கல்வி என்னும் அழியாப் பேரழகு
நம் முன்னோர் அழியும் பொருள்கள், அழியாப் பொருள்கள் ஆகியவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்துத்துள்ளனர். அதன் விளைவாக நிலையாமை என்ற தத்துவத்தைக் கண்டறிந்தனர்.
முனைவர் த. காந்திமதி
நம் முன்னோர் அழியும் பொருள்கள், அழியாப் பொருள்கள் ஆகியவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்துத்துள்ளனர். அதன் விளைவாக நிலையாமை என்ற தத்துவத்தைக் கண்டறிந்தனர்.
இதை வலியுறுத்தி காஞ்சி என்ற திணையை தொல்காப்பியர் வகுத்துத் தந்தார். அவர் 'நில்லா உலகம் புல்லிய நெறித்தே' (புறத்திணை.76) என்றார். ஆகவேதான், ஆன்றோர்கள் இளமை, யாக்கை (உடல்), செல்வம் ஆகியவை நிலையா என்று அறநூல்கள்வழி ஓயாது எடுத்துரைத்தனர்.
Advertisement
Advertisement
ஆயின், புகழே நிலைக்கும் எனக் கண்டறிந்து புகழ் பெறுவதற்குரிய செயல்களையே முன்னோர் செய்தனர். இவ்வுலகத்தில் தோன்றிய எண்ணற்ற பொருள்கள் நிலையற்றவை. ஏன் இந்த உலகமே நிலையற்றதுதான். ஆகவே, நிலைத்த புகழை அடையும் பணிகளைச் செய்துவிட்டு மறைவதே சாலச்சிறந்தது. இதை,
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே (165: 1}2)
எனப் புறநானூறு புகல்கிறது.
பேராசான் வள்ளுவப் பெருந்தகை உயிருக்கு ஊதியங்கள் இரண்டு. ஒன்று ஈதல்; மற்றொன்று இசை (புகழ்) பட வாழ்தல் (231) என்கிறார்.
இந்த உண்மைகளை அறியாத மக்களுள்
பல்லோர் தமது புற அழகு குறித்தே போதெல்லாம் சிந்தித்துள்ளனர்.
முடியை அழகுபடுத்திக் கொள்ளுதல் வண்ணமய
மான ஆடைகளை அணிந்து கொள்ளுதல், மஞ்சளைப் பூசிக் கொள்ளுதல் முதலானவற்றால் ஒரு பயனும் இல்லை. இத்தகைய ஒப்பனைகள் புறத்தோற்றத்தைப் புதிதுசெய்யுமே தவிர அகத்தோற்றத்தை அழகு செய்யாது. உண்மையான அழகைத் தருவது கல்வியொன்றே என்று நாலடியார் எடுத்துரைத்துள்ளது. அதைப் பின்வரும் பாடலால் அறியலாம்.
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்சள் அழகும் அழகல்ல} நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. (நாலடி.131)
இருபாலரும் தத்தமக்கேற்றாற்போலச் சில உறுப்புகள் வனப்புடன் (அழகாக) இருக்க வேண்டுமெனக் கவலைப்படுகின்றனர். சிறுத்த இடை, பருத்த தோள்கள், ஒயிலான நடை, மயில்போலக் கழுத்து, அளவான நாணம், அளவற்ற தோல் வனப்பு ஆகியவை அமைய வேண்டுமென நினைக்கின்றனர். ஆனால், எண்ணும் (இலக்கணம்) எழுத்துமே அழியா வனப்புடையவை என்கிறது ஏலாதி. கீழ்கண்ட பாடல் இந்தக் கருத்துகளைத் தருகிறது.
இடை வனப்பும், தோள் வனப்பும் ஈடில் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும் } புடைசால்
கழுத்தின் வனப்பும், வனப்பல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு. (ஏலாதி 74)
ஒருவர் இந்தப் பிறவியில் கல்வியைக் கற்றுக்கொண்டால் அஃது ஏழு தலைமுறை(பிறவி)க்கும் அவரது இனத்துக்குப் பாதுகாப்பை வழங்கும் (398) என்பது வள்ளுவப் பேராசான் வாய்மொழி.
வயிற்றுக்கெனத் தேடி வைக்கும் உணவுப் பொருள்களும், வாழ்க்கைக்கெனத் திரட்டிவைக்கும் பொன்னும் மணியும் முதலான மற்றப் பொருள்களும் அழியும் தன்மையன.
மெய்ப்பொருளும் அழியாப் பொருளும் உயர்வுடைய விழுமிய பொருளும் நம்மை நல்வழியில் உய்க்கும்பொருளும் கல்வியொன்றே (26) என்கிறது சரசுவதி அந்தாதி.
எம்மை உலகத்தும் யாம்காணேம், கல்விபோல்
மம்மர் (துன்பம்) அறுக்கும் மருந்து (132)
என்ற நாலடியார் கருத்தை நெஞ்சிலே நிறுத்துவோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.