FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

18 ஆண்டுகள்... 40 ஆயிரம் பாம்புகள்!

'பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், சரியான புரிதல் இல்லாததால் பாம்புகள் குறித்த பயம் அதிகமாகிவிட்டது.

5 செப்டம்பர் 2026, 9:42 pm IST
பகிர்:

'பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், சரியான புரிதல் இல்லாததால் பாம்புகள் குறித்த பயம் அதிகமாகிவிட்டது' என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளரும், அருங்கானுயிர் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) நிறுவனருமான முனைவர் ஆர்.சதீஷ்குமார்.

இவர் தனது குழுவினருடன் இணைந்து தஞ்சாவூர், அதன் சுற்றுப்பகுதிகளில் 18 ஆண்டுகளில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார்.

இதுகுறித்து சதீஷ்குமாரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'உலக அளவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்பு வகைகள் உள்ளன. நம் நாட்டில் 328 வகையான பாம்புகள் இருக்கின்றன. இவற்றில் வெறும் 61 வகை பாம்புகள்தான் நஞ்சுள்ளவை. இதிலும் 40 வகை பாம்புகள் ஆழ்கடல் பகுதியில் வசிக்கக்கூடியவை.

நிலப்பகுதியில் வசிப்பவை 21 வகை பாம்புகள்தான். இவற்றிலும் 4 வகை பாம்புகள்தான் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவையாகும். இதை மருத்துவ உலகில் 'பெரிய நான்கு' (பிக் 4) எனக் கூறுவர். இந்த 4 வகை பாம்புகளுக்கும் நஞ்சு முறிவு மருந்து ஒன்றுதான். இவை நான்கும் மனிதர்கள் வசிக்கக்கூடிய இடத்தில்தான் வசிக்கின்றன.

4 வகை பாம்புகளால்தான் ஆபத்து

மனித உயிருக்கு ஆபத்தானது நாகப் பாம்பு என்கிற நல்ல பாம்பு. வட்டார வழக்குக்கேற்ப மஞ்சள் நாகம், கோதுமை நாகம், மனைப் பாம்பு, கருநாகம் எனக் கூறுவர். இது கடித்தால் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். கட்டு வரியன் என்கிற கட்டு விரியன் பாம்புக்கும் மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய நஞ்சு உள்ளது. குடியிருப்புகளில் எலிகள், தவளைகள் அதிகமாக இருந்தால், அவற்றைத் தேடிக் கொண்டு நல்ல பாம்பும், கட்டுவிரியன் பாம்பும் வந்துவிடும்.

ரத்த செல்களைப் பாதிக்கக்

கூடிய ஹேமோடாக்சின் என்கிற ரத்த நஞ்சுத் தன்மை பாயக்கூடியது கண்ணாடி விரியன். இதை கழுதை விரியன், வட்ட விரியன் எனவும் கூறுவர். இது, வயல்கள், கரும்புத் தோட்டம், சோளக் கொல்லை போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். நான்காவது விரியன் குடும்பத்தைச் சேர்ந்த சுருட்டை விரியன், சிறு பூச்சிகளை இரையாக உண்ணும்.

இவற்றில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது கண்ணாடி விரியன். இது, வயல்கள், தோப்புகள், தோட்டங்களில் இருப்பதால், விவசாயிகள், தொழிலாளர்கள் அதிக அளவில் கடிபடுவர். ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கடிபடுவதாகவும், குறைந்தது 60 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த வகை பாம்புகள் வயல்களில் எந்தவித அச்சுறுத்தலையும் கொடுக்காமல், உடனடியாக கடிக்க ஆரம்பித்துவிடும்.

இந்த நான்கு வகைகளும் இரவாடிகள் என்பதால், இரவு நேரத்தில்தான் அதிகமாக இரை தேடி வெளியே வந்து உலாவும். இரவில் தெரியாமல் மிதித்துவிட்டால், கடித்துவிடுகிறது. உணவைத் தேடியோ அல்லது உறைவிடம் தேடியோ பாம்புகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருகிறது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் பாம்புகள் வருவதைத் தவிர்க்கலாம். உணவுக் கழிவுகளைச் சாப்பிடுவதற்காக எலிகள் வரும். கால்வாய்கள் சுத்தமாக இல்லாவிட்டால், தவளைகள் வந்துவிடும். இவற்றை இரையாக உண்ண பாம்புகள் வருகின்றன. கற்களைக் குவித்து வைப்பது, பழைய பொருள்களை அப்புறப்படுத்தாமல் இருப்பது போன்றவையே பாம்புகள் வருவதற்குக் காரணமாக இருக்கின்றன.

கடிபட்டால் என்ன செய்வது?

நஞ்சுப் பாம்புகள் கடித்தவுடன் தவறான முதலுதவியால் நிறையப்பேர் உயிரிழக்கின்றனர். நேரடியாக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டும். அங்கு போடக்கூடிய நஞ்சு முறிவு மருந்து பாம்புடைய நஞ்சிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அதை தவறுதலாகச் செலுத்தினாலும் உயிரிழப்பு ஏற்படும்.

அரசு மருத்துவமனைக்குச் சென்றால் கடிபட்ட பாம்பு நஞ்சுள்ளதா அல்லது நஞ்சற்றதா என்பதைப் பரிசோதித்தே மருந்து போடப்படும். உடம்பில் ரத்தம் உறைதல் நேரம், நீர்த்துப் போதல் நேரம், பொட்டாசியம், சோடியம் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் மருந்து செலுத்துவர். எனவே, அரசு மருத்துவமனைக்குச் சென்றால் காப்பாற்றி விடலாம்.

நஞ்சுள்ள பாம்பா- அறிவது எப்படி?

சமூக ஊடகங்களில் அம்பு முனை வடிவில் தலை உள்ளதை நஞ்சுள்ளது என்றும், தலை வளைவாக உள்ளதை நஞ்சற்றவை எனவும் கூறப்படுவது தவறானது. நஞ்சற்ற பச்சை பாம்புக்கும் தலை அம்பு முனை வடிவில்தான் இருக்கிறது. அதனுடைய நஞ்சு மனிதனைப் பாதிக்காது. ஆனால், அது நஞ்சுள்ள பாம்பு என அடித்துக் கொன்றுவிடுவர். நல்ல பாம்பின் தலை வளைவாகத்தான் இருக்கும். இதேபோல, கடல் பாம்புகளின் தலையும் வளைவாகத்தான் இருக்கும். எனவே ஒவ்வொரு வகைப் பாம்புக்கும் வடிவங்கள் மாறும்.

சூரிய வெளிச்சத்தில் நடமாடக்கூடிய பாம்புகள் அனைத்தும் நஞ்சற்றவை. சாரைப் பாம்பு, தண்ணீர் பாம்பு, ஓலைப் பாம்பு போன்ற நஞ்சற்ற வகைப் பாம்புகள்தான் 80 சதவீதம் இருக்கின்றன. நஞ்சுள்ள பாம்புகள் வீடுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள பொருள்களைக் கலைக்கும்போது பகல் நேரத்திலும் வெளியே வரும். அதிக மழையின் காரணமாக தட்ப வெப்பநிலை மாறும்போதும் அவை வரும்.

முன் பற்கள் கொக்கி போன்று கூர்மையாக இருந்தால், அது நஞ்சுள்ள பாம்பு என்றும், ஜிப் போன்று பற்கள் இருந்தால் அது நஞ்சற்ற பாம்பும் எனக் கூறுவதும் தவறு. வீட்டு ஓடுகளில் இருக்கும் நஞ்சற்ற வெள்ளிக்கோல் வரையன் பாம்புக்கு முன்புற பற்கள் கூர்மையாக இருக்கும். சில பாம்புகளுக்குப் பின் பக்கத்தில் நஞ்சுப் பற்கள் இடம்பெற்றிருக்கும். எனவே, அதை வைத்துக் கூறுவது இயலாது' என்கிறார் சதீஷ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments