FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலகம் பலவிதம்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குவியாகில் நகரில் அமைந்துள்ளது லேடி ஆஃப் பெர்பெச்சுவல் ஹெல்ப் தேவாலயம்.

24 அக்டோபர் 2026, 9:35 pm
பகிர்:

சிலுவை கழன்று விபரீதம்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குவியாகில் நகரில் அமைந்துள்ளது லேடி ஆஃப் பெர்பெச்சுவல் ஹெல்ப் தேவாலயம். இங்கு பாதிரியாராகப் பணிபுரிந்தவர் பாட்ரிசியோ ஆல்ஃபிரெடோ சான்செஸ் மோலினாரி (53). கடந்த வாரம் அவர் தேவாலயத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது தேவாலயச் சுவரில் மாட்டப்பட்டிருந்த சிலுவை திடீரெனக் கழன்று பாதிரியாரின் தலையின் பின்புறத்தில் விழுந்தது. பலத்த அலறலுடன் நிலைகுலைந்து கீழே சரிந்த பாதிரியார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். நேரடி ஒளிபரப்பில் இருந்த நிகழ்ச்சியில் இந்தச் சோக சம்பவமும் பதிவாகிவிட்டது.

Advertisement

Advertisement

திருமண ஆசையில் மண்

பிரேசிலைச் சேர்ந்தவர் எடிமார் மார்ட்டின்ஸ் (49) திருமணமாகாதவர். சமூக வலைதளத்தில் ஆறு ஆண்டுகளாக தோழியாக இருக்கும் ஜெஸிகா ஒலிவேரியைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். தன்னைத் தேடி வரும் ஆண்களுக்கு நிதியுதவியும் அளிப்பதாக ஜெஸிகா வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

சொத்துகளை விற்று எடுத்துக் கொண்டு 1900 கி.மீ. பயணம் செய்து, காதலி இருப்பிடத்தை அடைந்தார் மார்ட்டின்ஸ். அங்குச் சென்ற பிறகுதான் காதலி உண்மையான பெண் இல்லை; ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம் என்ற உண்மை தெரியவந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோன அவரை சமூக சேவர்கள் ஒருவழியாகத் தேற்றி சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

50,000 ஊக்குகளால் துர்கை

அஸாமில் துப்ரி மாவட்டம், பஞ்ச்மோரி பகுதியில் உள்ள ராஷ்மி சங்கா துர்கா பூஜை பந்தலில் 7 அடி உயர துர்கை சிலை 50,000 ஊக்குகளால் (சேஃப்டி பின்) வடிவமைக்கப்பட்டிருந்தது.

வியக்க வைக்கும் கலையம்சம் கொண்ட இச்சிலையைச் செய்தவர் அரசு ஊழியர் சஞ்ஜிப் பசக். அசாம் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரிகிறார். துர்கையை முழுமையாக வடிவமைக்க அவருக்கு நூறு நாள்கள் ஆனதாம்.

முதியோர் நகரம்!

சீனத் தலைநகரம் பெய்ஜிங்கில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 2023-இல் 23.8 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2035-ஆம் ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்கும் என்ற கணிப்பு அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்துவரும் பிறப்பு விகிதம் அதிகரித்து வரும் முதியோர் சராசரி ஆயுட்காலம் இந்த மாற்றத்துக்குக் காரணம். சமூகத்தில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பதால் ஓய்வூதியத் திட்டங்கள், முதியோர் பராமரிப்பு வசதிகள், தொழிலாளர் சந்தையில் கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அசட்டு ரோபோ

தொழில்நுட்ப நிகழ்ச்சியொன்றில் மனித உருவம் கொண்ட ரோபோ வெள்ளரிக்காயை வெட்ட தட்டுத்தடுமாறிய விடியோ காட்சி சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது. கத்தியைப் பிடிப்பது, கைகளை நகர்த்துவது மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைப்பதில் அந்த ரோபோ முற்றிலும் சொதப்பிவிட்டது.

'ரோபோ பதற்றத்தில் இருக்கிறது', '85 வயது ரோபோ' என்று பார்வையாளர்கள் கிண்டலாகப் பதிவு செய்துள்ளனர். உலகில் ரோபோக்களின் திறன் இன்று அதிக கவனம் பெற்று வரும் நிலையில் நகைப்புக்கு இடமாக இப்படியும் ஓர் அசட்டு ரோபோ.

மீட்கப்பட்ட ஒராங்குட்டன்

கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் காடுகளின் மனிதன் என்று அழைக்கப்படும் மூன்று வயது ஒராங்குட்டான் (நீண்ட சிவப்பு முடி, நீண்ட கை கால்களைக் கொண்ட வாலில்லாத அரிய வகை மனிதக் குரங்கு) மீட்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், டோம்பிவிலியில் உள்ள ஒரு வீட்டின் குளியலறையில் சிறிய கூண்டில் இந்த விலங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மீட்கப்பட்ட ஒராங்குட்டன் நாகபுரி பூங்காவில் பராமரிக்கப்பட்டு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா நகருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிறிது காலம் தனிமைப்படுத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments