்ஹெய்ம் அறக்கட்டளை, மெக்கார்த்தர் அறக்கட்டளை, மற்றும் பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமி ஆகியவற்றின் ஆய்வுதவிகள் உட்பட, அவர் பல கெளரவங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், அவர் லன்னன் இலக்கிய விருது, புஷ்கார்ட் பரிசு, கிரிஃபின் கவிதைப் பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

ஈரோஸ் தி பிட்டர்ஸ்வீட் (1986), தி கிளாஸ் எஸ்ùஸ (1995), ஆட்டோபயோகிராஃபி ஆஃப் ரெட் (1998), தி பியூட்டி ஆஃப் தி ஹஸ்பண்ட்: எஃபிக்ஷனல் எஸ்úஸ இன் 29 டாங்கோஸ் (2001), நாக்ஸ் (2010) ஆகியவை ஆன் கார்சனின் முக்கியப் படைப்புகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments