செய்ந்நன்றி மறவாத சிந்தனை
ஒருவர் செய்த நன்றியை மறவாமை, மனிதநேயத்தின் சிறந்த அடையாளம் அது.
ஒருவர் செய்த நன்றியை மறவாமை, மனிதநேயத்தின் சிறந்த அடையாளம் அது. மனித இனத்தின் மாசற்ற பண்பு. உதவி செய்தாரை உணர்ந்துகொண்டு போற்றுவதற்கான நற்செயல். திருவள்ளுவர் நன்றி என்ற சொல்லால் இதை நயனுறக் குறிக்கின்றார்.
செய்ந்நன்றியுடன் தொடர்புடையது ஒப்புரவு. அடுத்தவரை உண்மை நட்பாக்குவது செய்ந்நன்றி. உலக அன்பை உருவாக்குவது ஒப்புரவு. செய்ந்நன்றி அடுத்தவரின் தாகம் தீர்ப்பதற்குத் தண்ணீர் தருவது போன்றது. ஒப்புரவு, ஊருணி நீர் போல்வது. ஒருவர் மற்றவர்க்குச் செய்த உதவி செய்ந்நன்றி. தனிமனிதன் ஊரிலுள்ளோருக்கு செய்யும் உதவி ஒப்புரவு.
செய்ந்நன்றி திருவள்ளுவரால் பலவாறாகக் குறிக்கப்படுகிறது. செய்யாமல் செய்த உதவி, தினைத்துணை நன்றி, பயன் தூக்கார் செய்த உதவி எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இன்றைய உலகில் செய்ந்நன்றி என்ற பண்பு சுருங்கிவருகிறது. பிறர் செய்த உதவி மறக்கப்படுகிறது. உதவி பெற்று உயர்ந்தோர் தம்மை உயர்த்திக்கொண்ட பிறகு, அதற்குக் காரணமாக இருந்தோரை நினைப்பதில்லை. ஒருவர் செய்த உதவியை எண்ணிப்பார்க்கத் தவறி விடுகின்றனர். "நன்றி மறப்பது நன்றன்று' என்பது வள்ளுவர் வாய்மொழி.
ஒருவர் செய்யாமல் செய்த உதவிக்கு மண்ணையும் விண்ணையும் கொடுத்தாலும் ஈடாகாது என்றால் செய்ந்நன்றியின் ஆற்றல் மிகப்பெரிதல்லவா! தக்க சமயத்தில் செய்த உதவி சிறிதெனினும், அதன் சிறப்பை அளவிட்டுக் கூற முடியாது. அது உலகத்தினும் மிகப் பெரிது. இதனை ஞாலத்தின் மாணப்பெரிது என்பர் வள்ளுவனார்.
துன்பம் சூழ்ந்தபோது அதிலிருந்து மீட்கும் வகையில் ஒருவர் செய்யும் உதவி காலம் அறிந்து செய்யப்படும் உதவியல்லவா!
இராமன் தந்த கணையாழியை அனுமன் தந்தபோது, சீதை,
மும்மையால் உலகம் தந்த
முதல்வற்கு முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர்தந் தாய்க்குச்
செயல் என்னால் எளியது உண்டோ!
எனக் கூறுகிறாள். தான் உயிர்விட இருந்தபோது, தூதாக வந்து தன் உயிரைத் தக்க சமயத்தில் காத்தவன் அனுமன் என்று சொல்லி அவன் செய்த நன்றியைப் போற்றுகிறாள் சீதை. இன்னல் சூழ் இலங்கையில் இடர்ப்பட்டிருந்த சீதைக்கு அனுமன் செய்த உதவி ஞாலத்தின் மாணப்பெரிதல்லவா!
குறளாசான் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில் நட்புக்கு மதிப்புக் கொடுத்துக் கூறியுள்ளார். துன்பத்தில் துணையிருப்பவரின் நட்பை மறவாதே என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர். துன்பக் கண்ணீரைத் துடைத்தவர், அந்நட்பினை எழுபிறப்புகளிலும் எண்ணுவர் என்கிறார்.
நன்மையே செய்துவருபவன் தீமையே புரியினும் அதை மறந்து விடுக என்று கூறுவது சற்றே இடர்ப்பாடாகத் தோன்றும். அது இயலுமா என்று சிந்திக்கவும் தூண்டும். அதேபோல, கொன்றுவிடுவது போன்ற தீமையை ஒருவன் செய்யமுயன்றாலும், அவன் செய்த நன்மையை நினைத்த அளவில் தீமை கெடும் என்கிறார். இவ்விரண்டு கருத்துக்களையும் இன்றைய நிலையில் ஏற்புடைத்தாகுமா என்ற கேள்வி எழும். பக்குவப்பட்ட மனம் உடையார்க்கே அது இயலும்.
ஒருவன் செய்த நன்றியை மறந்த ஒருவனுக்கு உய்தி கிடையாது என்பதை ஆழமாகச் சிந்திக்கிறார். நன்றி கொன்றவனுக்கு உய்தி இல்லை என்பது அவர்கண்ட முடிவு. "செய்தி கொன்றோர்க்கு உறுதி இல்லை' என்பது புறநானூறு. நன்றி மறத்தல் பெருங்குற்றமல்லவா!
கர்ணன் கொடைத்திறத்தில் சிறந்தவன். துரியோதனன் அவனிடம் வைத்திருந்த நட்பு ஆழம் அளப்பரிது. துரியோதனன் தனக்குச் செய்த செய்ந் நன்றியை மறந்தால் திருமகளும் தன்னைத் தீண்ட மாட்டாள் என்று நினைப்பவன்,
ஈண்டு அவன் செய்த உதவி யினைநான்
மறந்தால் தீண்டுவளோ தாமரையாள்
என்கிறான்.
கும்பகருணன் தன் உடன் பிறப்பான இராவணன் செய்த நன்றியை நினைத்துக் கொண்டே மரணத்தைத் தழுவுகிறான். அவன் இறப்பும் கூடப் புகழ்க்குரிய இறப்பாகிறது. தன்னை வளர்த்தவனும், தனக்கு வாழ்நாள்வரை சோறிட்டவனுமாகிய இராவணனின் மனநிலையை எண்ணுகிறான். அவனுக்காக } செஞ்சோற்றுக் கடனுக்காக அவன் உயிரைவிடவும் துணிகிறான்.
நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்
வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர்க்கொடாது
அங்குப் போகேன்
என்று தன் உள்ளத்துறுதியைச் செய்ந்நன்றி மறவாத சிந்தனையை விபீடணனிடம் செப்புகிறான். புலையுறு மரணமே தனக்குப்புகழ் தரத்தக்கது. அது செய்ந்நன்றியால் வந்த புகழ். செஞ்சோற்றுக் கடன் கழித்தலால் வந்த புகழ். அது அழிவில்லாதது. புகழுக்கு அழிவேது!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.